முன்னொரு காலத்தில் மிகவும் நேர்மையான அரசன் ஒருவன், தன் மகனைக் கல்வி கற்பதற்காக குருவிடம் அனுப்பி வைத்தான்.
அந்த ஆசிரியரிடம் நிறைய மாணவர்கள் படித்து வந்தனர்.
புதிதாக வந்த இளவரசனோ தான் அரசனின் மகன் என்று தற்பெருமை கொண்டிருந்தான்.
ஆசிரியர் தனக்குக் கட்டுப்பட்டவர் என்று நினைத்தான்.
ஆசிரியர் பாடம் நடத்தும் போது, அவன் சரியாகக் கவனிப்பது இல்லை, ஆசிரியரை மதிப்பதில்லை, மிகவும் திமிர்த்தனமாக நடந்தான்.
தன் மகன் ஆசிரியரிடம் எப்படி நடந்து கொள்கிறான் என்பதை அறிந்தான் அரசன்.
மகனிடம் ஓர் ஓலையைத் தந்து, “இதை உன் ஆசிரியரிடம் கொடு” என்றான்.
அப்படியே அந்த ஓலையை ஆசிரியரிடம் தந்தான் இளவரசன்.
“மாணவனிடம் கண்டிப்பு காட்டாத ஆசிரியர், மகனுக்குச் சலுகை தரும் தந்தை இருவருமே மோசமானவர்கள். அந்த நிலை நம் இருவருக்கும் வேண்டாம். மற்ற மாணவர்களிடம் எவ்வளவு கண்டிப்பு காட்டுவீரோ அதே கண்டிப்பை என் மகனிடமும் காட்டுங்கள். இளவரசன் என்று எந்தச் சலுகையும் அவனுக்குத் தர வேண்டாம். நீங்கள் அவனுக்கு எந்தத் தண்டனை தந்தாலும் எனக்கு மகிழ்ச்சிதான். அவன் எதிர்காலம்தான் எனக்கு இன்றியமையாதது. நிகழ்காலத்தில் அவன் படும் துன்பங்கள் அல்ல” என்று எழுதி இருந்தது.
இளவரசனிடம் அந்த ஓலையைப் படிக்கத் தந்தார் ஆசிரியர்.
படித்த அவன், “இனி அங்கே தனக்குச் சலுகைகள் கிடைக்காது. ஏதேனும் தவறு செய்தால், மற்ற மாணவர்கள் முன்னிலையில் அவமானப்பட நேரிடும். தந்தையும் உதவிக்கு வரமாட்டார்” என்பதைப் புரிந்து கொண்டான்.
அன்றிலிருந்து ஆசிரியரிடம் பணிவாக நடக்கத் தொடங்கினான். பாடங்களை ஆர்வமுடன் கற்கத் தொடங்கினான்.
தன் மகன் திருந்தியதை அறிந்த அரசன் மகிழ்ச்சி அடைந்தான்.