* மேடைப் பேச்சு என்பது காலட்சேபமுமல்ல. வசன சங்கீதமும் அல்ல. இனிமைச் சுவையை எல்லோருக்கும் அளிக்கும் நா வாணிபமும் அல்ல. கைகட்டி கேட்கும் மக்கள் எதிரே நடத்தும் உபதேசமுமல்ல. உயிர்ப் பிரச்சினைகளைப் பற்றியக் கருத்துக்களை வெளியிடும் களம், மேடை.
* புஞ்சையிலே நஞ்சைப் பயிர் பலிக்காது. குளிர்ப்பிரதேச விளைவு, கொதிப்புள்ள இடத்திலே பயிராகாது. அவை போலத்தான் புராண ஏடுகளை மட்டும் படித்துப் பயிலுவோரிடம் அறிவுத் தெளிவு ஏற்பட முடியாது.
* ஒரு சிலரின் ஆசைக்கு மிகப் பலரை பலியாக்குவதுதான் முதலாளித்துவத்தின் முடிந்த கொள்கை. சக்திக்கேற்ற உழைப்பு, தேவைக்கேற்ற வசதி என்பதுதான் சமதர்மத் திட்டத்தின் அடிப்படை நோக்கம்.
* அவசியமானது - ஆகவே செய்யப்பட வேண்டியது என்பதல்ல முதலாளித்துவம். இலாபகரமானது - ஆகவே, செய்யப்பட வேண்டியது என்பதுதான் முதலாளித்துவம்.
* கட்டுப்பாடும், ஒழுங்கும் கட்டாயம் நமக்குத் தேவை. இவை சாதாரணமானவைதான். ஆனால் இம்மாதிரி சாதாரண விஷயங்களைக் கொண்டுதான் ஒரு சமூகத்தை எடை போட முடியும்.
* வெட்டிப்பேச்சைத் தட்டி நடக்கும் தீரம், வீணரின் கொட்டத்தை அடக்கியாக வேண்டுமென்ற வீரம், அநீதியைக் கண்டால் கொதித்தெழுந்து தாக்கும் பண்பு - இவை, வயோதிகரை விட வாலிபர்களிடையேதான் மிகுந்திருக்கும்.
* பொதுவுடமை வாழ்வு என்றால் என்ன என்று கேட்கிறீர்களா - அது ஒரு புத்தம் புதிய நிலை. புண்ய பாவத்தை விரட்டிய நிலை. தத்தளிப்பைத் தவிர்த்த நிலை. தாசர், நீசர் என்னும் பேச்சை ஒழித்த நிலை. ஏழ்மை வறுமை இல்லாத நல்ல நிலை.
* பணக்கார உலகம் இருக்கிறதே அது மிகவும் விசித்திரமானது. பணம் மட்டும் இருந்துவிட்டால் அங்கே, முட்டாள்களும் புத்திசாலியாகப் போற்றப்படுவர். கோழையும் வீரர் பட்டம் பெறுவான். ஆனால் இது முறையா? சரியா? நாமும் இதை ஏற்கத்தான் வேண்டுமா?
* வைரம் ஜொலிக்க வேண்டுமானால், சானை பிடிக்கத்தான் வேண்டும். தங்கம் பிரகாசிக்க வேண்டுமானால் தணலில் காய்ச்சத்தான் வேண்டும். ஆம் அதைப்போல், நல்வாழ்வு பெற வேண்டுமானால் நாம் பகுத்தறிவுப் பாதையில் செல்லத்தான் வேண்டும்.
* பல திறப்பட்ட கருத்துக்கள் உலவி ஒன்றோடொன்று போரிடும் தன்மை படைத்ததோர் போர்க்களம்தான் பேச்சு மேடை. அந்தக் களத்திலே பரிசும் உண்டு, பகையும் உண்டு.
* விடுதலை பெறுவதற்கு இன்றியமையாதது, அதற்கான உணர்ச்சிக்கு ஊறு நேரிடாதபடி பார்த்துக் கொள்வதும், உணர்ச்சி பெற்றவர்களின் நிலையை உண்டாக்குவதுமாகும்.
