நரி உபதேசம் பண்ணத் தொடங்கினால்...

சிறிய கடன் கடனாளியை உருவாக்கும். பெரிய கடன் எதிரியை உருவாக்கும்.
- சைரஸ்.

ஒரு நல்ல நண்பன் நூறு இனத்தார்க்குச் சமம்.
– பிரான்ஸ்.

பக்தியோடு பிரார்த்தனை செய். ஆனால் சுத்தியலைப் பலமாக அடி.
– இங்கிலாந்து.

அறிவு தலைக்கு கீரீடம், அடக்கம் காலுக்குச் செருப்பு.
– ஹீப்ரு.

உன் அயலானை நேசி, ஆனால் வேலியை எடுத்து விடாதே.
– டென்மார்க்.

நரி உபதேசம் பண்ணத் தொடங்கினால், உன் கோழிகளைக் கவனி.
– அல்பேனியா.

ஒரு கணத்தில் இழந்த மானத்தை ஓராயிரம் ஆண்டுகளானாலும் பெற்றுவிட முடியாது.
– இத்தாலி.

உழைப்பிற்கு ஓர் உதாரணம் எறும்பு, மற்றொன்று இதயம்.
– அமெரிக்கா.

பணமும் மகிழ்ச்சியும் பரம விரோதிகள். ஒன்று தங்குமிடத்தில் மற்றொன்று தங்காது.
– பிலிப்பைன்ஸ்.

எது தேவை? முடிவு செய்ய மனம், வழி வகுக்க அறிவு, செய்து முடிக்க கை.
– கிரேக்கம்.

சம்பாதிப்பதால் ஒருவன் பணக்காரனாவதில்லை. சேமித்து வைப்பதால்தான் அந்த நிலையை அடைகிறான்.
– பின்லாந்து.

மூடத்தன நோயை முற்றாக விரட்டும் மூலிகைகளே புத்தகங்கள்.
– சீனா.

சோம்பல் அனைத்தையும் கடினமாக்கும். சுறுசுறுப்பு அனைத்தையும் எளிதாக்கும்.
– ஜப்பான்.

திறமைசாலிகளை நைல் நதியில் தள்ளினாலும் மீனைக் கவ்விக்கொண்டு கரைக்கு வந்துவிடுவார்கள்.
– அரேபியா.

இரக்கத்தை அறிந்தவன் எல்லாம் அறிந்தவன்.
– பிரெஞ்சு.

உண்மையை மறைப்பதும் பொய் சொல்வதற்கே ஒப்பாகும்.
– ரஷ்யா.

சிறிய புண்களையும் ஏழை உறவினர்களையும் ஒரு போதும் அலட்சியம் செய்யாதீர்கள்.
– ஸ்வீடன்.
தொகுப்பு:- கணேஷ் அரவிந்த், திருநெல்வேலி.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.