புத்தரிடம் நிறையப் பேர் வந்து கேள்விகள் கேட்பார்கள். அவர் ஒருபோதும் தன்னுடைய போதனையை எழுதச் செய்தது இல்லை.
ஒருமுறை, காலை நேரத்தில் ஒருவர் அவரிடம் வந்து, ‘கடவுள் இருக்கிறார் அல்லவா?’ என்று கேட்டார்.
‘இல்லை’ என்றார் புத்தர்.
மதியம் ஒருவர் வந்து கேட்டார்: ”கடவுள் இல்லைதானே?’
‘இருக்கிறார்’ என்று பதில் சொன்னார்.
மாலையில் ஒருவர் வந்து, ‘கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை!’ என்றார்.
உடனே புத்தர், ‘நீ சரியான கேள்வியைக் கேட்கிறாய்’ என்றார்.
புத்தருக்கு அருகிலேயே இருந்த அவருடைய ஒன்றுவிட்ட சகோதரர், இந்தப் பதில்களால் குழம்பினார்.
இரவில் புத்தரிடம் அவர், ”நீங்கள் ஒரே கேள்விக்கு மூன்று விதமான பதில்களைச் சொன்னீர்களே… ஏன்?’ என்று கேட்டார்.
‘கேள்வி கேட்டவர்களுக்கு ஏற்றவாறு என் பதில் இருந்தது’ என்றார் புத்தர்.
‘ஆனால், மூன்று கேள்விகளின்போதும் நான் இருந்தேனே, அவற்றைக் கேட்டு எனக்குக் குழப்பம் அல்லவா ஏற்பட்டுவிட்டது’ என்றார் அந்தச் சகோதரர்.
‘காலையில் வந்தவர், ‘கடவுள் இருக்கிறார்’ என்று ஏற்கெனவே முடிவு செய்துகொண்டு வந்து, என்னிடம் அந்தக் கேள்வியைக் கேட்டார். எனவே ‘இல்லை’ என்று பதில் சொன்னேன். அதனால் அவர் சுயமாகத் தேடத் தொடங்குவார். மதியம் வந்தவர், ‘கடவுள் இல்லை’ என்று முடிவுசெய்துவிட்டு, என்னிடம் வந்து கேட்டார். அவரிடம் ‘இருக்கிறார்’ என்று சொன்னால்தான் தானாகத் தேடலைத் தொடங்குவார். மூன்றாம் நபரோ, ஏற்கெனவே தேடிக் கொண்டிருக்கிறார். எனவே, அவர் பார்வை சரியானது என்று விளக்கினேன். கேள்விகளுக்கு நான் பதில் அளிப்பதில்லை. கேள்வி கேட்பவர்களைப் பொறுத்தே பதில் அளிக்கிறேன்” என்று விளக்கினார் புத்தர்.