* கெட்ட பொருள், குப்பை கூளம், காற்றுப் பொருள் - இவற்றிடம் தீண்டாமை அனுஷ்டிக்கத்தான் வேண்டும். ஆனால், பல கோடி மக்களை, தாய்நாட்டவரை, மூதாதையர் காலம் முதல் நம்முடன் வாழ்ந்து வருபவரைத் தீண்டமாட்டோம் என்று கூறுவது அறிவுடமை ஆகுமா?
* மலர் கொண்டு மாலை தொடுத்தலில் கைத்திறன் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் கைத்திறன் முழுவதும் காட்டி காகிதப் பூமாலை தொடுத்தால் பயன் என்ன? பேச்சுக்கு அழகு தேவைதான். ஆனால் அழகு மட்டுமே இருந்து கருத்து இல்லையானால் என்ன பயன்?
* ஒரு சிறு மின்சார விளக்கு தரும் அளவுக்கு ஒளிபெற நாம் எத்தனை அகல் விளக்குத் தேட வேண்டும்? கணக்குப் போட்டுப் பாருங்கள், பிறகு கூறுங்கள் விஞ்ஞானம் அதிக உழைப்பு எனும் சிறையிலிருந்து நம்மை மீட்டு விடுதலை வீரனாக்குமா, அல்லவா என்பதை!
* நமக்கென்ன என்று கூறும் சுயநலமிகளும், நம்மால் ஆகுமா என்று பேசும் தொடை நடுங்கிகளும், ஏன் வீண் வம்பு என்று சொல்லும் கோழைகளுமல்ல நாட்டுக்குத் தேவை. வீரர்கள் தேவை. உறுதி படைத்த உள்ளங்கள் தேவை.
* அஞ்சாநெஞ்சு படைத்த இலட்சியவாதிகள் தான் ஒரு நாட்டிற்குக் கிடைக்கக் கூடிய ஒப்பற்ற செல்வங்கள். ஏனெனில், பணம் வெறும் இரும்புப் பெட்டியில்தான் தூங்கும். ஆனால் இந்தச் செல்வங்களோ மக்களின் இதயப் பெட்டிகள் தோறும் நடமாடுவார்கள்.
* சீமான்களில் சிலருக்குக் கூட சிற்சில சமயங்களில் ஏழையின் கண்ணீரைத் துடைக்க வேண்டும் என்கிற ஆசை வருவதுண்டு. ஆனால் அந்த ஆசை நிறைவேறுவதில்லை. காரணம், பிரபுக்களின் பட்டுத் துணிகளுக்கு ஏழையின் கண்ணீரைத் துடைக்கும் ஆற்றல் கிடையாது.
* இலட்சியம் வெற்றி பெற வேண்டுமானால் அந்த இலட்சியத்தின் நியாயத்தை விளக்கிவிட்டால் போதாது. அந்த இலட்சியத்திற்குப் பலத்தையும் சேர்த்தாக வேண்டும். ஏனெனில் எவ்வளவு நியாயமான இலட்சியமும் பலத்துடன் கூடி இருந்தாலொழிய வெற்றி பெற முடியாது.
* பேச்சு மேடையில் பெரும்புகழ் பெற விரும்புவோருக்கு அச்சம், தயை, தாட்சண்யத்துக்குக் கட்டுப்பட்டு கருத்தை அடகு வைக்கும் குணமும் இருத்தலாகாது. காட்டுக் குதிரை மீதேறிச் செல்லும் முரட்டுச் சுபாவமும் இருத்தலாகாது.
* அறிவுப் பண்ணைக்குப் பணியாற்ற முன் வருபவர்களை நாடு வரவேற்பதில்லை. நையாண்டி செய்கிறது. மதிப்பளிப்பதில்லை. தொல்லை தருகிறது. எனினும் அந்த ஒரு சிலரால்தான் நாடு முன்னேறுகிறது.