செத்துப்போன ஒருவன் நரகத்துக்கு அனுப்பப்பட்டான். நரகத்தில் மூன்றுவிதமான தண்டனை முறைகள் இருந்தன. மூன்றையும் பார்த்துவிட்டு எந்தத் தண்டனையை ஏற்றுக்கொள்வதென்று அவனே முடிவு செய்துகொள்ளலாம் என்று சொல்லப்பட்டது.
முதலாவது அறைக்குப் போனவன், அங்கே எல்லோரும் தலைகீழாக நின்று கொண்டிருந்ததைப் பார்த்தான். ஒவ்வொருவர் முகத்திலும் வலியின் அவஸ்தை தெரிந்தது.
“இது வேண்டாம்” என்று அடுத்த அறைக்குப் போனான்.
அங்கே... எல்லோரும் தலையில் பனிக்கட்டிகளைச் சுமந்தபடி இருந்தார்கள். பனிக்கட்டிகள் உருகி வழிந்துகொண்டிருக்க, அந்தக் குளிர்ச்சியில் ஜில்லிட்டு நடுங்கிக் கொண்டிருந்தார்கள்.
ஒரு நிமிடம் அந்த வேதனையை எண்ணிப் பார்த்தவன், “ஐயோ... இது வேண்டாம்” என்று அடுத்த அறைக்குத் தாவினான்.
மூன்றாவது அறையில் ஆச்சரியம்! அங்கிருந்தவர்கள் எந்தப் பரபரப்புமில்லாமல் காபி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.
'ஆஹா.. இதுதான் நான் தேடிவந்த இடம். இங்கேயே நான் இருந்துவிடுகிறேன்' என்று தன் முடிவையும் சொல்லிவிட்டான்.
'நீங்கள் போய் இந்தக் குழுவில் சேர்ந்து கொள்ளலாம்' என்று அனுமதி தரப்பட்டது.
உள்ளே போய் ஒரு கப் காபி வாங்கிச் சுவைக்க கையிலெடுத்ததும் அங்கே ஒரு எஜமானரின் குரல்...
''ஓகே.! உங்களது காபி இடை வேளை முடிந்துவிட்டது. எல்லோரும் அந்த தீச்சட்டியை எடுத்துத் தலையில் வைத்துக் கொள்ளுங்கள்!''