வாத்து ஒன்று குதிரையைப் பார்த்து சொன்னது,''நான் எல்லா வகையிலும் உன்னைக் காட்டிலும் சிறப்புடையவன். உன்னைப்போல தரையில் என்னால் நடக்க முடியும். எனக்கு அழகான இறக்கைகள் இருக்கன்றன. அது கொண்டு வானில் என்னால் பார்க்க முடியும். என்னால் ஆற்றில் நீந்திக் குளிக்க முடியும். என்னிடம் ஒரு பறவை, ஒரு மீன், ஒரு மிருகம் இவற்றின் செயல்பாடுகள் அனைத்தும் உள்ளன''
குதிரை சொன்னது, ''உன்னிடம் மூன்று வித குணாதிசயங்கள் இருப்பதை ஒத்துக் கொள்கிறேன். ஆனால், இந்த மூன்றில் எதிலும் குறிப்பிடத்தக்க அளவில் சிறப்பாக நீ இல்லை. உன்னால் ஒரு கிளி போலப் பறக்க முடியாது. சிறிது தூரம்தான் உன்னால் பறக்க முடியும். உன்னால் நீரில் நீந்த முடியும். ஆனால், உன்னால் மீன் போல நீரிலேயே வாழ முடியாது. உன் சப்பை காலுடனும் நீண்ட கழுத்துடனும் நடக்கும் போது எவ்வளவு அசிங்கமாக இருக்கிறது என்று உனக்குத் தெரியுமா? எனக்கு நடக்க மட்டும் தான் தெரியும் என்று ஒத்துக் கொள்கிறேன். ஆனால் என் கம்பீரத்தைப் பார்த்து எத்தனை பேர் பரவசப் படுகிறார்கள். என் அங்கங்கள் எவ்வளவு கன கச்சிதமாக அழகாக அமைந்துள்ளன. என்னுடைய வலிமையை நீ அறிவாயா?என் வேகம்பற்றி உனக்கு என்ன தெரியும்? மூன்று விதமாக செயல்படும் உன்னைக் காட்டிலும் ஒரே வகையில் செயல்படும் நான் சிறப்புப் பெற்றிருக்கிறேன். அதில் எனக்கு மகிழ்ச்சியே!''
அதனைக் கேட்ட வாத்து, எந்தப் பதிலும் சொல்ல முடியாமல் போனது.