வயதான தம்பதியினர், வெளியூரில் வசிக்கும் மகனைப் பார்க்க மலைப்பகுதி வழி செல்லும் பேருந்து ஒன்றில் ஏறினார்கள்.
இறங்க வேண்டிய நிறுத்தத்தில் அவர்களை மட்டும் இறக்கி விட்டுப் பேருந்து கிளம்பிச் சென்றது.
போகும் வழியில் மலையில் இருந்து உருண்டு வந்த ஒரு பெரிய பாறை பேருந்தின் மேல் விழுந்து பேருந்து நசுங்கிப் பல பயணிகள் அந்த இடத்தில் இறந்து போனார்கள்.
இச்செய்தி வயதான தம்பதியினருக்குத் தெரிய வந்தது.
''நல்லவேளை, நீங்கள் முன்னரே இறங்கியதால் தப்பித்தீர்கள்'' என்றார் ஒருவர்.
அதைக் கேட்ட பெரியவர், ''நாங்கள் இறங்காமலிருந்தால் இந்த விபத்து நடந்திருக்காது. அனைவரும் தப்பித்திருப்பர்'' என்றார்.
கேட்டவருக்கு ஆச்சரியம்.
''ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?''என்று கேட்டார்.
பெரியவர் வருத்தத்துடன் சொன்னார், ''பேருந்து எங்களுக்காகச் சிறிது நேரம் ஓரிடத்தில் நின்றதே. அப்படி நிற்காது, தொடர்ந்து சென்றிருந்தால் அந்தப் பாறை விழுந்த நேரத்தில், அந்தப் பேருந்து அந்த இடத்தைக் கடந்திருக்குமே? எவருக்கும் எதுவும் ஆகி இருக்காதே''