ஒரு நாள் வழக்கம்போல ஒருவன் ஜாகிங் செய்து கொண்டிருந்த போது, அவனுக்கு முன்னால் சற்றுத் தொலைவில் ஒருவர் ஜாகிங் பண்ணிக் கொண்டு போய் கொண்டிருந்ததைப் பார்த்தான். அவர் கொஞ்சம் மெதுவாக ஓடிக் கொண்டிருந்தது போல் தோன்றியது.
சட்டென்று அவன் மனதில் ஒரு எண்ணம், அவரை முந்திக் கொண்டு ஓடவேண்டும் என்று ஒரு உந்துதல். அவன் வீட்டுக்குப் போவதற்கு இன்னும் நான்கு ஐந்து தெருக்கள் தாண்ட வேண்டும். அதற்குள் அவரைப் பிடித்து விடலாம் என்று நினைத்து வேகமாக ஓட ஆரம்பித்தான்.
அவரை நெருங்கிய போது, அவரை முந்துவதற்கு இன்னும் சில நூறு அடிகளே இருந்ததால், அவன் வேகத்தை சட்டென்று கூட்டினான். அப்போது அவனைப் பார்ப்பவர்கள் அவன் ஏதோ ஒலிம்பிக்ஸ் பந்தயத்தில் கலந்து கொள்ளப் பயிற்சி மேற்கொண்டிருக்கிறானோ என்று நினைப்பார்கள். அவரைப் பிடித்து விட வேண்டும் என்ற முடிவுடன் ஓடி… ஓடி… அவரைப் பிடித்தே விட்டான்.
அவனுக்குள் ஒரு பெருமிதம், “அப்பாடி, முந்தி விட்டேன்!” என்றான்.
அதன் பின்னர், பின்னால் திரும்பிப் பார்த்தான் அவன். அவர் போக்கில் அவர் வந்து கொண்டிருந்தார். அவருக்கு அவன் அவருடன் போட்டி போட்டதே தெரியாது.
அவனுடைய சந்தோஷம் சற்று அடங்கிய பின் தான், அவன் பாதையைத் தவற விட்டு விட்டதை உணர்ந்தான். அவரைத் தோற்கடிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் ஓடிய அவன், திரும்ப வேண்டிய தெருவை விட்டு விட்டு ஆறு தெருக்கள் தாண்டி வந்து விட்டிருந்தான். இனி அவன், வந்த வழியேத் திரும்பி, அத்தனை தூரத்தையும் கடந்துதான் வீட்டிற்கு போக வேண்டும்.
இப்படித்தான் சிலர், அடுத்தவர்களுடன் தேவையில்லாமல் போட்டியிட்டு தங்கள் வாழ்க்கையில் திரும்பிப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.