பிரார்த்தனைக்கு எது முக்கியம்?
ஒருவன் கடவுளை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தால், கடவுள் அவனை நோக்கி, இருபது காதங்கள் எடுத்து வைப்பார்.
- ஈ ஆர்னால்ட்.
கடவுள் கொடுக்கத் தாமதம் செய்தால் அதைக் கடவுள் கொடுக்க மறுக்கிறார் என்று கொள்ளாதே.
- டிரையன் எட்வர்ட்ஸ்.
மனிதன் அறிவில்லாதவன். கண் இல்லாதவன். நாம் பிரார்த்தனையில் கடவுளைக் கேட்கும் சில விசயங்களை, அவர் நம் மீது கொண்டுள்ள அன்பின் காரணமாகக் கொடுக்காமல் இருப்பதால்தான். நாம் பிழைத்திருக்கிறோம். இல்லையானால், நம்மை நாமே அழித்துக் கொண்டிருப்போம்.
- ஹன்னா மோர்.
நான் வேண்டிக் கொண்டதையெல்லாம் கடவுள் எனக்குக் கொடுக்கவில்லையென்று நான் எத்தனை சந்தோசப்படுகிறேன். தெரியுமா?
- ஜீன் இங்கிலோ.
ஆத்மாவைக் கடவுளிடம் கொண்டு செல்லும் இறக்கைகள் பிரார்த்தனையாகும். கடவுளைக் காண நமக்கு உதவும் கண்கள் தியானமாகும்.
- அம்பிரோன்.
பிரார்த்தனைக்கு இதயம்தான் முக்கியமேயொழிய வார்த்தைகள் அல்ல. இதயமற்ற வார்த்தைகளால் பலனில்லை. ஆனால் வார்த்தையின்றி இதயத்தால் எவ்வளவோ சாதிக்க முடியும்.
- பனியன்.
நம்முடைய பிரார்த்தனையும், கடவுளுடைய அருளும் கிணற்றின் ராட்டையில் தொங்கும் இரண்டு வாளிகள் போலாகும். ஒன்று மேலே போகும் போது, இன்னொன்று கீழே இறங்குகிறது.
- ஹாப்கின்ஸ்.
கடவுள் எங்கோ வெகு தொலைவில் இருக்கிறார். ஆனால், பிரார்த்தனையோ அவரை பூமிக்கு இழுத்துக் கொண்டு வருவதுடன், அவருடைய சக்தியையும் நம்முடைய முயற்சியையும் இணைக்கிறது.
- மாட் டீ காஸ்பெரின்.
எனக்கு வேறு ஒரு வழியும் தென்படவில்லையானால் நான் உடனே முழந்தாளிட்டு, கடவுளைப் பிரார்த்தனை செய்ய ஆரம்பிப்பேன். என் அறிவோ, என்னைச் சுற்றி இருந்தவர்களின் அறிவோ என்னைக் காப்பாற்றும் என்று நான் என்றும் கருதியதில்லை.
- ஆபிரகாம் லிங்கன்.
தொகுப்பு:- கணேஷ் அரவிந்த்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.