புலவர் புகழேந்தி சோழ மன்னனின் தமிழ் அவையில் தான் எழுதிய நள வெண்பாவை அரங்கேற்ற ஆரம்பித்தார்.
பாக்களின் இனிமையில் அவையோர் மயங்கி இருந்தனர்.
இனிய மாலைப் பொழுதின் அழகை வர்ணித்த புகழேந்தி, “மல்லிகையே வெண்சங்கா வண்டூத” என்று பாடினார்.
அதன் பொருள்:
மல்லிகைப் பூக்களை சங்குகளாக்கி வண்டுகள் ஒலி செய்த போது
என்பதாகும்.
சோழ மன்னனின் தமிழ் அவையில் ஒட்டக்கூத்தனும் உண்டு. அவருக்கும், புகழேந்திக்கும் ஏழாம் பொருத்தம். புகழேந்தி ஆரம்பித்ததில் இருந்து எதில் குறை கண்டு பிடிக்கலாம் என்று காத்திருந்தார்.
புகழேந்தி மல்லிகைப் பூக்களைப் பற்றிப் பாடியதும் வெகுண்டு எழுந்தார் ஒட்டக்கூத்தர்.
அவர் கூறினார், “சங்கு ஊதுபவன் சங்கின் பின்புறம் இருந்து ஊதுவதுதான் முறை. மல்லிகைப் பூவின் மேல்புறம் தேன் குடிக்கும் வண்டுகள் சங்கு ஊதுவதாய்க் கூறுவது காட்சிப் பிழையானது. புகழேந்தி பாடுவது வெண்பா அல்ல.வெறும்பா”
சபையில் கடுமையான அமைதி நிலவியது.
புகழேந்தி என்ன சொல்லப் போகிறார் என்று அனைவரும் ஆர்வத்துடன் யோசித்துக் கொண்டிருந்தனர்.
புகழேந்தி சொன்னார், “ஒட்டக்கூத்தரே! நீர் பெரிய புலவர்தான். ஆனால் உமக்கு ஒரு விஷயம் தெரியவில்லையே! கள் குடிப்பவனுக்கு தலை எது, கால் எது என்று தெரியுமா? கள் குடித்த வண்டு மட்டும் அதற்கு விதி விலக்கா?''
சபையில் ஆரவாரம் அடங்க சிறிது நேரம் ஆயிற்று.