* இறைவனின் பரதநாட்டிய தத்துவம் கேளுங்கள். ஆண்டவன், மாயையை எடுத்து உடுக்கையினால் உதறுகிறார். ஆன்மாக்களின் வல்வினைகள் என்னும் சஞ்சிதத்தைத் தமது திருக்கரத்தில் உள்ள நெருப்பினால் சுட்டுச் சாம்பலாக்குகிறார். ஆணவமாகிய முயலகனை மேலெழாவண்ணம் கிரியா சக்தியாகிய வலப்பாதத்தினால் மிதித்திருக்கிறார். ஆனந்த அனுபவத்தை தமது தூக்கிய திருவடியின் மூலம் தருகிறார். ஆன்மாக்களுக்கு நாம் நன்மையே செய்ய வேண்டும். உயிர்களுக்குச் செய்யும் நன்மையே உண்மையான கடவுள் வழிபாடாகும்.
* வயலில் தூவப்படும் சில விதைகளே, பல ஆயிரம் மடங்கு பயிர்களை திருப்பித் தருகின்றன. அதைப்போலவே, ஒருவர் செய்யும் நன்மையும் தீமையும் அவர்கள் செய்ததற்கு ஏற்றவகையில் பல மடங்காகப் பெருகி, அவரிடமே திரும்ப வந்துசேரும்.
* சிலர் எதற்காகப் பேசுகிறோம், சிலர் எந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகப் பேசுகிறோம் என்று வரைமுறையில்லாமல் பேசி விடுகிறார்கள். இதனால் எந்த ஒரு நன்மையும் உண்டாகப்போவதில்லை. ஆகவே, முடிந்தவரை அமைதியாக இருங்கள்.
* ஆண்டவன் அகிலாண்ட நாயகன். சர்வ வல்லமையும் உடையவன். நம்முடைய தலைவன். மனம் வாக்கு காயம் ஆகியவற்றால் நாம் செய்யும் குற்றங்கள் அனைத்தையும் அறிகிறான். ஆகவே, கடவுளிடத்தில் ஒவ்வொருவருக்கும் அச்சம் இருக்க வேண்டும்.
* நாம் தினமும் வீட்டில் பயன்படுத்தும் செப்புப் பாத்திரத்தித்தில் களிம்பு ஒட்டியிருந்தால், அதை நாம் நன்றாகத் துலக்கிப் பயன்படுத்த வேண்டும். இதுவே நெல்லாக இருந்தால், உமியை விலக்கி, சமைக்கப் பழகவேண்டும். அதுபோல், மனிதர்களாகிய நாம் தீமைகளை விலக்கி, நன்மைகளைச் சிந்தித்து வாழவேண்டும்.
* கடவுளை நம்மால் காண முடியவில்லை. பாலுக்குள் இருக்கும் நெய் நம் கண்ணுக்கு தெரிவதில்லை. தயிராக்கி கடைந்தால் தான் புலப்படுகிறது. அதுபோல, பக்தி செய்தால் தான் இறைவனைக் காண முடியும்.
* பறவைகளுக்கு இரு சிறகுகள், புகைவண்டிக்கு தண்டவாளங்கள், மனிதனுக்கு இரு கால்கள் மற்றும் இரு கண்கள் இருப்பது போல், மாணவர்களுக்கு இரு குணங்கள் நிச்சயம் இருக்கவேண்டும். ஒன்று அடக்கம், இன்னொன்று குருபக்தி. இந்த இருகுணங்களும் உள்ள மாணவன்தான் முன்னேற்றம் அடைவான்.
* தீப்பந்தத்தைக் கீழ்நோக்கிப் பிடித்தாலும், அதன் ஜுவாலை மேல்நோக்கி எரிந்து கொண்டிருப்பதுபோல், உயர்ந்த குணத்தை உடையவர்களைக் கீழ்ப்படுத்த முயன்றாலும் முடியாது.
