ஒரு சாமியார் கோவில் வாசலில் நின்று மக்கள் அறிந்திருந்த பல கடவுள்கள் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். மக்கள் இந்தக் கடவுள்கள் எல்லாம் தங்களோடு வாழ்வதாக நம்பினர்.
சில நாட்கள் கழித்து அதே கோவில் வாசலில் ஒரு மனிதன் வந்து கடவுள் இல்லவே இல்லை என்று வாதிட்டான்.
கேட்டவர் பலருக்கு மகிழ்ச்சி. ஏனெனில் அவர்கள் எங்கே, தாங்கள் செய்த தவறுகளுக்குக் கடவுள் தண்டிப்பாரோ என்று அச்சம் கொண்டவர்கள். கடவுள் இல்லை என்று சொன்னதும் அவர்களுக்கு நிம்மதி.
இன்னும் சில நாட்கள் கழிந்தன.
புதிதாக ஒரு மனிதன் வந்து, ஒரே ஒரு கடவுள்தான் உண்டு, என்று தீவிரமாகப் பேசினான்.
இதைக் கேட்டவர்களுக்கு ஏமாற்றமும் அச்சமும் ஏற்பட்டது.
பல கடவுள் இருந்தால் ஒருவர் இல்லாவிடினும் ஒருவர் தங்கள் தவறுகளை மன்னிக்க வாய்ப்புண்டு; ஒரே கடவுள் என்றால் அவர் எப்படிப்பட்டவர் என்று தெரியாது. தாங்கள் செய்யும் தவறுகளுக்கு கோபப்படுவாரா? மன்னிப்பாரா? என்று அறிய முடியாமல் கவலைப்பட்டார்கள்.
அடுத்து வந்த வேறு ஒருவன், ''கடவுள் மூன்று பேர் உண்டு. அவர் மூவருக்கும் கருணை வடிவான ஒரு அன்னை உண்டு''என்று சொன்னான்.
இப்போது ஊர் மக்கள் திருப்தி அடைந்தனர். கடவுள் மூவர் என்பதால், நாம் செய்தது பாவமா, இல்லையா என்று உறுதியான முடிவுக்கு அவர்களால் வர இயலாது என்றும், அவர்கள் அப்படியே பாவம் என்று முடிவு செய்தாலும் கருணை வடிவான தாய் மன்னித்து விடுவாள் என்றும் எண்ணினர்.
அந்த ஊர் மக்கள் இன்று வரை மொத்தம் எத்தனை கடவுள் என்பதில் ஒரு முடிவுக்கு வர முடியாமல் இருக்கிறார்கள்.
நன்றி: கலீல் ஜிப்ரான் கதைகள்