இஸ்லாம் நெறிகளில் சற்றும் வழுவாமல் வாழ்ந்த சுலைமான், மரணத்துக்குப் பின் சொர்க்கம் அடைந்தார்.
இறைவன் கேட்டார், ''சுலைமான் உனக்கு சொர்க்கம் எதனால் கிடைத்தது என்று தெரியுமா?''
சுலைமான் சொன்னார், ''ஆண்டவனே,உம்மை நாள்தோறும் முறை தவறாமல் ஐந்து முறை தொழுததனால் எனக்கு கடவுளின் கருணை கிடைத்திருக்கலாம்.
'' இறைவன் சொன்னார், ''இல்லை மகனே,ஒரேயொரு வேளை மட்டும் நீ தொழாமல் இருந்தாய் அல்லவா?அதற்காகவே நீ இன்று சொர்க்கத்தில் இருக்கிறாய்''
சுலைமானுக்கு ஒன்றும் புரியவில்லை.தொழாமல் இருந்ததற்குப் பரிசா?
இறைவன் தொடர்ந்தார், ''மகனே,ஒரு குளிர் காலக் காலைப் பொழுதில் பள்ளிவாசலின் அழைப்பொலி கேட்டு அவசரமாய்ப் புறப்பட்டாய்.கடுமையான பனியில் வாடி,குளிரில் நடுங்கித் தவித்த ஒரு சிறு பூனைக்குட்டியை ஓடிச் சென்று அள்ளி அணைத்து விரல்களால் அதன் உடலை வருடி, ஆறுதல் அளித்தாய். மார்புறப் பூனையைத் தழுவியதால் உன் உடல் வெப்பம் கிடைத்து குட்டி சம நிலையை அடைந்தது. நெஞ்சில் அணைத்த பூனையை நிலத்தில் விட்டுவிட்டு நீ நிமிர்ந்தபோது, பள்ளிவாசல் தொழுகை முடிந்து விட்டது. பிற உயிர்களிடம் காட்டும் பெருங்கருணைதான் எனக்கு மிகவும் பிடித்தமான செயல். என் அன்பின் பரிசாக உனக்கு இந்த சொர்க்கம் கிடைத்தது''