* கடவுளின் கால்களைப் பிடி, சயித்தானின் கொம்புகளைப் பிடி.
* விக்கிரகங்கள் செய்பவன் அவற்றை வணங்குவதில்லை.
* சமயத்திற்கு இரண்டு குழந்தைகள்.அவை, விருப்பும் வெறுப்பும்.
* கிழக்கு மேற்கு இரண்டு திசைகளையும் பார்த்து வணங்குபவன், ஒரு சமயத்தையும் சேர்ந்தவனல்லன்.
* மனிதர்களோடு சமாதானம் செய்துகொண்டு. உன் பாவங்களுடன் போராடு.
* ஈக்களும் பாதிரிமார்களும் எந்த வீட்டிலும் நுழையலாம்.
* குருக்கள் உன்னிடம் வந்து விட்டால், மகிழ வேண்டாம்; விரைவில் அவர் யாசகம் கேட்கத் தொடங்குவார்.
* எதுவும் உலகில் நடைபெறும். செல்வம் மிகுந்தவனும் ஓர் ஏழையின் வீட்டை நாடிச் சென்று தட்ட நேரலாம்.
* அறிவில்லாதவனுக்கு வரும் அதிருஷ்டம், பயனற்றதாகும்.
* சந்திரனும் வெளிச்சமாயிருக்கிறது. ஆனால், அது சூடளிப்பதில்லை.
* பிரம்மச்சாரி தண்ணிரில்லாத வாத்து போன்றவன்.
* சிரிக்கிற பெண்ணையும், அழுகிற மனிதனையும் நம்ப வேண்டாம்.
* இரண்டு பெண்கள் சேர்ந்தால் ஒரு கடை, மூவர் சேர்ந்தால் ஒரு சந்தை.
* செம்பு நாணயம் துருப்பிடித்த காதலுக்குத்தான் சரி.
* காதல் ஒரு வளையம், வளையத்திற்கு முடிவே கிடையாது.
* மணப்பெண் தொட்டிலிலிருக்கும் பொழுது, மணமகன் குதிரையேறப் பழகவேண்டும்.
* ஏழு வருடங்கள் கழியும் முன்னால் உன் மனைவியைப் புகழாதே.
* பெண்ணை விட நாய் அறிவுள்ளது; அது தன் யசமானரைப் பார்த்துக் குரைப்பதில்லை.
* வீட்டுக்குக் கேடு வருவது பின் கதவினால்தான்.
* மனிதன் நண்பர்களில்லாமல் இருக்க முடியும்; ஆனால், அக்கம் பக்கத்து வீட்டார்கள் இல்லாமல் முடியாது.
* கணவன் குடித்தால் பாதி வீடு எரியும், மனைவியும் குடித்தால் முழு வீடும் எரியும்.
* மகளின் குழந்தைகள் தன் குழந்தைகளை விட அருமையானவை.
* குழந்தை அழாவிட்டால், தாய்க்கு ஒன்றும் புரிவதில்லை.
* தந்தையின் வாழ்த்து நீருள் அழியாது, நெருப்பிலும் அழியாது.
* கடவுள் உயரேயிருக்கிறார், பூமியில் தந்தையிருக்கிறார்.
* தாடியில்லாதவர்களுக்குச் சுவர்க்கத்தில் இடமில்லை.
* நோயாளிக்கு தேனும் கசக்கும்.
* வைத்தியர்களும் நீதிபதிகளும் பயமில்லாமல் கொலை செய்கிறார்கள்.
* மரணத்திற்கு விலை உண்டு; வாழ்வைக் கொடுத்து மரணத்தை வாங்க வேண்டியிருக்கிறது.
* வானம் என்னைப் படைத்தது. பூமி என்னைத் தாங்குகிறது.
* ரஷ்யாவுக்கும் கோடைக்கும் உறவே கிடையாது.
* வானத்திலிருந்து பால் மழையாகப் பொழிந்தாலும், ஏந்தி வைத்துக் கொள்ளப் பாத்திரங்கள் பணக்காரரிடமே இருக்கின்றன.
* பணம் வரும்போது இரண்டு கால்களுடன் வரும்; போகும் போது பல கால்களுடன் போகும்.
* பணம் பேசும்பொழுது, உண்மை வாயடங்கிக் கிடக்கும்.
