வாழ்க்கையில் வெற்றியைத் தருவது எது?

குருகுலம் என்ற கல்விமுறை இருந்தபோது, மாணவர்களின் தன்மைக்கு ஏற்ப கல்வி போதிக்கப் படும். எல்லோருக்கும் ஒரே பாடத் திட்டம் இல்லை. அவரவரது ஆர்வம், திறமை, தகுதி, சாத்தியக்கூறுகள் போன்றவற்றை குரு ஆராய்ந்து, அவற்றுக்கேற்ப கல்வி போதிப்பார். ஒரே மாதிரியான மாணவர்களை உருவாக்குவதில் அன்றைய குருமார்களுக்கு உடன்பாடு இல்லை.
தேர்வில் சரியாகக் கணக்குப் போடத் தெரிந்தவர்கள் எல்லாம் வாழ்க்கையில் வெல்லுவார்கள் என்று சொல்ல முடியாது. இதற்கு யூத உருவகக்கதை ஒன்று உண்டு.
மோ என்கிற மாணவன் மோசமான படிப்பாளி. அவனுடைய உறவினர் டேனியோ வகுப்பில் எல்லாவற்றிலும் முதல் மதிப்பெண். படிப்பை முடித்ததும், மோ தொட்டதெல்லாம் பொன்னானது. டேனியோ சுமாரான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தான்.
ஒருமுறை, மோ வாங்கிய லாட்டரிச் சீட்டுக்கு முதல் பரிசு கிடைத்தது. அதற்கு மேலும் டேனியால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
அவன் மோவிடம் சென்று, ‘இம்முறை நீ எப்படி வென்றாய்?’ என்று கேட்டான்.
‘சொல்கிறேன். நான் லாட்டரிச் சீட்டு வாங்கு வதற்கு முதல் நாள் இரவு ஒரு கனவு கண்டேன். அதில் தேவதைகள் கூட்டமாக இனிய பாடல் ஒன்றைப் பாடினர். ஏழு வரிசைகளில் எட்டு தேவதைகள். அதன் பிறகு நான் சற்றும் யோசிக்கவில்லை. அடுத்த நாள் கடைக்குச் சென்றேன். ஏழையும் எட்டையும் பெருக்கி, 63 என்கிற எண்ணில் முடிகிற பரிசுச்சீட்டை வாங்கிவிட்டேன். முதல் பரிசும் பெற்றுவிட்டேன்’ என்றான் மோ.
‘முட்டாளே! ஏழையும் எட்டையும் பெருக்கினால் 63 எப்படி வரும்? 56 அல்லவா வரும்?’ என்றான் டேனி.
‘அடடே, அப்படியா! சரி, டேனி. இன்னமும் நான் கணக்கில் பின்தங்கித்தான் இருக்கிறேன். உனக்குத்தான் கணக்கில் எல்லாம் தெரிகிறது’ என்று சிரித்தான் மோ.
சரியாகக் கணக்குப் போடுவது வாழ்க்கையில் வெற்றிகளைத் தருவதில்லை; தயாரித்த விடைகளும் பயனளிப்பதில்லை.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.