தாவோ தத்துவத்தின் தந்தை லா வோ த்சு சீனாவின் பெரிய ஞானி.
அவர் வாழ்ந்தபோது இருந்த அரசர் ஒருநாள் அவரிடம் வந்து , “நீங்கள் பெரிய ஞானி நீங்கள் என் அரசவையில் நீதிபதியாக இருந்தால் எனக்குப் பெருமையாக இருக்கும்” என்றார்.
ஞானி எவ்வளவோ மறுத்து, பின்னால் வருத்தப்படக்கூடாது என்று சொன்ன போதிலும் அரசன் மிகவும் வற்புறுத்தவே அவரும் ஒத்துக் கொண்டார்.
முதல் நாள் ஒரு வழக்கு வந்தது.
பணக்காரன் ஒருவன் வந்து, “இவன் என் வீட்டில் புகுந்து திருடி விட்டான். இவனுக்குத் தக்க தண்டனை கொடுக்க வேண்டும்” என்று வேண்டிக் கொண்டார்.
ஞானியும் வழக்கை விசாரித்துவிட்டு, “திருடியவனுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை. இந்தப் பணக்காரனுக்கும் ஒரு ஆண்டு சிறை தண்டனை” என்று தீர்ப்புக் கூறினார்.
அரசனே இந்தத் தீர்ப்பைக் கேட்டுத் திடுக்கிட்டான்.
பணக்காரனோ அலறிக் கொண்டே, “இது என்ன அநியாயமான தீர்ப்பு?”என்று கேட்டான்.
ஞானி, “ஒருவனைத் திருடனாக்கியது நீ செய்த குற்றம். இவன் வறுமைக்கு நீதான் காரணம். இவனாவது ஒருவனிடம்தான் திருடியிருக்கிறான். நீயோ, பலருடைய சொத்தைத் திருடியுள்ளாய். ஏழைகளின் உழைப்பை நீ திருடியுள்ளாய். நீ செய்த குற்றங்கள் இரண்டு. ஒன்று பிறர் உழைப்பத் திருடியது. மற்றொன்று, நல்லவன் ஒருவனைத் திருடத் தூண்டியது. நியாயமாகப் பார்த்தால் உனக்குக் கூடுதல் தண்டனை தந்திருக்க வேண்டும். நான் இரக்கம் உடையவன். அதனால் உனக்குக் குறைந்த தண்டனைதான் கொடுத்திருக்கிறேன்” என்றார்.
அதற்குப் பின்னர் அந்த அரசர், ஞானியை நீதிபதியாய் வைத்திருந்திருப்பாரா?