ஒரு ஊரில் அஜய் என்றொரு இளைஞன் தன் நிலத்தில் விவசாயம் செய்து வந்தான்.
ஒரு நாள் மாலைப் பொழுதில் அரசரின் அரண்மனையிலிருந்து ஒரு தூதன், அரசரின் கனவுகளுக்கு விளக்கம் கொடுப்பவருக்கு நூறு பொற்காசுகள் பரிசாக வழங்கப்படும் என விளம்பரம் செய்தபடி சென்றான்.
ஒரு குள்ளநரி அரசரின் மடிமேல் குதித்து உட்காரத் தயாராகுவது போன்ற ஒரு கனவு.
“எனக்கு மட்டும் இதற்கு அர்த்தம் தெரிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்” என எண்ணியபடி அஜய் நடந்து கொண்டிருந்தான்.
அப்பொழுது அங்கிருந்த ஒரு பறவை, “எனக்கு இதற்குப் பதில் தெரியும்; கிடைக்கும் சன்மானத்தில் பாதி தருவதாக இருந்தால் உதவுகிறேன்” என்றது.
அஜய் சம்மதித்தான். “குள்ளநரி நம்பிக்கை துரோகத்தின் அடையாளம். ஆதலால் அரசர் கவனமாக இருக்க வேண்டும்” எனப் பறவை கூறியது.
அஜய் அரச சபையில் இப்பதிலைக் கூறிப் பரிசு பெற்று வந்தான்.
கிடைத்த பரிசின் பாதியை பறவைக்கு கொடுக்க மனசில்லாமல் வேறு வழியாக வீட்டை அடைந்தான். கிடைத்தப் பணத்தை வங்கியில் முதலீடு செய்து பணக்காரனாக ஆனான்.
ஐந்து வருடங்கள் கழிந்த பின் அரசரின் படைத்தலைவர் அஜயின் வீட்டிற்கு வந்து அவனை வெளியே அழைத்தார்.
அவனிடம், “அரசர் மறுபடியும் ஒரு கனவு கண்டார். அக்கனவில் ரத்தம் தோய்ந்த ஒரு பெரிய கத்தி அரசரின் தலையைச் சுற்றி வந்தது. அதன் விளக்கம் என்ன?” என அறிய விரும்பினார்.
அஜய் பயந்தபடி பழைய ஆலமரத்தடிக்குச் சென்று பறவையைத் தேடினான்.
தெரிந்த ஒரு குரல் மறுபடியும், “விளக்கம் கூறினால் பாதிப் பரிசை எனக்கு அளிக்க வேண்டும்” என்றது. இம்முறையும் அஜய் வாக்களித்தான்.
“கத்தி வன்முறையின் அறிகுறி, ஆதலால் அரசர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்” எனப் பறவை விளக்கியதை அரசரிடம் கூறி மீண்டும் பரிசைப் பெற்றான்.
இம்முறையும் பணத்தைப் பறவைக்குக் கொடுக்க மனமில்லாமல் அஜய் வீட்டுக்குச் சென்றான்.
செல்லும் வழியில் ஒரு வேளை பறவை அரசரிடம் தன்னைப் பற்றி புகார் செய்து விடுமோ என எண்ணி ஒரு கல்லை எடுத்துப் பறவை மீது வீசினான். பறவை காயம் ஏற்படாமல் தப்பியது.
சில வருடங்களுக்குப் பிறகு அஜய் நடந்ததை எல்லாம் மறந்து விட்டான்.
அரசருக்கு மறுபடியும் ஒரு கனவு.
இம்முறை ஒரு வெள்ளைப் புறா தன் மடி மீது அமர்ந்தவாறு ஒரு காட்சி.
மீண்டும் அந்தப் பறவையைத் தேடிச் சென்றான் அஜய்.
“அமைதியின் அறிகுறிதான் அந்த கனவின் விளக்கம்” என்று மிக அழகாக பறவை கூறிற்று. அரசரிடம் கூறிப் பத்தாயிரம் பொற்காசுகள் சன்மானமாக அஜய் பெற்றான்.
இம்முறை அஜய் கிடைத்த மொத்த சன்மானத்தையும் பறவையிடம் கொடுக்கச் சென்றான்.
அப்பொழுது பறவையின் தோற்றமே மாறிவிட்டது. அந்தப் பணமும் அதற்குத் தேவையில்லை எனச் சொன்னது.
அஜய் பறவையிடம் மன்னிப்பு கேட்டான். அதற்கு அந்தப் பறவை தெய்வீக உணர்ச்சியுடன் பதிலளித்தது.
“சற்று யோசித்து பார். முதலில் நம்பிக்கை துரோகம் என்ற எண்ணம் பரவிக் கொண்டிருந்ததால் உன் நடவடிக்கை அப்படி இருந்தது. பிறகு வன்முறையைப் பற்றி நினைத்து செயல்பட்டதால் என்னைக் கொலை செய்ய முயற்சி செய்தாய். இப்போது நம்பிக்கையும், சமாதானமும் இருப்பதால் நீ இவ்வாறு நடந்து கொள்கிறாய். சூழ்நிலைக்கு ஏற்ப எண்ணங்களும் மாறுகின்றன. ஒரு சிலரால் தான் மனசாட்சிக்கு ஏற்ப நடந்து கொள்ள முடிகின்றது”