* நல்ல உணவுகளை உண்பதால் உடல் வளரும். நல்ல நூல்களைப் படிப்பதால் உணர்வு வளரும். நல்ல உள்ளத்துடன் சதா இறைவனை நினைப்பதனால் உயிர் வளரும். இம்மூன்றும் வாழ்வின் அத்தியாவசியத் தேவைகள்.
*எப்போதும் இறைவனின் நினைவு வேண்டும். அது முடியவில்லையானால் எழுகின்ற போது, சாப்பிடும் போது மற்றும் படுக்கும் போதாவது நினைக்க வேண்டும்.
* மனிதன் மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை என்னும் மூவாசைகளால் கட்டுண்டு கிடக்கிறான். இதிலிருந்து விடுபட முயற்சிக்க வேண்டும். இந்த மூவாசைகளும் நம்மை மீண்டும் மீண்டும் பிறவிச்சுழலில் தள்ளிவிடுகின்றன. கரையேற நாம் தான் முயற்சியில் இறங்கவேண்டும்.
* வியாதி தீரவேண்டுமானால் மருந்தோடு பத்தியமும் மிக முக்கியம். அதுபோல தெய்வீக வாழ்வில் ஈடுபட நினைப்பவன் ஒழுக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும்.
* எவன் புகழை விரும்பாமல் தன் பணியைச் செய்து வருகிறானோ அவனுடைய புகழை மூவுலகிற்கும் கடவுள் தெரியப்படுத்துவார்.
* வயது தளர்ந்த காலத்தில் மனிதன் படும் துன்பத்தை எண்ணி இளைஞர்கள் தன்னைத் தானே திருத்திக் கொள்ள முயல வேண்டும்.
* தியானம், பக்தி, தர்மத்தில் ஈடுபாடு, ஒழுக்கம் இவையெல்லாம் நம் மனதில் இருக்குமானால் இருக்கும் இடமே புனிதமாகிவிடும்.
* மழை சுத்தமான நீராக இருந்தாலும், சேருமிடத்தைப் பொறுத்து அதன் தன்மை மாறுகிறது. அதுபோல, மனிதன் யாருடன் சேர்கிறானோ அந்த குணத்தையே அடைகிறான்.
* ஒருவரின் புறத்தோற்றத்தைக் கண்டு முடிவு செய்து விடாதீர்கள். அவரது பண்பைப் பொறுத்தே நல்லது கெட்டதை உறுதி செய்ய வேண்டும்.
* நல்ல நூல்களை சிரமப்பட்டு படிக்க வேண்டும். உயர்ந்தோருடன் பழக வேண்டும். ஆசிரியருக்குப் பணிவிடை செய்யவேண்டும். இதையெல்லாம் செய்யாமல், ஞானமும் கல்வியும் பெற வேண்டுமென்றால், ஒரு பெண் தன் கணவனைக் கொன்றுவிட்டுப் பிள்ளை வரம் கேட்ட கதை போலாகும். நல்லாசிரியன் ஒருவனை நாடிப்பெறும் கல்வியே ஞானத்தை கொண்டதாகும்.
* குடும்பம் மரத்தைப் போன்றது. அதற்கு வேர் மனைவி, அடிமரம் கணவன், கிளைகள் குழந்தைகள். பலவித பறவைகளுக்கும் மனிதர்களுக்கும் நிழல் தந்து, மரம் உறைவிடமாக உதவுவது போல், குடும்பத்தில் உள்ளவர்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க வேண்டும்.
* உன்னைப் புகழும்போது மகிழ்ச்சி அடையாதே. இகழும்போது கவலையும் அடையாதே.
* மரம் தன்னை நாடி வருபவருக்கு நிழல் தந்து உதவுவது போல, மனிதனும் தன்னை நாடி வந்தவருக்கு உதவ மறுப்பது கூடாது.
* தூய உணவை உண்ணும்போது தூய எண்ணம் உண்டாகும். அதனால், உணவு சமைக்கும் போது நல்லெண்ணத்துடன் சமைக்க வேண்டும்.
* உலகில் செய்த தர்மம் ஒன்றே என்றென்றும் அழிவில்லாமல் இருக்கும். பொன், பொருள் போன்ற செல்வம் நம் கண் முன்னே காணாமல் போய் விடும்.
* பசுவைப் போன்ற நல்லவர்களிடம் பழகுங்கள். பாம்பு போன்ற கொடியவர்களிடம் விலகி நில்லுங்கள்.
* பணிவுடைமை மனித வாழ்வின் உயிர்நாடி. அதனால், நம் வாழ்க்கைத் தரம் உயர்வு அடைகிறது.
* போற்றுதலையும், தூற்றுதலையும் சமமாகக் கருதுபவர்களின் உள்ளத்தில் அமைதி குடியிருக்கும்.
* பிறருடைய குற்றங்களை அலசி ஆராய்வது கூடாது. நாம் செய்த குற்றத்தை மூடி மறைப்பது கூடாது.
* மூட்டைப் பூச்சியைப் போல் பிறரைத் துன்புறுத்தி வாழக்கூடாது. எலியைப்போலத் திருடி வயிறு வளர்க்கக் கூடாது. கரையான்களைப் போல் பிறர் பொருளை நாசப்படுத்தி வாழக்கூடாது. தேனீயைப் போலவும், எறும்பைப் போலவும் உழைத்து உண்ணுவதே அமைதியான வாழ்க்கை.
* நல்லவர்களின் சேர்க்கை நன்மைக்கு வழிவகுக்கும். ஒருவன் முன்னேறாமல் இருப்பதற்குக் காரணம் நல்ல நண்பர்களோடு பழகாததுதான்.
* பணம் சேரச் சேர சாப்பாடு மட்டுமல்ல தூக்கம், ஒழுக்கம், பக்தி இவையும் கூட குறையத் தொடங்கும்.
* படிப்பினால் வரும் அறிவை விட அனுபவ அறிவே மேலானது. அனுபவசாலிகளின் அறிவுரைக்குச் செவிசாய்ப்பது நல்லது.
* பத்தியம் இருந்தால் வியாதி தீர்வது போல, ஒழுக்கத்துடன் வாழ்ந்தால், தெய்வ நிலைக்கு உயரலாம்.
* தன் புகழ் தெரியாமல் வாழும் நல்லவர்களின் புகழை, கடவுள் மூன்று உலகத்திலும் சுவரொட்டி ஒட்டி விளம்பரப்படுத்துவார்.
* வெயில் அதிகம் அடித்தால் மாலையில் மழை வரும். அதுபோல, அநீதி உலகில் அதிகரித்து விட்டால் மகான்கள் அவதரிப்பார்கள்.
* பணம் ஒருவரிடம் சேரச் சேர சாப்பாடு, தூக்கம், ஒழுக்கம், பக்தி இவையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து விடும்.
* விலங்கையும், மனிதனையும் பிரித்துக் காட்டும் எல்லைக்கல்லே ஒழுக்கம். ஒழுக்கம் தவறி விட்டால் மனிதன் தன் நிலையிலிருந்து தாழ்ந்து விடுகிறான்.
* வியாபாரி அன்றாடம் லாபநஷ்டம் பார்ப்பது போல, இன்றைய பொழுதை எப்படி கழித்தோம் என்று நம்மை நாமே சோதித்துப் பார்க்க வேண்டும்.
* மனிதனுடைய உயர்வும் தாழ்வும் நாக்கைப் பொறுத்தே அமைகிறது. அதனால், நாவடக்கத்துடன் நயமாகப் பேசுவது நன்மை தரும்.