வாஜன், ஒரு பறவை வேட்டைக்காரன். ஏழை என்றாலும் அவன் ஆசை பெரியது. இந்தோனேசிய மன்னர் இஷாக்கின் அழகான மகளை மணக்க விரும்பினான்.
மன்னர் இஷாக் திறமையான வில்வித்தைக்காரர். இளவரசியைத் தலைச்சிறந்த வில்வித்தைக்காரனுக்கே மணமுடித்துத் தரப்போவதாக அறிவித்தார்.
வாஜனுக்கோ வில்வித்தையைப் பற்றி எதுவுமே தெரியாது. ஆனால், அவன் ஒரு திட்டம் தீட்டினான். பறவைகள் சிலவற்றைப் பிடித்த வாஜன், அவற்றின் வலது கண்ணை மட்டும் தோண்டி எடுத்தான். பிறகு அரண்மனைக் கதவுகள் அருகே நின்று அவற்றை விற்கத் தொடங்கினான்.
அவனைச் சுற்றிக் கூட்டம் கூடியது. அரசர், விசாரிக்கச் சொன்னார்.
வேலையாள், வாஜன் என்பவன் ஒரே ஒரு கண் மட்டுமுள்ள பறவைகளை விற்பதாகத் தெரிவித்தான்.
அரசர் வாஜனை அழைத்து வரச் சொன்னார். அவனிடம், “எப்படி உன் பறவைகளுக்கு ஒரே ஒரு கண் மட்டும் உள்ளது?” என்றார்.
வாஜன், “அரசே, நான் எப்போதுமே பறவைகளை வலது கண்ணில் மட்டுமே அம்பெய்து கொல்வேன்” என்று பதிலளித்தான்.
வியந்துபோன அரசர், வாஜனுக்கே தன் மகளை மணமுடிக்க முடிவு செய்தார்.
வாஜன், தான் ஏழை என்றும், ராஜாவின் மகளை வைத்துக் காப்பாற்ற வசதியில்லை என்றும் கூறினான்.
அவனது நேர்மையைப் பாராட்டிய அரசர், வாஜன் தன் அரண்மனையிலேயே வசிக்கலாமென்றும் கூறினார்.
இளவரசிக்கும் வாஜனைப் பிடித்துப் போனது. சில வாரங்கள் கழித்து இருவருக்கும் திருமணம் நடந்தது.
பெரிய வில்வித்தைக்காரன் தனக்கு மருமகனாகக் கிடைத்திருக்கிறான் என்ற பெருமையோடு, வாஜனை திருமண விழாவில் திரண்டிருந்த மக்கள் முன் அவன் திறமையை நிரூபித்துக் காட்டச் சொன்னார் அரசர்.
அரசர் தன் வில் அம்புகளை எடுத்துக் கொடுத்தான்.
வாஜன் பயத்தில் நடுங்கினான். வில், அம்புகளை எப்படிப் பிடிப்பது என்றுகூட அவனுக்குத் தெரியாது. வில்லையும் அம்பையும் கையில் பிடித்துக்கொண்டு வெகுநேரம் சும்மா நின்றான்.
விருந்தினர்கள் பொறுமையிழந்தனர்.
சிலர் வாஜனை ஏமாற்றுக்காரன் என்று சந்தேகிக்கத் தொடங்கினர்.
பொறுமையிழந்த விருந்தினர் ஒருவர், சீக்கிரம் அம்பெய்யச் சொல்லி வாஜன் முதுகில் தட்டினார். அப்போது அது வாஜனின் கைகள் அசைந்ததால் அம்பு, வில்லில் இருந்து புறப்பட்டு காற்றில் பறந்தது. சரியாக அந்த நேரத்தில் ஒரு கொக்கு பறந்து வந்தது. அம்பு அதனைக் குத்த, கொக்கு கீழே விழுந்து இறந்தது.
அரசர் விரைந்து சென்று, இறந்த பறவையைத் தூக்கினார். வாஜனின் அம்பு கொக்கின் மெல்லிய கழுத்தில் குத்தி இருப்பதாகவும் அதன் மூலமே வாஜனின் திறமை தெரிகிறது என்றும் பாராட்டினார். அதனை அனைவரும் ஏற்று வாஜனைப் பாராட்டினார்கள்.
ஆனால் வாஜனோ கோபமாக இருப்பதுபோல் நடித்தான்.
அரசே! எப்போதும் நான் பறவைகளின் வலது கண்ணில் மட்டுமே அம்பெய்வேன். ஆனால், விருந்தினர் என் கையைத் தட்டியதால் குறி தவறி பறவையின் கழுத்தில் பட்டது. என் கொள்கையே பாழாகிவிட்டது. இனி நான் வில்லையே தொட மாட்டேன் என்று சபதம் செய்தான்.
அதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று. சில நாட்களில் வாஜன் அரசனானான். வெகு காலத்துக்கு அவனை, மிகச் சிறந்த வில்வித்தைக்காரன்” என்று மக்கள் பேசிக் கொண்டனர்.