வேறு தேசத்தைச் சேர்ந்த வேறு மொழி பேசுகிற குற்றவாளிகளைப் பிடித்து வந்தவர்கள், அவர்களின் குற்றங்களை விளக்கிச் சொல்லச் சொல்ல அரசன் தண்டனை விதித்துக் கொண்டிருந்தான்.
ஒருவனுக்குத் தூக்குத் தண்டனை வழங்க, கைதி அவன் மொழியில் மன்னரை மோசமாகத் திட்டினான்.
அவன் சொல்வது புரியாது அருகில் இருந்த அமைச்சரிடம் மன்னன் விளக்கம் கேட்க,மந்திரியும், ''அரசே,கோபத்தை அடக்கி பிறரை மன்னிப்பவர்க்குச் சொர்க்கம் உண்டு என்கின்றான்' என்றார்.
அரசர் உடனே மனம் மாறி, தூக்குத் தண்டனையை மாற்றி மன்னித்து விட்டார்.
பக்கத்தில் நின்றிருந்த இன்னொரு அமைச்சர் அரசர் காதில், ''அரசே!இந்த அமைச்சர் உங்களிடம் பொய் சொன்னார். அந்தக் கைதி உண்மையிலேயே உங்களை மிகவும் திட்டினான்'' என்றார்.
அரசர் புன்னகையோடு அவரிடம் சொன்னார், ''நீங்கள் கூறிய உண்மையை விட அவர் கூறிய பொய் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது''
சமாதானத்தை உண்டாக்கும் பொய் சச்சரவுகள் உண்டாக்கும் மெய்யை விட மேலானது.