நீதி சதகம் கூறும் நீதிகள்

எந்த உயிரையும் அழிக்காமை, பிறர் பொருளைக் கவராமை, பொய் பேசாமை, காலத்திற்கும் சக்திக்கும் இயைந்த வண்ணம் தானம் செய்தல், பிறருடைய மனைவிமார்களைப் பற்றிப் பேசாமை, ஆசையின் வேகத்தைத் தடுத்தல், பெரியோர்களிடம் வணக்கம், எல்லா உயிர்களிடமும் இரக்கம் காட்டுதல் இவையே உத்தம வாழ்க்கைக்கு உரிய பொது வழியாகும்.

நீதிநெறி வழுவாத பிரியமான நடத்தை, உயிருக்கு ஆபத்து ஏற்பட்ட பொழுதும் பாவம் செய்யாமை, தீயவர்களுக்கு வணங்காமை, ஏழைகளான நண்பர்களிடம் பொருளுதவி நாடாமை, கொடிய ஆபத்திலும் நிலை தவறாமை, மகான்களுடைய நடத்தையைப் பின்பற்றுதல் ஆகிய இவை கத்தி முனை மேல் நடத்தல் போல் கடினமானது.

கல்வியால் அலங்கரிக்கப்பட்டவனாக இருந்தாலும், தீயவனுடைய சகவாசம் விலக்கப்பட வேண்டும்.

சங்கீதமோ இலக்கியமோ, வேறு கலைகளோ ஒன்றும் தெரியாத மனிதன் வாலும் கொம்பும் இல்லாத பசுவைப் போன்றவன். புல்லைப் புசிக்காமல் உயிருடன் இருப்பது ஒன்றுதான் அவனுடைய பாக்கியம்.

எவரிடம் கல்வியோ, தானமோ, தவமோ, ஞானமோ, நன்னடத்தையோ, நல்ல குணங்களோ இல்லையோ அவர்களின் மனிதர்களிடையே பூமிக்குப் பாரமாக மனித உருவத்தில் உலவி வரும் விலங்குகளே ஆவர்.

கையிலிருந்து கீழே எறியப்பட்ட பந்து மீண்டும் மேலேயே கிளம்பும். அநேகமாக நல்லோர்களை விபத்து தாழ்த்தினாலும், அவர்கள் அதில் நில்லாமல் மேலேயே கிளம்புவார்கள்.

ஆசையை ஒழி; பொறுமையைக் கைக்கொள்; கொழுப்பை அடக்கு; பாவத்தில் மனதைச் செலுத்தாதே; சத்தியத்தைப் பேசு; மதிப்புடையவர்களுக்கு மரியாதை செய்; எதிரிகளைச் சமாதானப்படுத்து; உன் குணங்களைப் பிரகடனம் செய்யாதே; கீர்த்தியைக் காப்பாற்றிக் கொள்; துன்புற்றவர்களுக்கு இரங்கு. இவைதான் நல்லவர்களுக்கு அடையாளம்.

துர்மந்திரிகளால் மன்னன் நாசமடைகிறான். உலகப் பற்றால் துறவி நாசமடைகிறான். செல்வம் கொடுத்துச் சீராட்டுவதால் புத்திரன் கெடுகிறான். வேதம் ஓதாததால் பிராமணன் கெடுகிறான். கெட்ட பிள்ளையால் குடும்பம் அழிகிறது.

கெட்டவர்களுடன் கூடிப் பழகுவதனால் நடத்தை அழிகிறது. வெட்கம் குடியினால் கெடுகிறது. வேளாண்மை நிலத்தைப் பாராமையால் கெடுகிறது. சிநேகம் மரியாதைக் குறைவால் கெடுகிறது. நிறைவு முறைகேட்டால் கெடுகிறது. செல்வம் ஊதாரித்தனத்தால் கெடுகிறது.

சாணையினால் மெருகேறிய ரத்தினம், போரில் ஆயுதங்களால் காயப்படுத்தப்பட்ட வெற்றி வீரன், மதப்பெருக்கால் மெலிந்த யானை, கோடைக்காலத்தில் நீர் வற்றி மணல் திட்டுடன் விளங்கும் நதி, ஒரே கலை எஞ்சியுள்ள சந்திரன், கவலையால் மெலிந்த இளம்பெண்ணின் அழகு, யாசகர்களுக்குக் கொடுத்துச் செல்வச் செழிப்பு குறைந்தவர்களின் பெருமை ஆகிய எல்லாம் குறைவினால் பிரகாசிக்கின்றன.

கைக்கு அழகு நன்கொடை, தலைக்கு அழகு பெரியோர் பாதச்சேவை, முகத்துக்கு அழகு உண்மையான சொல், புஜங்களுக்கு அழகு ஒப்பற்ற பராக்கிரமம், மனத்திற்கு அழகு நல்லொழுக்கம், செவிக்கு அழகு நல்ல சாத்திரங்களைக் கேட்டல்.

விபத்தில் தைரியம், செலவச் செழிப்பில் பொறுமை, சபையில் பேச்சுத் திறமை, போரில் வீரியம், நல்ல புகழில் ஆசை, வேதம் ஓதுவதில் விடாமுயற்சி ஆகியவை மகாத்மாக்களின் பிறவிக் குணங்கள்.

காதுக்கு ஆபரணம் நல்ல கேள்வியேயன்றி குண்டலங்களன்று. கைகளுக்கு ஆபரணம் தானமேயன்றிக் கங்கணங்களன்று. கருணை மிக்கவர்களின் உடலுக்கு ஆபரணம் பரோபகாரமேயன்றி சந்தனப் பூச்சன்று.

பாவச்செயல்களிலிருந்து விலக்கி நல்ல செயலில் ஊக்குவிப்பவர்கள், இரகசியங்களைக் காப்பவர்கள், நல்ல குணங்களைப் பிரகடனம் செய்பவர்கள், ஆபத்தில் கைவிடாதவர்கள், தக்க சமயதில் உதவி செய்பவர்கள் இவைகள்தான் நல்ல நண்பர்களின் அடையாளங்கள்.
தொகுப்பு:- தேனி.பொன். கணேஷ்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.