பௌத்த சமயம் சொல்லும் பொன்மொழிகள்

பாவம் செய்பவன் இம்மையிலும் மறுமையிலும் துன்பமடைகிறான்.

பகைமையைப் பகைமையால் தணிக்க முடியாது. அன்பின் மூலமே தணிக்க முடியும்.

பிரார்த்தனைகளுக்குள்ளேயே மிக உயர்ந்தது பொறுமைதான்.

ஆசையே தீமைக்கு வேர்; பகையே தீமைக்கு வேர்.

சத்தியமே வெற்றி தரும். சத்தியத்தையே ஒளியாக உறுதியுடன் பற்றிக் கொள்ளுங்கள்.

ஆசையால் இயக்கப்படும் மனிதர்கள் வேட்டையில் விரட்டப்படும் முயல்களைப் போல் ஓடுகிறார்கள்.

பகைவனை விட அடக்கமில்லாத மனமே ஒருவனுக்கு அதிகத் தீமைகளைக் கொடுக்கும்.

எவ்வளவு உயர்ந்ததாயினும், பிறருடைய கடமைக்காக எவனும் தன் கடமையைக் கைவிடலாகாது.

பயனில்லாத வார்த்தைகளைப் பேசுபவன் வாசனை இல்லாத மலருக்கு ஒப்பானவன்.

மனதில் நினைப்பதையே சொல்; இல்லையானால் மௌனமாக இரு.

ஆசைகளுக்குச் சமமான நெருப்பு வேறு எதுவுமில்லை.

உனது விடுதலைக்கு வழி உன்னிடமே; பிறரிடமன்று.

பெரியோர் பகைமை என்னும் தீயை நட்பு என்னும் நீரால் அணைப்பர்.

தன்னலத்தை வென்றவன் ஆயிரம் வீரர்களை வென்றவனை விட மேலானவன்.

அமைதியை விட மேலான ஆனந்தம் வேறெதுவுமில்லை.

நாம் செய்யும் நல்ல செயல்களும், தீய செயல்களும் நிழல்களைப் போன்று நம்மை இடைவிடாமல் தொடர்ந்து வருகின்றன.

நம் செயல்களின் விளைவுகளிலிருந்து நாம் தப்புவது இயலாத காரியம். ஆதலால், நற்செயல்களையேப் பழகி வருவோம்.

பொறாமையும், பேராசையும், தீயொழுக்கமும் உள்ள ஒருவன் பேச்சாலோ, உடல் அழகாலோ மட்டும் நல்லவனாகி விட மாட்டான்.
தொகுப்பு:- தேனி.பொன். கணேஷ்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.