இந்த ஊர் மக்கள் எப்படிப்பட்டவர்கள்?

வெளியூரிலிருந்து வந்த ஒரு இளைஞன் ஒரு முதியவரை அணுகி, “நான் இந்த ஊருக்குக் குடி வரலாம் என்று நினைக்கிறேன். இந்த ஊர் மக்கள் எப்படிப்பட்டவர்கள்?” என்று கேட்டான்.
பெரியவர், “நீ எந்த ஊரிலிருந்து வருகிறாய்?” என்று கேட்க அவனும் சற்று தூரத்தில் இருந்த ஒரு ஊரிலிருந்து வருவதாகச் சொன்னான்.
“அந்த ஊர் மக்கள் எப்படிப்பட்டவர்கள்?” என்று பெரியவர் அவனைக் கேட்டார்.
அவனும், ”மிக மட்டமான மக்கள் அவர்கள். ஒருவர் நன்றாய் வாழ அவர்கள் பொறுக்க மாட்டார்கள். அடுத்தவருக்குக் கெடுதல் செய்யத் தயங்காதவர்கள். அவர்களின் போக்கு பிடிக்காமல்தான் நான் அந்த ஊரை விட்டு இங்கு வரலாம் என யோசித்தேன்” என்றான்.
பெரியவர், “நல்ல வேலை என்னிடம் விபரம் கேட்டாய். இந்த ஊர் மக்கள் உன் ஊர் மக்களைக் காட்டிலும் பொல்லாதவர்கள். தயவு செய்து நீ இந்த ஊருக்கு வந்து விடாதே” என்றார்.
இளைஞனும் பெரியவருக்கு நன்றி சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றான்.
நடந்தவற்றைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு இளைஞன் பெரியவரிடம், “ஐயா, நம் ஊர் மக்கள் நல்லவர்கள்தானே? ஏன் அந்த ஆளிடம் நம் ஊர் மக்களைப் பற்றித் தவறான தகவல் சொன்னீர்கள்?”என்று கோபத்துடன் கேட்டான்.
div align=right>
அதற்குப் பெரியவர் அமைதியாக, “தம்பி, இந்த ஆள் நம் ஊருக்கு வந்தால் சில நாட்கள் கழித்து, நம் ஊரைப் பற்றியும் இதே போல்தான் பேசுவான். எந்த ஊரிலும் நல்லவர்களும்
இருப்பார்கள்; கெட்டவர்களும் இருப்பார்கள். கெட்டதை மட்டும் பார்க்கும் மனோபாவம் கொண்ட இந்த மாதிரி ஆட்கள் நம் ஊருக்கு வராமல் இருப்பதே நல்லது” என்றார்.