* அகல் விளக்கு, எப்படி நமக்கு வெளிச்சத்தைக் கொடுக்கிறது என்பதை, நாம் இருளில் இருக்கும்போதுதான் உணரமுடியும். அதுபோல், தாய் நம்மை எப்படியெல்லாம் வளர்த்திருக்கிறார் என்பதை, அவர்கள் இல்லாதபோதுதான் உணரமுடியும். அதனால், தாய்மையை எப்போதும் போற்றுங்கள்.
* உன்னை, மற்றவர்கள் போற்றும்போது மகிழ்ச்சி அடையாதே..! அது போல், உன்னை மற்றவர்கள் தூற்றும்போது மனம் வருந்தாதே..!
* ஆசை ஒருவனை அழிக்கும் குணம் கொண்டது. ஆனால், மாறாக நாம் மற்றவரின் மேல் செலுத்தும் ‘அன்பு’ அவர்களை வளர்க்கும் குணம் கொண்டது. எனவே, நீங்கள் எப்போதுமே மற்றவர்களை வளர்க்கும் குணம் உடையவர்களாக இருங்கள். தேவையற்ற ஆசைகளால் துன்பம் வருமே தவிர, நன்மை விளையாது.
* நன்கு வசதியாக வாழும் நாட்களிலேயே துன்பமான விஷயங்களையும் பழகக் கற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில், வாழ்க்கையில் ஏற்றமும் இறக்கமும் ஒவ்வொரு மனிதனுக்கும் மாறி, மாறி வருவது இயல்பு. ஆகையால், அனைத்து சூழல்களுக்கும் நம்மை தயார்ப்படுத்திக்கொள்வது நல்லது.
* இரவில் முறையாக தூங்கி ஓய்வு எடுத்துக்கொள்வது நல்லது. இல்லையேல், மனதை உயர்நிலைக்கு இட்டுச்செல்லும் அற நூல்களைப் படியுங்கள். அதுவே நம்மை நல்வழிப்படுத்தும்.
* பிறருடைய குற்றங்களை அலசி, ஆராயக்கூடாது. நாம் செய்த குற்றங்களை மூடிமறைக்கவும் கூடாது.
* பணிவு என்பது மனித வாழ்க்கையின் உயிர்நாடி. அதனால், நம் வாழ்க்கைத்தரம் உயர்ந்த நிலையை அடைகிறது.
* தெரியாத ஒருவனுக்கு ஒரு விஷயத்தைப் பயிற்றுவிக்கலாம். தெரிந்தவனுக்கு அந்த விஷயத்தின் நுணுக்கங்களை மேலும் கூறி, புரியவைக்கலாம். ஆனால், இது நல்லது, இது கெட்டது என்று பகுத்து உணராதவனை… அந்த ஆண்டவனாலும் திருத்தமுடியாது.
* குடும்பம் என்பது பசுமையான மரத்தைப் போன்றது. அதில் மனைவி என்பவர் ‘வேர்’. கணவன் என்பவர் ‘ அடிமரத்தண்டு’. பிள்ளைகள் என்பவர்கள் ‘இலைகளும் மலர்களும்’. அந்த மரத்தில் விளையும் சுவைமிகுந்த பழங்கள்தான் ‘அறச்செயல்கள்’. மரமானது பல்வேறு விதமான ஜீவராசிகளுக்கும் பயன் அளிப்பதுபோல், நமது குடும்பம் என்னும் மரம் மற்றவர்களுக்குப் பயன் தரவேண்டும்.
