அச்சப்படலாமா?

அடக்கப்படாமல் உள்ள மனமும், அறவழியில் செலுத்தப்படாத மனமும் நம்மை எப்போதும் கீழ் நோக்கியே இழுத்துச் சென்று அழித்துவிடும். அடக்கப்பட்ட மனமும், அறவழியில் செல்லும் மனமும் நமக்குப் பாதுகாப்பை அளித்திடும். உலகபந்தங்களில் இருந்து விடுதலையளிக்கும்.

அச்சமே நமக்குத் துயரத்தைத் தருவது. அச்சமே கேட்டை விளைவிப்பது. அச்சமே மரணத்தைத் தருவது. நமது உண்மை இயல்பை நாம் அறிந்து கொள்ளாமல் இருப்பதனால்தான் நமக்கு அச்சம் ஏற்படுகின்றது.

அன்புடையவனே வாழ்பவன். சுயநலமுடையவனோ செத்துக் கொண்டிருக்கின்றான் என்றே பொருள்.

அன்பு நெறியிற் சென்று உலகம் உய்வடைந்திட வழிகளைக் கூறும் முறை மதம் எனப்படும்.

அவரவர் விதி அவரவர் கையிலேயே இருக்கிறது.

அடிமைகளின் குணமாகிய பொறாமையை முதலில் அழித்துவிடு.

அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டு வந்து தந்தே தீரும்.

இரக்கம் உள்ள இதயம், சிந்தனை ஆற்றல் படைத்த மூளை, வேலை செய்யக்கூடிய கைகள் ஆகிய இந்த மூன்றும் நமக்குத் தேவை.

இவ்வுலகில் பிறந்த நீங்கள் அதற்கு அடையாளமாக ஏதேனும் விட்டுச் செல்லுங்கள். இல்லையேல் உங்களுக்கும் மரங்கள் கற்களுக்கும் வேறுபாடு இல்லாமற் போய்விடும்.

இருதயம் விரிவடைந்துள்ள இடத்தில்தான் உண்மை ஞானம் உதிக்கும். அந்த உண்மை ஞானம்தான் நம்பிக்கை.

உறுதியுடன் இரு, அதற்கு மேலாகத் தூய்மையானவனாகவும், முழு அளவில் சிரத்தை உள்ளவனாகவும் இரு.

உலகில் உள்ள மக்கள் உன்னை புகழ்ந்தாலும் சரி இகழ்ந்தாலும் சரி நீ. உண்மை என்னும் பாதையிலிருந்து அணுவளவேனும் பிறழாமல் கவனமாக இருக்க வேண்டும்.

உண்மைக்காக எதையும் துறக்கலாம்; ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்காதே.

உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!

உற்சாகமாக இருக்கத் தொடங்குவதுதான் வெற்றிகரமான வாழ்க்கை வாழத் தொடங்குவதற்கான முதல் அறிகுறி.

உங்களால் யாருக்கும் உதவி செய்ய முடியாது. மாறாகச் சேவைதான் செய்ய முடியும்.

உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன.

எந்த வேலையாக இருந்தாலும் அதைத் தன் விருப்பத்திற்கு ஏற்றதாக மாற்றுபவனே அறிவாளியாவான்.

எவர் ஒருவருடைய நெஞ்சு ஏழை மக்களுக்காகத் துயரத்தில் அழுமோ, அவரையே நான் மகாத்மா என்பேன்.

எதை நீ நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்!
தொகுப்பு:- கணேஷ் அரவிந்த், திருநெல்வேலி.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.