கடவுளால் படைக்கப்பட்டபோது மனிதனுக்குக் கண்கள் கிடையாது. கண்கள் இல்லாமலே ஆணும் பெண்ணும் கூடி வாழ்ந்தார்கள்.
பார்வையில்லாமல் வாழும் போது பலமுறை ஆற்றில், மலையில், தடுமாறி விழுந்து இறந்து போனார்கள்.
அவர்களின் பரிதாப நிலையைக் கண்ட கடவுள் மனிதனுக்குக் கண்களை உருவாக்கித் தர வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால், அவரது சேமிப்பில் கண்கள் இல்லை. ஆகவே அவர் ஆந்தையைப் பார்த்து, “நீ பகலில் கண்களைப் பயன்படுத்துவதே இல்லையே, உன் கண்களை மனிதர்களுக்குத் தருவாயா?” எனக் கேட்டார்.
ஆந்தை, “முடியாது, என் அழகே கண்கள்தான்” என்று மறுத்துவிட்டது. .
பாம்பைப் பார்த்து கடவுள் கேட்டார். “உன் கண்கள் அழகானவை. நீயாவது மனிதனுக்குக் கண்ணைத் தருவாயா...?”
உடனே பாம்பு சொன்னது;
“கண் இல்லாவிட்டால் என்னைக் கொன்று விடுவார்கள். ஒருபோதும் நான் கண்ணை இழக்க மாட்டேன்”
இப்படி அவர் முயல், யானை, புலி என ஒவ்வொரு விலங்காகக் கண்களைத் தானம் செய்யும்படி கேட்டார்.
ஒரு விலங்கும் தருவதற்கு தயாராக இல்லை.
நாமே கண்களை உருவாக்கி வைத்து விட வேண்டியது என முடிவு செய்து, எதைக் கொண்டு உருவாக்குவது என யோசித்துக் கொண்டிருந்தார்.
அப்போது ஒரு முத்துச்சிப்பித் தன்னைக் கடலில் யாரும் மதிப்பதே இல்லை என்று புகார் சொல்வதற்காகக் கடவுளைக் காண வந்திருந்தது.
அதன் அழகை கண்ட கடவுள் முத்துச்சிப்பியிடம், “உன் முத்தைக் கொண்டு மனிதனுக்குக் கண்ணை உருவாக்கப் போகிறேன். நீ அதற்குச் சம்மதிக்கிறாயா...?”
அதற்கு முத்துச்சிப்பி, “என்னால் முத்தைப் பிரிந்து இருக்கவே முடியாது” என்றது.
அப்படியானால் உன்னையும் சேர்த்தே உருமாற்றிவிடுகிறேன் என்றபடியே முத்தை இரண்டாகப் பிளந்து, மனிதனின் முகத்தில் பதித்து, அதில் தன் விரலால் கருவட்டம் வரைந்து கண்களை உருவாக்கினார். சிப்பியை இரண்டு இமைகளாக்கினார். அப்படித்தான் மனிதனுக்குக் கண்கள் உருவாக்கபட்டன.
சிப்பி கண்களாக உருமாறியதால்தான் கண் இமைகள் தானே திறந்து திறந்து மூடிக் கொள்கின்றன.
முத்துச்சிப்பி கடலில் இருந்த காரணத்தால் தான் கண்ணீரும் உப்புக் கரிக்கிறது.
- இந்தோனேசியாவின் ஜாவா தீவில் வழங்கப்படும் கதை