* ஒரே பரம்பொருளை ‘முருகா!’ என்றாலும், ‘சிவனே!’ என்று துதித்தாலும் ‘திருமாலே’ என்று வணங்கினாலும், ‘கணபதியே’ என்று அழைத்தாலும் ஏன் என்கிறார்கள் மானிடர்கள். ஒவ்வொரு சுவாமிக்கும் தேங்காய் உடைக்கச் சொல்கிறீர்களே என வருத்தப்படுகின்றனர். இது அவரவர் மனநிலையைப் பொறுத்தது. குழந்தை பிறந்தவுடன் பெயர் வைக்கப்படாமல் இருக்கும். அதை தந்தை ‘கண்ணே’ என்பார். தாய் ‘மணியே’ என்பாள். தாத்தா ‘முத்தே’ என்பார். பக்கத்து வீட்டுக்காரர் ‘ராஜா’ என்பார். இப்படி அவரவர் வசதிப்படி குழந்தையைக் கொஞ்சுவதில்லையா? அது போல பாசத்திற்குரிய இறைவன் ஒருவன் தான். பெயர்கள் தான் பல.
* பாலுக்குள் இருக்கும், நெய் நம் கண்களுக்கு எளிதில் தெரிவதில்லை. அவ்வாறே, உண்மையான, பக்தியானால் மட்டுமே இறைச் சக்தியை உணரமுடியும்.
* நெருப்பு எரியும் இடத்தில்தான், புகை கிளம்பிக் கொண்டு இருக்கும். நெருப்பினால், நமக்குத் தேவையானவற்றை சூடுபடுத்திக்கொள்ளலாம். மற்றதேவைகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், புகையினால் எந்தவொரு பயனும் விளையப்போவதில்லை.
* தன்னுடைய புத்தகம், பெண், பணம் இவை பிறரிடம் கொடுத்தால் போனது போனதுதான். ஒருவேளை திரும்பி வருவதாயின் புத்தகம் கிழிந்தும், பெண் மாசுபடிந்தும், பணம் அளவு குறைந்தும்தான் வரும்.
* முதலை வாய்ப்பட்ட மணியை எடுத்து விடலாம். அலைபாயும் கடலையும் அப்புறமாகத் தாண்டிடலாம். பாம்பையும் மாலையாக கழுத்தில் அணிந்திடலாம். ஆனால் மூடனைத் திருத்த யாராலும் இயலாது.
* ஆறு தரம் பூமியை வலம் வருதலும், பதினாராயிரம் தடவை காசியில் குளித்தலும், பலநூறு தடவை சேது ஸ்நானம் செய்தாலும் ஆகிய இவற்றால் கிடைக்கும் புண்ணியம், தாயைப் பக்திப்பூர்வமாக ஒரு தரம் வணங்கினால் கிடைக்கும்.
* விளக்கு நமக்கு எத்தனை வண்ணமாக உதவி செய்கிறது என்பதை நாம் அது இல்லாதபோதுதான் உணர முடியும். தாய் நம்மை எப்படியெல்லாம் வளர்க்கின்றாள் என்பதை தாய் இல்லாத போதுதானே உணர முடிகிறது.
* பறவைகட்கு இரு சிறகுகள்; மனிதனுக்கு இரு கால்கள், இரு கைகள், இரு கண்கள். புகை வண்டிக்கு தண்டவாளங்கள் இருப்பதுபோல் மாணவர்களுக்கு இரு குணங்கள் இருக்க வேண்டும். ஒன்று அடக்கம், மற்றொன்று குருபக்தி. இந்த இரு குணங்கள் உள்ள மாணவன்தான் முன்னேற்றமடைவான்.
* இன்பமான சொல்லும், சிரித்த முகமும், பார்வையும், நண்பர்களின் சொல்லைக் கேட்க வேண்டுமென்ற எண்ணமும், அவர்களைக் கண்டவுடன் சந்தோஷப்படுதலும் ஆசையில்லாதவனின் லட்சணங்களாகும்.
* தீப்பந்தத்தைக் கீழ்நோக்கிப் பிடித்தாலும் அதன் ஜுவாலை மேல்நோக்கி எழுவதுபோல் உயர்ந்த குணத்தை கீழ்ப்படுத்த சொப்பனத்திலும் முடியாது.