ஒரு ஞானி ஒரு அரசனிடம்,''நீ ஆயிரம் பொற்காசுகள் கொடுத்தால் நான் ஒரு சிறந்த அறிவுரை தருவேன்''என்றார்.
அரசனும் அவருக்கு ஆயிரம் பொற்காசுகளைக் கொடுத்தார்.
அதனைப் பெற்றுக் கொண்ட ஞானி, ''எந்த ஒரு செயலையும், அதன் முடிவு என்னவாயிருக்கும்? என்று யோசிக்கும் முன் செய்யாதே” என்றார்.
அரசருடன் இருந்தவர்கள் அனைவரும் இந்தச் சாதாரண அறிவுரைக்கா ஆயிரம் பொற்காசுகள் என்று கூறி நகைத்தனர்.
அரசனோ, ''இதில் சிரிக்க ஒன்றுமில்லை. எதையும் யோசித்துச் செய்ய வேண்டும் என்றார். ஆனால், தினசரி வாழ்வில் நாம் நிறைய விசயங்ககளை, அதன் விளைவு என்னவென்று யோசிக்காமல் செய்து அவதியுறுகிறோம். எனக்கு இந்த அறிவுரை மிகவும் பிடித்துள்ளது' 'என்றார்.
அதனால் அரசர் பல இடங்களில் ஞானி சொன்ன வாசகங்களை எழுதி வைக்க ஏற்பாடு செய்தார்.
சில மாதங்களுக்குப் பின் ஒரு சதிகாரன் அரசனைக் கொல்லத் திட்டமிட்டான்.
அவன் அரச வைத்தியனுக்கு லஞ்சம் கொடுத்து, அரசனுக்கு அவன் ஒரு விஷம் கொடுக்க ஏற்பாடு செய்தான். வைத்தியனும் அரசனுக்கு விஷம் கொடுக்கப் போகும் போது, அந்த அறையில் எழுதப்பட்டிருந்த ஞானியின் அறிவுரை கண்ணில் பட்டதால் அதைப் படித்தான்.
உடனே அவன் யோசனை செய்தான்.
''நான் இக்காரியத்தை செய்தால் பின் விளைவு என்னவாகும்? சதிகாரன், மன்னன் ஆனால் ரகசியம் வெளியே போகக் கூடாது என்பதற்காக என்னைக் கொல்லலாம்” என்று நினைத்துப் பார்த்தான்.
அவனுடைய தடுமாற்றத்தைக் கவனித்த அரசன் என்னவென்று கேட்டார்.
உடனே வைத்தியன் நடந்த உண்மை அனைத்தையும் சொல்லி விட்டான்.
சதிகாரன் உடனே பிடிக்கப்பட்டான்.
அரசன், முன்பு ஞானியின் அறிவுரையைக் கேலி செய்த அனைவரையும் அழைத்து கேட்டான்.
''நீங்கள் இப்போது ஞானியின் ஆலோசனை குறித்து கேலி செய்வீர்களா?''