ஒரு காட்டிலேஒரு யானை இருந்தது. அந்தப் பெரிய யானை, தும்பிக்கையும் தந்தமுமாக காட்டுக்குள் அலைந்து கொண்டிருந்தது.
அந்த காட்டிலே இருக்கும் ஒரு பூரான் பார்த்தது.
அப்போது, அந்த யானை பிளிறியது. அந்த சத்தம் காடு முழுக்கக் கேட்டது.
அதைக் கேட்ட பூரான் ‘அய்யோ, நான் என்றைக்கு யானை மாதிரி காடு முழுக்கக் கேட்கிற மாதிரி கத்தப் போகிறேன்?’ என்று நினைத்தது.
சரி, இந்த யானையைக் கடித்து வைக்கலாம். அது கத்தும், சத்தத்தைக் கேட்பவர்கள், யானை ஏன் இப்படிக் கத்துகிறது? என்று கேட்டால், அப்போது நம்மைப் பற்றியும் நாலுபேருக்கு தெரியும் என்று நினைத்தது.
அந்தப் பக்கமாக, யானை வந்த போது பூரான் நறுக் என்று கடித்தது.
பூரான் கடித்தது அந்த யானைக்குச் சிறிது கூட வலிக்கவில்லை. அது யானைக்குச் சிறிது அரிப்பு எடுத்தது போலிருந்தது. உடனே, அந்த இடத்தில் தும்பிக்கையால் சிறிது சொறிந்துகொண்டு கிளம்பி விட்டது.
ஆனாலும், பூரான் அந்த யானையை விடவில்லை. அடிக்கடித் தேடிதேடிப் போய் மீண்டும் மீண்டும் கடித்தது.
பூரான் கடிக்கக் கடிக்க யானைக்கு அந்த சொறியும் சுகம் ரொம்பப் பிடித்துப் போய்விட்டது.
அதனால் யானைக்குப் பொழுது போகாத நேரங்களில், அதுவே பூரானிடம் வந்து காலைக் காட்டி கடி வாங்கி சொறிந்து மகிழ ஆரம்பித்தது.
பூரானுக்கும் சந்தோஷம் இவ்வளவு பெரிய யானையே நம்மைத் தேடிவருதே என்று...
யானைக்குப் பூரான் மூலம் காலில் கடிபடுவது அலுத்துப் போய் விட்டது. பின்னர் அது, தனது முதுகு, தும்பிக்கை என்று பல இடங்களில் பூரானைப் பிடித்து விட்டுக் கடிவாங்கும் வழக்கத்தைச் செய்து வந்தது. பூரானைத் தன்னுடனேயே வைத்துக் கொண்டது.
இப்படியேச் சில நாட்கள் போனது.
ஒரு நாள் அந்த யானையின் நண்பர்கள், அதனிடம் ஏன் இப்படி பூரானை உன்னுடனேயே வைத்துக் கொண்டிருக்கிறாய்? என்று கேட்டன.
அதற்கு அந்த யானை, “எனக்குப் பொழுது போகாத நேரங்களில், இந்தப் பூரானை என்னுடம்பில் பல இடங்களில் சொறிவதற்காக வைத்திருக்கிறேன்” என்றது.
பாவம், அந்தப் பூரான் இப்போது அதற்குக் கடித்துக் கடித்து வாய்தான் வலிக்கிறதாம்.