
தன் மனத்தை அடக்க முடிந்தவனால் மற்ற எல்லா மனங்களையும் கட்டாயமாக அடக்க முடியும். இதனாலேயே தூய்மையும் ஒழுக்கமும் எப்போதும் மதத்தின் நோக்கமாக வைக்கப்பட்டுள்ளன. தூய்மையும் ஒழுக்கமும் வாய்ந்தவன் தன்னை அடக்கி ஆள்கிறான். எல்லா மனங்களும் ஒரே தன்மையுடையவை.
*****

ஒரே பெரிய மனத்தின் பகுதிகள். களிமண் கட்டி ஒன்றை அறிந்தவன், பிரபஞ்சத்திலுள்ள களிமண் அனைத்தையும் அறிந்தவன் ஆகிறான். தன் மனத்தை அறிந்து அடக்குபவன் ஒவ்வொரு மனத்தையும் பற்றிய ரகசியத்தை அறிகிறான். ஒவ்வொரு மனத்தையும் அடக்க வல்லவன் ஆகிறான்.
*****

பழத்தைக் கொண்டு மரம் அறியப்படுகிறது. உருவ வழிபாட்டினர் என்று கூறப்படுபவர்களுள் ஒழுக்கத்திலும் ஆன்மீகத்திலும் பக்தியிலும் ஈடிணையற்று விளங்குபவர்களை நான் காணும்போது, `பாவத்திலிருந்து புனிதம் பிறக்குமா?' என்று என்னை நானே கேட்டுக் கொள்கிறேன்.
*****

என் சகோதரர்களே, சுவாசிக்காமல் உயிர்வாழ முடியாதது போல், உள்ளத்தில் ஓர் உருவத் தோற்றமின்றி, நாம் எதனையும் நினைத்துப் பார்க்க முடியாது. தொடர்பு விதியின்படி, புற உருவம் அகக்கருத்தையும், அகக்கருத்து புற உருவத்தையும் நினைவுபடுத்துகிறது. அதனால்தான் இந்து வழிபடும்போது, ஒரு புறச்சின்னத்தைப் பயன்படுத்துகிறான். தான் வழிபடும் பரம்பொருளின் மீது சிந்தையைப் பதியச்செய்வதற்கு அது உதவுகிறது என்று அவன் கூறுவான். அந்த உருவம் கடவுள் அல்ல, அது எங்கும் நிறைந்தது அல்ல என்று உங்களைப் போல் அவனுக்கும் தெரியும். எங்கும் நிறைந்தது என்று சொல்லும்போது பெரிதாக என்னதான் புரிந்து கொள்ள முடியும்? அது ஒரு சொல், சின்னம் மட்டுமே. இறைவனுக்குப் பரப்பு இருக்க முடியுமா என்ன? எங்கும் நிறைந்தவர் என்று நாம் திரும்பத்திரும்பச் சொல்லும்போது, மிஞ்சிப் போனால், விரிந்த வானையும் பரந்த வெளியையும் நினைக்கலாம், அவ்வளவுதான்.
*****

அருள் வெளிப்பாடான வேதங்களிலிருந்து இந்துக்கள் தங்கள் மதத்தைப் பெற்றுள்ளனர். வேதங்களுக்குத் துவக்கமும் முடிவும் இல்லை என்பது அவர்கள் கூற்று. ஒரு நூலுக்குத் துவக்கமோ முடிவோ இல்லாதிருக்குமா, அது அபத்தம் என்று உங்களுக்குத் தோன்றும். ஆனால் வேதங்கள் என்று குறிப்பிடப்படுவது நூல்கள் அல்ல. வெவ்வேறு மக்களால், வெவ்வேறு காலங்களில் திரட்டி வைக்கப்பட்ட ஆன்மிக விதிகளின் கருவூலமே வேதங்கள். புவியீர்ப்பு விதி, அது கண்டறியப்படும் முன்னரே இருந்தது, மனித இனம் முழுவதும் அதை மறந்துவிட்டாலும் அது இருக்கும். அவ்வாறுதான் ஆன்மிக உலகின் விதிகளும். ஓர் ஆன்மாவிற்கும் இன்னோர் ஆன்மாவிற்கும், தனிப்பட்ட ஆன்மாக்களுக்கும் அனைத்து ஆன்மாக்களின் தந்தைக்கும் இடையே உள்ள தார்மீக, ஆன்மிக, நீதிநெறி உறவுகள், அவை கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னரும் இருந்தன, நாம் அவற்றை மறந்தாலும் இருக்கும்.
*****

