குரங்கை நம்பிப் பணம் கொடுக்கலாமா...?

பூமியில் குடிசை கட்டுவதற்குச் சக்தியற்ற சிலர், ஆகாயத்தில் அநேக அரண்மனைகளைக் கட்டிக் கொண்டிருக்கின்றனர்.
- வேல்ஸ்.

தொடர்ந்து மூன்று நாள் பசித்துக் கிடந்தால், ஒரு மனிதன் திருடவும் துணிவான்.
- கொரியா.

உங்கள் சந்ததியினருக்குச் சரியான இரண்டு வழிகளைச் சொல்லிக் கொடுங்கள். அவை இலக்கியமும் விவசாயமும்.
- சீனா.

தண்டிக்கப்படுகிறவன் திருடனல்ல. திருடிவிட்டு அகப்பட்டுக் கொள்கிறானே அவன்தான் திருடன்.
- செக்கோஸ்லோவேகியா.

பொய்யினால் வரும் இன்பத்தை விட உண்மையால் வரும் துன்பம் எத்தனையோ வகைகளில் சிறந்தது.
- டென்மார்க்.

வாழ்க்கை என்பது வாழும் கலையில் ஒரு பரீட்சை. அதன் முடிவை அறிவதற்குள் நம் வாழ்க்கை முடிந்து விடுகிறது.
- துருக்கி.

உழைப்புதான் ஒரு மனிதனை மற்றொரு மனிதனை விட முந்தச் செய்கிறது.
- நைஜீரியா.

நூறு ஆண்டு வாழ்பவனைப் போல வேலை செய். நாளையே இறந்து விடுபவனைப் போல் சிந்தனை செய்.
- பல்கேரியா.

பிறர் அறியாததை வைத்து அவர்களை மதித்தல் ஆகாது. அறிந்துள்ளதை எவ்விதம் அறிந்திருக்கின்றனர் என்பதை வைத்தே அவர்களை மதிக்க வேண்டும்.
- பிரான்ஸ்.

நீங்கள் விரும்பும் உரிமைகளை எல்லாம் பிறருக்கும் அளித்து விடுங்கள்.
- இங்கர்சால்.

மரியாதையாகப் பேசுவதும், நடப்பதுவும் செலவில்லாத செல்வங்கள்.
- செர்வாண்டில்.

ஓடுவதில் பயனில்லை, நேரத்தில் புறப்படுவதே தேவை.
- ஜீந்தொஃபோன்தேன்.

ஏழ்மையிலிருந்து செழுமைக்குப் போகும் பிரயாணம் மிகக் கடினம். ஆனால் திரும்பி வருவது எளிது.
- ஜப்பான்.

இனிப்புப் பண்டங்கள் உடலைக் கெடுக்கின்றன. புகழ் சிறந்தவர்களையும் கெடுத்து விடுகிறது.
- பின்லாந்து.

மரம் ஏறத் தெரியாதவன் குரங்கை நம்பி பணத்தைக் கொடுக்கக் கூடாது.
- பெல்ஜியம்.

இளமை முதுமையை நோக்கி விரைகிறது. இன்பம் துன்பத்தை நோக்கி நகருகிறது.
- ருமேனியா.

ஒன்று நிகழப் போகும் முன்பே அதைப் பற்றிக் கவலை கொள்வது இரவு பெய்யப் போகும் மழைக்குப் பகலில் குடை விரிப்பது போன்றது.
- யாலப் தாம்சன்.

தற்பெருமை எங்கு முடிகிறதோ, அங்கு கண்ணியம் தொடங்குகிறது.
- பங்.

முயற்சி என்பது இதயத்துள் உண்டாகும் உணர்ச்சி மட்டுமன்று, ஆற்றலைக் கிளப்பும் ஒரு தூண்டுகோல் அது.
- தாகூர்.

கோழைகளைத் தவிர வேறு யாரும் பொய் சொல்வதில்லை.
- மர்பி.

அதிகமாகப் பேசுபவர்கள் குறைவாகச் சிந்திக்கிறார்கள்.
- டிரைடன்.

வேலை மனிதனைக் கொல்வதில்லை. கவலைதான் கொல்லும்.
- பீசீசர்.

நீயும் உடன்படாவிடில், நீ தாழ்ந்தவன் என்ற உணர்வை உன் மேல், எவராலும் எங்கும் சுமத்த முடியாது.
- எலினார் ரூஸ்வெல்ட்.
தொகுப்பு:- கணேஷ் அரவிந்த், திருநெல்வேலி.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.