விதுர நீதி காட்டும் அறிவுரைகள்
ஆட்சியில் இருந்து கொண்டு வேண்டியவர்களுக்கு உதவி செய்யக் கூடாது. கோபம் கொள்ளக் கூடாது. எதற்கெடுத்தாலும் சந்தேகம் கூடாது. நல்லொழுக்கம் வேண்டும்.
சுக வாழ்க்கையில் ஈடுபட்டவனுக்கு அறிவு வளர்ச்சி அடையாது.
மனிதன் சத்தியம், தானம், சோம்பலின்மை, பொறுமையின்மை, தைரியம் ஆகிய ஐந்து குணங்களையும் ஒருபோது எந்த நிலையிலும் விட்டுவிடக் கூடாது.
விவேகி எடுக்கும் முடிவு சரியாக இருக்கும் என்பதால் அதை மாற்ற வழியில்லை.
வாழ்க்கையில் ஒவ்வொன்றிற்கும் பொருத்தமான காலம் உண்டு.
தீய செயல்களைச் செய்வதைத் தவிர்த்தால் மட்டும் போதாது. நாம் நற்செயல்களையும் செய்தாக வேண்டும்.
ஒருவன் நல்லவனாக இருக்கலாம். ஆனால், ஏமாளியாக இருக்கக் கூடாது.
ஆகாரத்தில் விருப்பமுள்ள மீன், பூச்ச்சியால் மறைக்கப்பட்டிருக்கும் இரும்புத் தூண்டிலைக் கவனிப்பதில்லை. ஆசைப்பட்டு ஆகாரத்தைத் தின்னப் போய் அதில் மாட்டிக் கொள்கிறது. ஆசை வயப்பட்ட மனிதனின் நிலையும் இதுதான்.
அளவுக்கு மிஞ்சிய தூக்கம், தேவையில்லாத பயம், ஆத்திரம், சோம்பல், மயக்கம், எதையும் தாமதமாகச் செய்தல் எனும் ஆறு குணங்கலும் முன்னேற்றப் பாதையின் முட்டுக்கட்டைகளாகும்.
அறிவிலி எனப்படுபவன், மற்றவர்கள் பட்டினி இருந்தாலும் தான் மட்டும் வயிறு புடைக்க உண்டு களிப்பான்.
அறிவிலி எனப்படுபவன், தனக்கு அறிவு இல்லை என்பதைப் பொருட்படுத்தாமல் கர்வமாக இருப்பான்.
தன்னை நாடி வரும் தீயவர்களையும் நல்லவன் கைவிடமாட்டான்.
மற்றவர்கள் அவமதித்தாலும், தாக்கினாலும் பழிவாங்க விரும்பாமல் அமைதியாக இருப்பதுதான் பொறுமை.
அறிவிலி எனப்படுபவன் தான் அழைக்கப்படாத இடங்களுக்கும் வேண்டுமென்று செல்வான்.
தன்னடக்கமில்லாதவனுக்குச் சமுதாயத்தில் மதிப்பு கிடைக்காது.
தைரியம் என்பது உடல் வலிமையுடனும், மன உறுதியுடனும் தொடர்புடையது.
முதல்தரமான மனிதன் இந்த வையகம் வாழ வேண்டும் என்கிற கொள்கையை உடையவனாக இருப்பான்.
தன்னை யாராவது பூஜித்தால் அதற்காக மகிழ்ச்சி கொள்வதில்லை. அவமதித்தாலும் தாபத்தை அடைவதில்லை. கங்கையின் மடுவைப் போல் எவன் கலக்கமடையாமல் இருக்கிறானோ அவனே அறிவாளி என்று சொல்லப்படுவான்.
தீயோரின் சேர்க்கை அஞ்சத்தக்கது. அது எப்படிப்பட்ட நல்லவரையும் கெடுத்து விடும். காய்ந்த கட்டையுடன் சேர்ந்த ஈர மரமும் எரிந்துவிடும்.
அகங்காரம் எதையும் பொருட்படுத்தாமல் அதிகமாகப் பேசுதல், அளவுக்கு மீறிக் குற்றம் புரிதல், கோபம் கொள்ளல், தான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்று கருதுதல், நண்பர்களுக்குத் துரோகம் செய்தல் இந்த ஆறு தீய குணங்களும் கூர்மையான கத்தி போல ஆயுளை வெட்டுகின்றன. ஆதலால், இவையே மனிதர்களைக் கொல்லுகின்றனவல்லாமல் யமன் கொல்கிறான் என்பதில்லை.
புண்ணில் வேல் பாய்ச்சுபவனாகவும், கொடுஞ்சொல் பேசுபவனாகவும் இருக்கக் கூடாது.
மனத்தின் ஈடுபாட்டிற்கு ஏற்ப முயற்சியில் வெற்றியின் அளவு அமைகிறது.
நல்லவர் உள்ளம் நல்லவர் அறிவர்.
நல்லவர்களைத் திட்டுவதனால் ஒருவன் பாவம் செய்தவனாகிறான்.
மனிதனின் மனத்தில் தீய விசயங்கள் உள்ளன. அவற்றை வசப்படுத்தியவன் புலன்களை வென்றவன் ஆவான்.
அறிவிலி எனப்படுபவன், பகைவனை நண்பன் என்று நம்பி ஏமாறுவான்.
ஒன்றை விரும்பும் போது அது நம்மிடம் இருக்கிறதா, அது நமக்குத் தேவைதானா, அதைத் தவிர்க்க முடியுமா என்று சிந்திப்பது அவசியமாகும்.
படிப்பு, பாவச் செயல் செய்பவனைக் காப்பாற்றாது. நற்பண்பு ஒன்றுதான் காப்பாற்றும்.
ஒருவரது அழைவை நாம் விரும்பாவிட்டால் நாம் தயங்காமல் நல்லது கெட்டது பாராமல் ஆலோசனை வழங்க வேண்டும்.
தொகுப்பு:- தேனி.பொன். கணேஷ்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.