* தகப்பன் வெட்டின கிணறு என்று தலைகீழாய் விழுவார்களா?
* தங்கக் கத்தி என்று கழுத்தை அறுத்துக் கொள்ளலாமா?
* தங்கச்சி பிள்ளை தன் பிள்ளை ஆகுமா? தண்ணீர்க் குடமும் தன் குடம் ஆகுமா?
* தங்கச் செருப்பு ஆனாலும் தலைக்கு ஏறாது.
* தங்கம் புடத்தில் வைத்தாலும் தன் நிறம் போகாது.
* தசமி எண்ணெய் தந்தால் தேய்த்துக் கொள்ளலாம்; ஏகாதசி எண்ணெய் இரந்தும் தேய்க்கலாம்; துவாதசி எண்ணெய் தந்தாலும் கூடாது.
* தஞ்சம் என்று வந்தவனை வஞ்சித்தல் ஆகாது.
* தட்டத் தட்ட எள்ளு; கொட்டக் கொட்டக் கேழ்வரகு.
* தட்டாரப் பூச்சி தாழப் பறந்தால் தப்பாமல் மழை வரும்.
* தட்டான் காப்பொன்னிலும் மாப்பொன் எடுப்பான்.
* தட்டான் பொன் அறிவான்; தன் பெண்களுக்கு ஒன்று செய்யான்.
* தட்டிப் போட்ட வடையைத் திருப்பிப் போட நாதி இல்லை.
* தட்டினால் தட்டான்; தட்டா விட்டால் கெட்டான்.
* தடிமனும் தலையிடியும் தன் தனக்கு வந்தால் தெரியும். (தடிமன் - ஜலதோசம்)
* தடியங்காய் திருடினவன் தோளைத் தடவிப் பார்த்துக் கொண்டானாம்.
* தண்டத்துக்குப் பணமும் திவசத்துக்குக் காசும் அகப்படும்.
* தண்ணீர் இல்லாத வேளாண்மையும் தான் உழாத நிலமும் தரிசு.
* தண்ணீர் உள்ள மட்டும் மீன் குஞ்சு துள்ளும்.
* தண்ணீர் தவளை குடித்ததும் குடியாததும், யார் அறிவார்?
* தண்ணீரில் மூச்சு விட்டால் தலைக்கு மேலே.
* தண்ணீரில் விழுந்தவர்களுக்கும் தடுமாறி நிற்பவர்களுக்கும் ஆனைப்பலம் வந்து விடும்.
* தண்ணீரிலே போட்டாலும் நனையாது; கரையில் போட்டாலும் காயாது.
* தண்ணீரிலே விளைந்த உப்புத் தண்ணீரிலே கரைய வேண்டும்.
* தண்ணீரும் மூன்று பிழை பொறுக்கும்.
* தண்ணீரைத் தடிகொண்டு அடித்தாலும் தண்ணீரும் தண்ணீரும் விலகுமா?
* தண்ணீரையும் தாயையும் பழிக்கலாமா?
* தத்துவம் அறிந்தவன் தவசி.
* தந்தவன் இல்லை என்றால் வந்தவன் வழியைப் பார்க்கிறான்.
* தந்திரத்தால் தேங்காய் உடைக்கலாமா?
* தந்திரம் படைத்தவன் தரணி முழுவதையும் ஆள்வான்.
* தந்திரம் பெரிதா? மந்திரம் பெரிதா?
* தந்தை எவ்வழி, தனையன் அவ்வழி. (தனையன் - புதல்வன்)
* தந்தைக்குத் தலைப் பிள்ளை, தாய்க்குக் கடைப் பிள்ளை.
* தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.
* தப்படி எடுத்துத் தாடையில் போடாதே.
* தப்பில் ஆனவனை உப்பிலே போடு. (தப்பில் ஆனவன் - தப்பிலி)
* தம் இனம் தம்மைக் காக்கும்; வேலி பயிரைக் காக்கும்.
* தம்பி உடையான் படைக்கு அஞ்சான்.
* தம்பி உழுவான்; மேழி எட்டாது. (மேழி - கலப்பை)
* தம்பி கால் நடையிலே; பேச்சுப் பல்லக்கிலே.
* தம்பி சோற்றுக்குச் சூறாவளி: வேலைக்கு வாரா வழி.
* தம்பி தாய் மொழி கற்கத் தாளம் போடுகிறான்; அண்ணன் அந்நிய மொழியிலே ஆர்ப்பாட்டம் செய்கிறானாம்.
* தம்பி பிடித்த முயலுக்கு மூன்றேகால்.
