மனதின் குரல் - 7
முனைவர் கு. சிதம்பரம்
பின் கதவுகளை மூடி முள்
வைப்பதே நல்லாட்சிக்கு வழிவகுக்கும்!
*****
பாடப் புத்தகத்தில் படிப்பதன்று அரசியல்
மக்களின் துன்பத்தில் படிப்பது!
*****
ஏழைகளின் வீட்டு அடுப்புகளில் பூனைகளைத்
தூங்க வைப்பதும் அரசியலே!
*****
அரசியல் சதுரங்கத்தில் தோல்வி அடைந்த
ராஜா தூக்கி எறியப்படுகின்றார்!
*****
நிலவில் வடை சுடும் பாட்டியும்
தேய்ந்து போகிறாள் வருவாயின்றி!
*****
சூடான வடைகளைத் திருடிய காகங்களின்
வாய்கள் புண்ணாய்ப் போயின!
*****
வாயால் சுடப்பட்ட வடைகள் இனி
தமிழ்நாட்டில் விற்பனை ஆகாது!
*****
கடவுளை வணங்கி வரம் பெறுவதும்
எதிர்த்து அழிவதும் அசுரத்தனம்!
*****
விழுதுகளைத் தாங்கி வளர்க்கும் அறிவெனும்
போதி மரமே ஆசிரியர்!
*****
முல்லைக் கொடியவள் மல்லிகை வாசத்தோடு
மணாளன் மதுவின் வாசத்தோடு!
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.