நடைபாதையில் ஒரு இளைஞன் கையில் ஒரு பாட்டிலை வைத்துக் கொண்டு, “இது சுறுசுறுப்பு டானிக்… காலையில் ஒரு கரண்டி… மாலையில் ஒரு கரண்டி சாப்பிட்டால் போதும்… அன்றைய நாள் முழுவதும் சுறுசுறுப்பு கிடைக்கும்!” என்று சொல்லி விற்றுக் கொண்டிருந்தான்.
நிறைய பேர் வந்தார்கள். வாங்கினார்கள், வீட்டிற்குக் கொண்டு போய் சாப்பிட்டார்கள்…
வாங்கிச் சென்றவர்களெல்லாம், அந்த டானிக் சுறுசுறுப்பாகத்தான் இருக்கிறது. கொடுத்த காசு வீண் போகவில்லை என்று சொல்லிக் கொண்டனர்.
அந்த டானிக் தீர்ந்ததும், அவர்கள் அந்த இளம் வியாபாரியைத் தேடினார்கள்.
அவன் கிடைக்கவில்லை.
இரண்டு ஆண்டுகள் கழித்து… அதே வியாபாரி பலூன் விற்றுக் கொண்டிருந்தான்.
“அடடா, உங்களை எங்கேயெல்லாம் தேடுவது… அந்த சுறுசுறுப்பு டானிக் இன்னும் தேவை… இதுநாள் வரை எங்கே சென்றிருந்தீர்கள்...?” என்று அவனிடம் கேட்டனர்.
அதற்கு அவன், “ நான் இரண்டு ஆண்டுகளாகச் சிறையிலே இருந்தேன்” என்றான்.
அவர்கள் அவனிடம், “சிறைக்குச் செல்லும்படி என்ன தவறு செய்தாய்?” என்று கேட்டனர்.
அவன், “சுறுசுறுப்பு டானிக் என்ற பெயரில் போலியாக மருந்து தயாரித்து விற்பனை செய்ததற்காகத்தான் எனக்கு இரண்டு வருடம் சிறைத் தண்டனை கிடைத்தது” என்றான்.
அவர்கள், “உங்க மருந்து போலி மருந்து என்று யார் சொன்னது? நீங்க கொடுத்த டானிக்கைச் சாப்பிட்டுத்தான் நாங்களெல்லாம் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கினோம்” என்றனர்.
அவன், “நீங்கள் சொல்வது போல், அது உண்மையான டானிக் இல்லை. நான் வெறும் தண்ணீரில் உப்பு, மிளகு, சீரகம், வெந்தயத்தைப் பொடி பண்ணி கலந்து சுறுசுறுப்பு டானிக் என்று சொல்லி விற்றேன்” என்றான்.
“நீ கொடுத்த டானிக்கைச் சாப்பிட்ட எங்களுக்கு சுறுசுறுப்பு கிடைத்ததே…?” என்றனர் அவர்கள்.
“அது உங்கள் நம்பிக்கை. நம்பிக்கை தான் வாழ்க்கையின் உந்து சக்தி. அதுவே உங்களுக்குச் சுறுசுறுப்பைத் தந்தது. நான் கொடுத்த டானிக் இல்லை” என்றான் அவன்.