சீனாவில் மூன்று புத்த ஞானிகள் இருந்தார்கள். அவர்கள் எங்கு சென்றாலும் சேர்ந்தே செல்வார்கள்.
ஒரு ஊருக்குச் சென்றால் அந்த ஊரின் மையப் பகுதியில் நின்று கொண்டு மூவரும் வயிறு குலுங்கச் சிரிக்க ஆரம்பிப்பார்கள். உடனே, அங்கு கூட்டம் கூட ஆரம்பித்து விடும். சிறிது நேரத்தில் அனைவருமே சிரிக்க ஆரம்பித்து விடுவார்கள். அவர்கள் எந்த விதமான புத்திமதிகளோ ஆலோசனைகளோ சொல்வது இல்லை. அது ஏன்? சிரிப்பைத் தவிர, அவர்கள் யாரிடமும் எதுவும் பேசுவதில்லை. அவர்கள் வந்த இடம் மகிழ்ச்சிகரமாக இருக்கும். மக்கள் அவர்களை மிக நேசித்து 'சிரிக்கும் புத்தர்கள்' என்று அழைத்தார்கள்.
ஒரு கிராமத்துக்கு சென்ற போது, அவர்களில் ஒருவர் திடீரென நோய்வாய்ப்பட்டு இறந்து போனார். இப்போது மீதி இரண்டு பேரும் கண்டிப்பாக அழுவார்கள் என்று எண்ணி மக்கள் சென்றபோது, அவர்கள் இருவரும் சிரித்துக் கொண்டிருந்தனர்.
அதில் ஒருவர் அதிசயமாய் வாய் திறந்து, ''அவன் மரணத்தில் எங்களை வென்று விட்டான். அவன் வெற்றியைக் கொண்டாட நாங்கள் சிரிக்கிறோம்'' என்றார்.
பின் இறந்த புத்தரை அப்படியே சிதைக்குக் கொண்டு போனார்கள். பிணத்தைக் குளிப்பாட்டவில்லை. புதுத் துணிகள் மாற்றவில்லை. ஏன் என்று மக்கள் கேட்டதற்கு அந்த ஞானி சொன்னார், ''அவன் இறக்கும் முன்னே, தான் தூய்மையாகவே இருப்பதாகவும் அதனால் இறந்த பின் தன்னை எந்த மாற்றமும் செய்யாது, அப்படியே சிதையில் வைத்து எரிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறான்'' என்றார்.
சிதை மூட்டப்பட்டது. திடீரென இறந்த உடலிலிருந்து வான வேடிக்கைகள் ஆரம்பித்து விட்டன. அப்போதுதான் எல்லோருக்கும் தெரிந்தது, அவர் ஏன் ஆடை மாற்ற வேண்டாம் என்று சொன்னார் என்று. தான் இறந்த பின்னும் மக்கள் கவலையின்றி சிரிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் தனது ஆடையின் உள்ளே வெடிகளை ஒளித்து வைத்திருக்கிறார். அது கடைசி வரை யாருக்கும் தெரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக எந்த மாற்றமும் செய்ய வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார்.
சிரிப்பையேப் போதனையாகத் தந்த அவர்களை இன்றும் மக்கள் மறவாதிருக்கிறார்கள். ஆம், தற்போது அவர்கள் பொம்மைகளை வீட்டில் வைப்பது வளம் தரும் என்ற நம்பிக்கை உலகெங்கும் உள்ளது.