சாணக்கிய நீதி வழங்கும் கருத்துகள்

மதுபானத்தை ஒரு தட்டிலும், மற்ற பாவங்களையெல்லாம் ஒரு தட்டிலும் வைத்தால் சரிசமமாக இருக்கும். குடிவெறியை விடக் கொடிய பாவம் எதுவும் இதற்கு முன்னும் இருந்ததில்லை; இனிமேல் இருக்கப் போவதுமில்லை.

வறுமை, வியாதி, கஷ்டங்கள், சிறைவாசம் மற்றும் உள்ள துன்பங்கள் எல்லம் அவரவர்கள் செய்த பாவங்கள் என்ற மரத்தில் பழுக்கும் பழங்களாகும்.

ஒருவனுடைய வளர்ச்சியும் அழிவும் அவனுடைய நாக்கைச் சார்ந்தே உள்ளது.

பிறப்பின் அடிப்படையில் உண்டாக்கப்படும் உயர்வுகள் மனிதனால் உருவாக்கப்படுகின்றன. அவை நிலை இல்லாதவை.

நட்சத்திரங்களுக்குச் சந்திரன் அணிகலன். கணவன் மனைவிக்கு அணிகலன். அரசன் குடிகளுக்கு அணிகலன். கல்வியறிவோ அனைவருக்கும் அணிகனாகும்.

வாழ்விலும் தாழ்விலும், பஞ்சத்திலும், பகை மூண்ட காலத்திலும், அரண்மனை வாசலிலும், சுடுகாட்டிலும் எவன் நம்மைக் கைவிடாமல் இருக்கிறானோ அவனே நம் உறவினன்.

உன் சுதந்திரத்து ஆபத்து நேரும்படி, உன் நண்பனுக்குச் சுதந்திரம் அளிக்காதே.

பொய் சொல்லுவது, ஆத்திரப்படுவது, கபடம், முட்டாள்தனம், எல்லையில்லாத பேராசை, அசுத்தம், கருணையின்மை இதுப்பொன்ற அநேக நோய்கள் தீயவர்களிடம் இயல்பாகவே உண்டு.

மனிதனுக்கு மிகவும் துன்பத்தைக் கொடுக்கக் கூடியது முட்டாள்தனம். அதனால், இளமைக்காலத்திலும் மனிதன் துக்கத்தின் மேல் துக்கம் அனுபவிப்பான்.

அனைத்துக் கஷ்டங்களையும் விட மிகவும் வருத்தம் கொடுப்பது எது என்றால் பிறர் வீட்டில் சென்று வாழ்வதுதான்.

தாய் தந்தையின் கடமை தமது பிள்ளைகளுக்கு நல்ல கல்வியறிவு கொடுப்பதுதான்.

கிணற்றில் தண்ணீர் இறைக்கும் போது கயிறு கூட தினமும் கல்லின் மீது உறைந்து உறைந்து ஓர் அடையாளத்தை உண்டாக்கி விடுகிறது. கொஞ்சம் கொஞ்சமாகப் படித்தால் கூட முட்டாள் ஒருவன் புத்திமானாகக் கூடும்.

தானம் கொடுப்பது, அருள் நூல்களைப் படிப்பது போன்ற நல்ல ஒழுக்கங்களைத் தங்களது வாழ்க்கையில் கடைப்பிடிக்க ஒவ்வொருவரும் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

கெட்ட நடத்தையுள்ளவனையும், மகா பாவி என்று கருதப்படுபவனையும், கெட்ட இடத்தில் வசிப்பவனையும், துஷ்டர்களுடன் சினேகம் கொள்வதையும் அறவே ஒருவன் விடுவிட வேண்டும். ஏனென்றல், இந்த வகையான மக்களின் தொடர்பால் மனிதன் சீக்கிரம் அழிந்து போகிறான். அதாவது கெட்டது எது என்று தெரிந்த பின் அந்தச் சேர்க்கையை மனிதன் பின்பற்றக் கூடாது.
தொகுப்பு:- தேனி.பொன். கணேஷ்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.