ஊருக்கு வந்த துறவியிடம் ஒருவன் சொன்னான்,''இந்த ஊரில் என்னை எல்லோரும் முட்டாள் என்று சொல்கிறார்கள் நான் என்ன சொன்னாலும் சிரிக்கிறார்கள். என் பிரச்சினை தீர ஒரு வழிசொல்லுங்கள்.
துறவி சொன்னார், ''நீ யார் எது பேசினாலும், அதை மறுத்துப் பேசு. யாரவது ஒருவனை நல்லவன் என்று சொன்னால் நீ தீயவன் என்று சொல். கடவுள் உண்டு என்றால் இல்லை என்று சொல். ஏதாவது ஆணித்தரமாக யாராவது பேசினால் நிரூபிக்க முடியுமா என்று கேள்''
அவன் துறவியிடம் கேட்டான், ''அவர்கள் நிரூபித்து விட்டால், நான் முட்டாளாகிவிடுவேனே?''
துறவி சிரித்துக்கொண்டே சொன்னார், ''யாராலும் நிரூபிக்க முடியாது. இந்தப் பிரபஞ்சம் மர்மமானது. வாழ்க்கை மர்மமானது. இதில் யாரும் எதையும் நிரூபிக்க முடியாது. பயப்படாதே''
அவன் துறவி சொன்னபடி நடக்க ஆரம்பித்தான்.
யார் என்ன சொன்னாலும் மறுத்துப் பேசினான். எதைச்சொன்னாலும் நிரூபிக்கச் சொன்னான். ஒருவராலும் அவனிடம் பேச முடிய வில்லை. ஊரில் அவனுக்கு மரியாதை கூடத் துவங்கியது.
''அவன் இப்போது பெரிய அறிவாளி ஆகி விட்டான்'' என்று எல்லோரும் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.