* வெறும் கரண்டி வாயைப் புண்ணாக்கும்.
* ஏழைகள் பாடுகிறார்கள், செல்வர்கள் கேட்கிறார்கள்.
* பிச்சைக்காரன் சொத்து அவனுக்குத்தான் தெரியும்.
* எந்த விரலைக் கடித்தாலும் வலியிருக்கும்.
* சிலருடைய சிரிப்பில் கண்ணிரின் மணம் கலந்திருக்கும்.
* உலகம் அன்பிலும் சமரசத்திலும் நிற்கின்றது.
* பரிசு மலிவானதுதான், ஆனால் அன்பு அரிதானது.
* ஆற்றை நம்பலாம், ஓடையை நம்பக் கூடாது.
* அழகை ஒவ்வொருவனும் தன் கருத்துப்படி வருணிப்பான்.
* சாகும்வரை நாம் கற்றுக் கொண்டிருக்கிறோம்.
* உனக்கு எவ்வளவு அதிக விஷயங்கள் தெரியுமோ, அவ்வளவுக்குத் துாக்கம் குறையும்.
* கம்பளத்திற்காக ஆட்டைக் கொல்லாதே.
* பழமொழிகள் மக்கள் புழங்கும் நாணயங்கள்.
* ஒவ்வொரு சாலைக்கும் இரண்டு திசைகள் உண்டு.
* கீழே விழுந்தவனைக் கண்டு சிரிக்கவேண்டாம்; உன் பாதையும் வழுக்கல் நிறைந்தது.
* பொய்கள் அமர்வதற்கு ஒருவன் சிம்மாசனம் அமைத்தால். உண்மைக்குத் துாக்குமேடை அமைத்ததாகும்.
* வாய் கொடுத்த வாக்குறுதியைக் கைகள் விரைவில் மறந்து விடுகின்றன.
* நீ ஆடுபோல் அடங்கிவிட்டால், ஓநாய் தயாராகயிருக்கும்.
* பழக்கம் என்ற அங்கியை நாம் சாகும்வரை அணிகிறோம்.
* பேசுபவன் விதைக்கிறான், கேட்டவன் அறுவடை செய்து கொள்கிறான்.
* விளையாட்டுக்களிலும், பயணங்களிலும், மனிதர்களுடைய தரம் தெரிந்துவிடும்.
* கோபமும் பழிவாங்கும் சுபாவமும் மணந்து கொண்டால், கொடுமை என்ற குழந்தை பிறந்துவிடும்.
* அதிகச் சாதுரியம் காட்ட வேண்டாம்: உன்னை விடச் சாமர்த்தியசாலிகள் சிறையிலேயிருக்கின்றனர்.
* இதயம் ரோஜா மலராயிருந்தால், பேச்சில் அதன் வாசனை தெரியும்.
* வீரரைச் சிறையிலே தேடுங்கள், மூடரைப் பாதிரிகளிடையே தேடுங்கள்.
* புறாவுக்கு அஞ்சுவோன் தினை விதைக்க மாட்டான்.
* முன்னதாகவே உறுதி செய்து கொண்டவன். பிறர் உபதேசத்தைக் கேட்கமாட்டான்.
* மகா நதிகளின் பெருமை கடலோடு சரி.
* வேலையோடு ஓய்வைக் கலந்து கொண்டால், உனக்குப் பைத்தியமே பிடிக்காது.
* ஆட்டம் ஆடுவது கரடி, பணம் பெறுவது கூத்தாடி.
* நிலம் ஒரு தட்டு, அதில் போட்டதையெல்லாம் திரும்ப எடுத்து விடலாம்.
* நல்ல விளைவிருந்தால் விரைவில் விற்றுவிடு, விளைவு குறைந்திருந்தால் தாமதித்து விற்க வேண்டும்.
* நீ கடன் கொடுக்கும் போது அவர்கள் உன்னை வணங்கினார்கள், வசூலிக்கும் போது நீ அவர்களை வணங்க வேண்டும்.
* வாங்கிக் கொண்டேயிருக்கிற கைக்கு அலுப்பு சலிப்பே இராது.
* பசியுடையவர்கள் கொட்டாவி விடுகிறார்கள், திருப்தியாக உண்டவர்கள் ஏப்பம் விடுகிறார்கள்.
* போரிலே வென்றவையெல்லாம் புனிதமானவை