* தம்பி பேச்சைத் தண்ணீரில்தான் எழுத வேண்டும்.
* தமிழுக்கு இருவர் கதி. (கதி - கம்பர், திருவள்ளுவர்)
* தமையன் தந்தைக்குச் சமம்; தம்பி பிள்ளைக்குச் சமம்.
* தயிர் குடிக்க வந்த பூனை சட்டியை நக்குமா?
* தயிர்ப் பானை உடைந்தால் காக்கைக்கு விருந்து.
* தர்மத்துக்குத் தாழ்ச்சி வராது.
* தர்மத்துக்குத் தானம் பண்ணுகிற மாட்டைப் பல்லைப் பிடித்துப் பதம் பார்க்கிறதா?
* தர்ம புத்திரனுக்குச் சகுனி தோன்றினாற் போல.
* தர்மம் தலை காக்கும்.
* தரகுக்காரப் பயலுக்குத் தன் காடு பிறன் காடு ஏது?
* தரித்திரப் பட்டாலும் தைரியம் விடாதே.
* தரித்திரன் சந்தைக்குப் போனால் தங்கமும் பித்தளை ஆகும்.
* தலை இடிக்குத் தலையணையை மாற்றி ஆவது என்ன? (தலை இடி - தலைவலி)
* தலை இடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும்.
* தலை இருக்க வால் ஆடுமா?
* தலைக்கு மேல் ஐசுவரியம் இருந்தாலும் தலையணை மேல் உட்காராதே.
* தலைக்கு மேல் வெள்ளம் போகும் போது, சாண் என்ன? முழம் என்ன?
* தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு.
* தலைச்சன் பிள்ளைக்காரிக்குத் தாலாட்டும், தாலி அறுத்தவளுக்கு ஒப்பாரியும் தாமே வரும்.
* தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்.
* தலை நோவும் தரித்திரமும் தனக்கு வந்தால் தெரியும்.
* தலை பெரிது என்று கல்லில் முட்டிக் கொள்ளலாமா?
* தலையாரி வீட்டுக் கோழிமுட்டை குடியானவன் வீட்டு அம்மியை உடைக்கும்.
* தலையைச் சுற்றுகிற மாடும், கூரையைப் பிடுங்கித் தின்கிற மாடும் குடும்பத்துக்கு ஆகா.
* தவளை கத்தினால் உடனே மழை.
* தவளை கூவிச் சாகும்.
* தவளை தன் வாயால் கெடும்.
* தவிடு தின்னும் ராஜாவுக்கு முறம் பிடிப்பவன் மந்திரி.
* தவித்த வாய்க்குத் தண்ணீர் தராதவன் பாவி.
* தன் அறிவு வேணும்; இல்லை என்றால் சொல்லறிவு வேணும்.
* தன் ஆள் இல்லா வேளாண்மையும்; தான் உழாத நிலமும் தரிசு.
* தன் இச்சையை அடக்காவிட்டால் அது தன்னையே வருத்தும்.
* தன் ஊர் கிழக்கு, தங்கின ஊர் மேற்கு, வேட்டகம் தெற்கு, வேண்டா ஊர் வடக்கு.
* தன் ஊர்ச் சுடுகாட்டுக்கும் அயல் ஊர் ஆற்றுக்கும் அஞ்ச வேண்டும்.
* தன் குஞ்சு என்று வளர்க்குமாம், குயிற் குஞ்சைக் காகம்.
* தன் குணம் போல் தனக்கு வரும் வாழ்வு.
* தன் குற்றம் இருக்கப் பிறர் குற்றம் பார்க்கிறதா?
* தன் குற்றமும் முதுகும் தனக்குத் தெரியாது.
* தன் தொழிலைப் பாராதவனுக்குத் தலையளவு பஞ்சம்.
* தன் நெஞ்சு அறியாத பொய் இல்லை; தாய் அறியாத சூல் இல்லை.
* தன் பிள்ளை என்று தலைமேல் வைத்துக் கொள்ளலாமா?
* தனக்கு என்று ஒருத்தி இருந்தால் தலைமாட்டில் இருந்து அழுவாள்.
* தனக்குத் தானே கனியாத பழத்தைத் தடி கொண்டு அடித்தால் கனியுமா?
* தனக்குப் போகத் தானம்.
* தனக்கும் உயர்ந்த குலத்தில் பெண்ணைக் கொடு; தன்னிலும் குறைந்த இடத்தில பெண்ணை எடு.
* தனி மரம் தோப்பு ஆகுமா?
* தனிவழியே போனவளைத் தாரம் என்று எண்ணாதே.