நமது குடும்பங்களில் தலைவர்கள் உள்ளனர். அவர்களுள் சிலர் வெற்றி பெறுகின்றனர். சிலர் பெறுவதில்லை. ஏன்? நாம் தோல்வியுறும்போது பிறரைக் குறை கூறுகிறோம். நாம் வெற்றி பெறாத அந்தக் கணமே, நமது தோல்விக்குக் காரணம் இவர்தான் என்று ஒருவரைக் காட்டிவிடுகிறோம்.
*****

தோல்வியுறுகின்ற யாரும் தனது சொந்தக் குற்றங்களையும் பலவீனங்களையும் ஒப்புக் கொள்ள விரும்புவதில்லை. தன்னைக் குற்றம் அற்றவனாகக் கருதவும், குற்றத்தைப் பிறர் மீதோ, பிற பொருளின் மீதோ, ஏன் துரதிர்ஷ்டத்தின் மீதாவது சுமத்தவுமே ஒவ்வொருவனும் முயல்கிறான். குடும்பத் தலைவர்கள் தவறும்போது, சிலர் குடும்பத்தை நன்றாக நடத்துவதற்கும், பிறர் அவ்வாறு நடத்தாததற்கும் காரணம் என்ன என்பதைத் தங்களுக்குள் கேட்டுக் கொள்ள வேண்டும். வேறுபாட்டிற்குக் காரணம் மனிதனே, அவனது குணச்சிறப்பே, அவனது ஆளுமையே என்பதை அப்போது காண்பீர்கள்.
*****

உடல் ஒவ்வொரு நிமிடமும் அழிந்து கொண்டே இருக்கிறது. மனமோ தொடர்ந்து மாறியபடி இருக்கிறது. உடல் பலவற்றின் சேர்க்கை, மனமும் அத்தகையதே, எனவே இவை எல்லா மாறுதல்களுக்கும் அப்பாற்பட்ட நிலையை அடைய முடியாது. ஆனால் தூலப் பொருளான இந்த மெல்லிய உறையையும், இதற்கு அப்பாலுள்ள மனம் என்ற நுட்பமான உறையையும் தாண்டி இருக்கிறது ஆன்மா. இதுவே மனிதனது உண்மைத் தத்துவம். இது நிலையானது. என்றுமே பந்தப்படாதது. இதன் அழியாமை, சுதந்திரம் ஆகிய தன்மைகளே எண்ணம், ஜடப் பொருள் போன்ற போர்வைகளை ஊடுருவி, பெயர் உருவம் என்ற நிறங்களைக் கடந்து, சுதந்திரம் அழியாமை என்ற தன்மைகளை வற்புறுத்தி நிற்கிறது.
*****

நண்பர்களே, உலகமே ஒரு பைத்தியக்கார விடுதி. சிலர் உலக இன்பத்திற்காகப் பித்தர்களாக உள்ளனர். சிலர் பெயருக்காக, சிலர் புகழுக்காக, சிலர் பணத்திற்காக, சிலர் முக்தியடைவதற்காக, இன்னும் சிலர் சொர்க்கம் செல்ல. இந்த பித்தர்கள் கூட்டத்தில் நானும் ஒரு பித்தன். நான் இறைவனுக்காகப் பித்தனாக ஆனேன். நீ பணத்திற்காகப் பித்துப் பிடித்து அலைகிறாய். நான் கடவுளுக்காகப் பித்தன் ஆனேன். நீயும் பைத்தியம். நானும் பைத்தியம். என் பைத்தியம் தான் சிறந்தது என்றே நான் நினைக்கிறேன்.
*****

நம் கண்ணுக்குப் புலனாவதான தூலவுடல் பருப்பொருளால் ஆனது. எனவே அது தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது. மாறுபடுகிறது. உட்கருவிகளான மனம், புத்தி, நான் - உணர்வு என்பவை மிக மிக நுட்பமான பொருளால் ஆனவை. எனவே பல யுகங்களானாலும் அவை அழியாமல் இருக்கும். வேறு எதுவுமே தடை சய்ய முடியாத அளவிற்கு நுட்பமானவை இவை. இவை எந்தத் தடைகளையும் கடந்துவிடும். இந்தத் தூலவுடல் அறிவற்றது, நுண்ணுடலும் அதுபோன்றது தான். ஆனால் இது சற்று நுட்பமான ஜடப்பொருளால் ஆக்கப்பட்டுள்ளது.
*****

