பகவான் ராமச்சந்திர மூர்த்தி இலங்கை செல்ல சுக்ரீவன் தலைமையில், வானரப் படைகளின் உதவியோடு கடலில் பாலம் அமைக்கிறார்.
வானரப் படைகள் கல், பாறை, மரம், மலை என்று பெயர்த்துக் கடலில் போடுகின்றனர். ஆனால் எத்தனை போட்டாலும், கடலின் ஆழத்தால் அது அத்தனையும் முழ்கி விடுகிறது.
துவண்டு போன சுக்ரீவன் பகவானிடம் வந்து, கடலின் ஆழம் மிகவும் அதிகமாக உள்ளது. பாலம் கட்டி முடிக்க எங்கள் சக்த்தியால் முடியாது போலிருக்கிறது... என்ன செய்வது? என்று வணங்கிக் கேட்டார்.
அதற்கு ராமச்சந்திர மூர்த்தி, அங்கு விளையாடிக் கொண்டிருந்த நலன், நீலன் என்ற இரண்டு குட்டிக் குரங்குகளைக் காட்டி, கடலில் போடும் ஒவ்வொன்றையும், அவர்களைத் தொட செய்து போடுங்கள் என்று கூற, அப்படியேச் சுக்ரீவன் செய்தான்.
என்ன ஆச்சர்யம்...! இப்போது கடலில் போட்ட பாறைகளும், மலைகளும் மிதக்க ஆரம்பித்தன.
அனுமனுக்கு ஒரே ஆச்சர்யம். அவர் பகவான் ராமச்சந்திரமூர்த்தியை வணங்கி, அந்தச் சிறுவர்கள் தொட்டுக் கொடுத்தால் மட்டும் எப்படி எல்லாம் மிதக்கிறது? என்ன காரணம்? என்று கேட்டார்.
“அனுமா... ஒரு முனிவர் அத்தி மரத்தின் அடியில் கடும் தவம் செய்து கொண்டிருந்தார். அந்தப் பக்கம் விளையாடி கொண்டிருந்த நலன், நீலன் இருவரும் அந்த மரத்தில் இருந்த அத்திப் பழங்களைப் பறித்து விளையாடி கொண்டிருந்தனர். அந்தப் பழங்கள் முனிவர் மீது விழுந்தன. கோபத்தில் கண் விழித்த முனிவர், தன் கமண்டலத்தில் இருந்து நீரை எடுத்து, கைகளை ஓங்கியபடி மரத்தை அண்ணாந்து பார்த்தார். அங்கே, இரண்டு இளம் குரங்கு குட்டிகள் விளையாடி கொண்டிருப்பதைப் பார்த்து, முனிவர் மனம் இளகியது. ஆனால், கமண்டலத்தில் இருந்து நீரை எடுத்தாகி விட்டதே... எனவே, தன் சாபத்தை மாற்றி அவர்கள் எறியும் எதுவும் பஞ்சு போல் மிதக்கட்டும் என்று கூறினார். அதனால், அவர்கள் தொட்டுக் கொடுக்கும் அனைத்தும் மிதக்கிறது” என்றார் ராமச்சந்திர மூர்த்தி.
சில வேளைகளில் சில சாபங்களும் வரங்களாகி விடுகின்றன.