ஸ்ரீ ராமகிருஷ்ணர் அருளிய பொன்மொழிகள்
சடங்குகள் அவசியம்தானா?
நெல்லிலிருக்கும் அரிசிதான் அதை முளைக்கச் செய்வதற்கு அவசியமானதென்பதும், அதன் மேலிருக்கும் உமி பயனற்றதென்பதும் சாதாராணமான கருத்து. இருப்பினும், உமி நீங்கிய அந்த அரிசியை விதைத்தால், அது முளைத்துப் பயிராகி நெல் விளைவதில்லை. நெல் விளைய வேண்டுமானால் உமியுடன் கூடிய தானியத்தை அப்படியே விதைக்க வேண்டும். சாப்பிடுவதற்கு அரிசி வேண்டும்போது நெல்லிலிருந்து உமியைப் பிரித்து நீக்க வேண்டும். அது போல ஒரு தர்மம் நிலைத்து வளர்வதற்குக் கிரியைகளும் சடங்குகளும் அவசியம். முளைக்கும் வித்தாகிய உண்மையை அவை தம்முள் பொதிந்து வைத்திருக்கின்றன. ஆதலால், ஒவ்வொரு மனிதனும் அவற்றுள் அடங்கியிருக்கும் உண்மையை (தத்துவப் பொருளை) அடையும் வரையில் அவைகளைச் செய்து கொண்டுதான் இருக்க வேண்டும்.
மனிதன் உடல் எப்படிப்பட்டது?
மனித உடல் ஒரு பானையைப் போன்றது. மனம், புத்தி, இந்தீரியங்கள் அப்பானையில் போடப்பட்ட அரிசி, உருளைக்கிழங்கு, ஊற்றப்பட்ட நீர் போன்றவைகளுக்குச் சமமானது. இவைகளையெல்லாம் அடங்கிய அந்தப் பானையை அடுப்பில் வைத்து நெருப்பு கொண்டு சூடாக்கினால், நெருப்பு அவைகளை மிகச் சூடாக்கும். அவைகளை ஒருவன் தொட்டால் அவனுடைய விரல்களைச் சுட்டுவிடும். இருப்பினும், அந்தச்சூடு உண்மையில் பானையுடையதன்று. நீர், அரிசி, உருளைக்கிழங்கு இவைகளுடையதுமன்று. அதுபோலவே, மனிதனிடமுள்ள பிரம்மத்தின் சக்தியால்தான் அவனுடைய மனம், புத்தி, இந்தீரியங்கள் எல்லாம் தத்தம் வேலைகளைச் செய்கின்றன. அந்தச் சக்தி வேலை செய்யாமல் நிற்கும் போது இவைகளும் தங்கள் தொழிலைச் செய்யாமல் நின்றொழியும்.
மனிதன் எப்போது சுத்தமானவனாக ஆகிறான்?
தயிரைக் கடைந்து வெண்ணெய்யை எடுத்த பின்பு அவ்வெண்ணெய்யை அதே பாத்திரத்தில் மோருடன் வைக்கக் கூடாது. அப்படி வைத்தால் அதன் ருசி குறையும். அது நெகிழ்ந்து போகும். அதை வேறு பாத்திரத்தில் சுத்த நீரில் போட்டு வைக்க வேண்டும். அதுபோல், உலக வாழ்க்கையில் இருக்கும் போது ஒருவாறு பக்குவம் அடைந்த ஒருவன், மேலும் உலக மக்களுடன் கலந்து உலகப் பாசங்களிடையே இருந்தால், அதனுடைய நிலைக்குச் செல்லக் கூடும். உலகத்தைத் துறந்து விட்டால் மட்டுமே அவன் சுத்தமானவனாகக் கூடும்.
ஆத்மா வெளிப்படுவது எப்போது?
வண்ணத்துப் புழு, தான் கட்டும் கூட்டுக்குள்ளேயே சிக்கிக் கொள்கிறது. அதுபோல, உலகப் பற்றுடைய ஆத்மா அதனுடைய ஆசைகளாகிய வலையில் சிக்கிக் கொள்கிறது. ஆனால், அந்தப் புழு ஓர் அழகிய வண்ணத்துப் பூச்சியாக மாறும் பொழுது, கூட்டை உடைத்துக் கொண்டு வெளியே வந்து வெளிச்சத்தையும், காற்றையும் மகிழ்ச்சியோடு அனுபவிக்கிறது. அதுபோல விவேகம், வைராக்கியம் என்ற இரண்டு சிறகுகளால் உலகப் பற்றில் உழலும் ஆத்மாவானது, மாயையாகிய வலையைக் கிழித்துக் கொண்டு வெளிப்படக் கூடும்.
அவதார புருசர்கள் யாருக்குத் தெரிகிறார்கள்?
தீபம் தன்னைச் சுற்றியுள்ள பொருள்களை விளக்கிக் காட்டுமாயினும், அதனடியில் எப்போதும் இருட்டாகத்தானிருக்கும். அதுபோல, அவதார புருசர்க்கு வெகு அருகிலிருப்பவர்கள் அவரைத் தெரிந்து கொள்வதில்லை. தொலைவிலுள்ளவர்கள் அவ்வவதார புருசருடைய ஆத்ம ஜோதியாலும், அசாதாரணமான சக்தியாலும் மனங்கனிந்து இன்பமடைகின்றனர்.
தொகுப்பு:- கணேஷ் அரவிந்த், திருநெல்வேலி.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.