கல்வி, பயிற்சி இவை அனைத்தின் லட்சியமும் இந்த மனிதனை உருவாக்குவதாகவே இருக்க வேண்டும். ஆனால் அதற்குப் பதிலாக நாம் வெறும் மேற்பூச்சு பூசி அழகுபடுத்த முயன்று வருகிறோம். அகத்தே ஒன்றும் இல்லாத போது புறத்தை அழகுபடுத்துவதால் என்ன பயன்? எல்லா பயிற்சிகளின் பயனும் நோக்கமும் மனிதனை வளரச் செய்வதே. தன் சகோதர மக்கள் மீது ஆதிக்கம் செலுத்துபவன், அவர்கள் மீது மாய வலையை வீசியது போன்று அவர்களைக் கவர்பவன் ஆற்றலின் ஒரு சுரங்கமாகிறான். அத்தகையவன் தயாராகும்போது, விரும்புகின்ற எதையும் அவனால் செய்ய முடியும். அவனது ஆளுமையின் ஆதிக்கம், எதன் மீது செலுத்தப்பட்டாலும் அதனைச் செயல்பட வல்லது ஆக்கும்.
*****

குளத்தின் அடியிலிருந்து நீர்க்குமிழி கிளம்புகிறது. அது வந்து கொண்டிருக்கும் போதெல்லாம் அதை நாம் காண்பதில்லை. நீர்மட்டத்திற்கு வந்து வெடிக்கும் போது மட்டுமே பார்க்கிறோம். அது போலவே, எண்ணங்கள் பேரளவிற்கு முதிர்ந்த பிறகே, அதாவது அவை செயல்களான பின்பு மட்டுமே அவற்றை நாம் உணர முடியும்.

நமது செயல்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை, எண்ணங்களை அடக்க முடியவில்லை என்று அடிக்கடி நாம் முறையிடுகிறோம். எப்படி அடக்க முடியும்? நுண் இயக்கங்களை நாம் அடக்க முடிந்தால், அது எண்ணமாகும் முன்பே, செயலாகும் முன்பே, அதன் மூலத்தை நாம் பற்ற முடியுமானால் மட்டுமே அதனை முழுமையாக நாம் அடக்க முடியும். இந்த நுண்ணிய சக்திகளை, நுண்ணிய காரணங்களைப் பகுக்கவும், ஆராயவும், அறியவும், இறுதியாக, அடக்கியாளவும் முறை ஒன்று இருக்குமானால் அப்போதுதான் நம்மை நாம் அடக்க முடியும்.
*****

நம்மைச் சுற்றி நடப்பதை நீங்கள் காண்கிறீர்கள். அனைத்தின் மீதும் ஆதிக்கம் செலுத்தும் ஒன்றாக உள்ளது உலகம். நமது சக்தியில் ஒரு பாகம் நமது சொந்த உடலைப் பாதுகாப்பதற்குச் செலவாகிறது. இதைத் தவிர ஒவ்வொரு சிறு பகுதியும் அல்லும் பகலும் பிறர்மீது ஆதிக்கம் செலுத்தவே பயன்படுகின்றன.
*****

நமது உடல்கள், நமது குணங்கள், நமது அறிவு, நமது ஆன்மீகம் எல்லாமே இடைவிடாமல் பிறர் மீது ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கின்றன. அதைப் போல் நாமும் அவற்றின் ஆதிக்கத்திற்கு உள்ளாகி வருகிறோம். இது நம்மைச் சுற்றி எஙகும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.
*****

நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவு தான் நம்மால் செய்ய முடியும். பிறரைக் கவனிப்பதைச் சிறிது காலம் விட்டுவிட வேண்டும். வழியை பூரணமாக்குவோம். இலட்ச்சியம் தன்னைதானே பாதுகாத்துக் கொள்ளும். ஏனெனில் நம் வாழ்வு நல்லதாகவும் தூய்மையானதாகவும் இருந்தால் தான் உலகம் நல்லதாகவும் தூயதாகவும் இருக்க முடியும். அது ஒரு குறிக்கோள். நாமே வழி. ஆதலால் நம்மை நாம் தூய்மையாக்கிக் கொள்வோம், நம்மை நாம் பூரணமாக்கிக் கொள்வோம்.
*****

நாம் அனைவரும் உள்ளத்தாலோ உடலாலோ ஏதோ ஒரு செயலை செய்து கொண்டிருக்கிறோம். அந்த செயல்கள் யாவும் நம் மீது, தமது அடையாளத்தை பொறித்துவிட்டு அகல்கிறது. நல்லதை செய்தால் நல்ல அடையாளம், கெட்டதை செய்தால் அதற்கேற்ற முத்திரையைக் குத்துகிறது..