ஒரு காட்டில் ஜென்ஞானி ஒருவர் வண்ணத்துப்பூச்சிப் பின்னால் ஓடிக்கொண்டிருந்தார். சீடர்களும் அவர் பின்னால் ஓடிவந்தனர்.
காடு, மேடு, ஆறு, குளம் எல்லாம் கடந்த பின் அந்த வண்ணத்துப்பூச்சி ஒரு பூவின் மேல் அமர்ந்தது.
ஞானி சற்று தூரத்தில் அமர்ந்து அது தேன் அருந்துவதையே பார்த்துக் கொண்டிருந்தார். வண்ணத்துப்பூச்சி தேன் அருந்தி முடித்ததும் மறுபடியும் பறக்க ஆரம்பித்தது.
இந்தமுறை ஞானி வண்ணத்துப்பூச்சியைப் பின்தொடரவில்லை. அமைதியாகத் தன் ஆசிரமத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.
சீடர்களுக்கு ஒரே குழப்பம். குரு ஏன் வண்ணத்துப்பூச்சி பின்னால் ஓடி வந்தார். ஏன் அதைப் பிடிக்காமல் திரும்பி வருகிறார்.
ஆசிரமத்தை வந்தடைந்ததும், அவர்கள் கேட்காமலேயே குரு சொன்னார். நீங்கள் தேனருந்தி விட்டீர்கள், இனி அந்த வண்ணத்துப்பூச்சி ஆவீர்கள்.
மற்ற சீடர்கள் புரியாமல் திகைக்க, ஒரு சீடன் மட்டும் தனது உடைமைகளைத் தன் கைப்பையில் எடுத்துக் கொண்டு புறப்பட்டான்.
புறப்படும் முன் ஒரு வாசகத்தை ஆசிரமத்துச் சுவரில் எழுதிவிட்டுச் சென்றான். அதைப் படித்துவிட்டு மற்ற சீடர்களும் மவுனமாக மூடியிருந்த ஆசிரமத்துக் கதவைத் திறந்து வைத்துவிட்டு ஒவ்வொருவராக வெளியேறினர்.
அந்த வாசகம் என்ன தெரியுமா?
“வண்ணத்துப்பூச்சி தேனருந்தியதும்
பூவைவிட்டுப் பறக்கிறது
ஒரு புதிய வண்ணத்துப்பூச்சி வந்து அமர...”