* ஒய்வு எடுக்காது உழைக்கும் உழைப்பின் தரம் குறையும்.
* நொய்யரிசி கொதி பொறுக்காதது போல, அற்ப மனிதர்கள் சொல் பொறுக்கமாட்டார்கள்!
* மிகச் சிறிய செயல்களையும் கவனத்துடன் செய்து பழகினால், மிகப்பெரிய காரியங்களையும் சிறப்பாகச் செய்ய முடியும்.
* உடம்பு நல்ல நிர்வாக முறைக்குச் சிறந்த எடுத்துக் காட்டு.
* ஒருவர் திரும்பத் திரும்ப ஒரே தவறைச் செய்தால் அது வேண்டும் என்றே செய்யப் பெறுவதாகும். இத்தகையோர் உறவு பயனற்றது.
* உயிர்களிடத்தில் அன்பு காட்டுதல் எளிதான காரியமன்று. இந்த முயற்சியில் வெற்றி பெற்று விட்டால் மூவுலகையும் ஆண்டு அனுபவிக்கலாம்.
* ஒரு தடவை கெட்டவர்கள் கெட்டேப் போய்விட மாட்டார்கள். அவர்கள் நல்லவர்களாக ஆகலாம். ஆனால் தமது நிலையை எண்ணி வருந்துகிறவர்களாக இருத்தல் வேண்டும்.
* தவறுகளைக் கூட ஏற்கலாம். ஆனால், முறைகேடுகளை ஏற்றுக் கொள்ளக்கூடாது.
* வாழ்க்கை இன்பத்திலோ, துன்பத்திலோ தேங்கி நின்று விடுதல் கூடாது. பகலும் இரவும் ஒன்றையொன்று விரட்டிக்கொண்டு முந்துவது போல வாழ்க்கை ஒடிக் கொண்டே இருக்கவேண்டும்.
* வேலையைத் தேடுதல், எடுத்துச் செய்தல் என்ற ஆர்வம் இல்லாதவர்களும் சோம்பேறிகளே!
* சுகம் அனுபவிக்கும் எண்ணம் வந்து விட்டாலே உழைப்பு ஒழுக்கம் எல்லாம் பறந்து போய்விடும்.
* நல்லனவற்றைப் பழக்கங்களாகவும் வழக்கங்களாகவும் மாற்றியமைத்தல் கடமை.
* உடலை வருத்திக் கொள்ளும் அளவுக்கு உறுதி இல்லையானால் முறையாகக் கடமைகளைச் செய்ய இயலாது.
* காரியங்கள் நடைபெற வேண்டுமானால் உளப்பூர்வமான முயற்சி தேவை.
* வேலை செய்வோரெல்லாம் முயற்சியுடையோர் அல்ல. முயற்சி என்பது தடைகளையும் இன்பங்களையும் பாராது, மூச்சடக்கி கருமமே கண்ணாகச் செயற்படுதலாகும்.
* முயற்சி என்பது ஏற்றி வைத்த சுமையுடன் ஒரு மேட்டு நிலத்தில் ஏறும் எருதுகள் மூச்சடக்கி முழங்காலிட்டு முன்னேறுதலைப் போன்றது.
* மனித முயற்சிகள் தோற்கலாம். ஆனால், மனிதன், தோற்கக் கூடாது.
* சமூக அநீதிகளை எதிர்த்தேச் சமயம் தோன்றியது. பின் அதுவே சமூக அநீதியின் உருவமாக மாறிவிட்டது.
* மற்றவர் பற்றிய இகழ்ச்சியை விரும்புகிறவன், புகழுக்குரியவன் அல்ல.
* அறிவுக்கு இசைந்து வராத வளர்ச்சிக்குத் தொடர்பில்லாத வரையில் பற்றாக்குறை நீடிக்கும் வரையில் மனித உழைப்பு பயன் தரவில்லை என்றே பொருள்.
* பெண் தனித்திருக்க முடியாது என்ற கருத்து பிழையானது.
* உனது வருத்தத்தைக் கடுஞ்சொற்களால் காட்டாதே. சொல்லும் பாங்கில் காட்டு!
* விதிகளைப் பின்பற்றினாலேப் பல சிக்கல்களைத் தவிர்த்துவிடலாம்.
* காதலின்பம் என்பது கடவுள் நெறிக்கு மாறானதல்ல.
* சாதாரணக் காலங்களில் நாடாதவர்கள் பணம் தேவைப்படும் பொழுது மட்டும் வந்துவிடுகிறார்கள்.
* நாள்தோறும் பழக்கவழக்கங்களை ஆராய்ந்து புதுப்பித்துக் கொள்ளுதல் வேண்டும்
* ஆற்றலைத் தருவது ஆர்வம்: ஆர்வத்தைத் தருவது, வாழ்க்கையின் மீது ஏற்படும் ஆசை. ஆசைகள் ஆர்வங்களாக மாறவேண்டும். ஆர்வங்கள் அயரா உழைப்புகளாக மாறவேண்டும். இதுவே வாழ்வு.
* எதையும் முறையாகச் செய்யவேண்டும் என்ற ஆர்வம் இல்லையானால், தவறுகள் நிகழ்வதைத் தவிர்க்க முடியாது.
* பொருள் உற்பத்தி செய்யப் பெறுவது; படைக்கப் பெறுவது. பொருள் உற்பத்திக்கு அறிவு தேவை. அறிவு பெற விழிப்புணர்வு தேவை.
* நம்முடைய இயலாமைகளை - இழிவுகளை இயற்கை எனத் தாங்கிக் கொள்ளும் மனோநிலை இருக்கிறவரையில் முன்னேற்றம் இல்லை.