நமக்கு இரண்டு காது, ஒரு நாக்கு ஏன்?
முன்பெல்லாம் யோசனை சொல்வதற்காகச் சிலரும், அதைக் கேட்பதற்காகப் பலரும் இருந்தார்கள். அதனால் யோசனை சொல்பவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் இருந்தன. ஆனால், இப்போதைய நிலைமை அப்படியில்லை. நேர்மாறாகப் போய்விட்டது. யோசனைகளைத் தேடி, நாம் எங்கும் போக வேண்டியதில்லை. நம் இருப்பிடம் தேடித் தாமாக யோசனைகள் அடுக்கடுக்காய் வந்து குவியும் நாள் இது.
- அகிலன்
பொது வாழ்வில் இருப்பவர்களுக்குச் சற்று அளவுக்கு மீறிய நாணயமும், கட்டுப்பாடும், உறுதியும், தியாக புத்தியும் வேண்டும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு இவை வேண்டியது இல்லை என்பதோடு, இவைகள் உள்ளவர்கள் உத்தியோகத்தில் வெற்றி பெறவும் முடியாது.
- பெரியார்
நான் எந்த ஏணியையும் உதவியாகக் கொண்டு வாழ்க்கையில் முன்னேறவில்லை. வெறும் உழைப்பின் சக்தி ஒன்றினாலேயே முன்னுக்கு வந்தேன். எல்லா இளைஞர்களும் என்னேயேப் பின்பற்ற முயன்று, வீண் மோசம் போக வேண்டாம்.
- ஜார்ஜ் பெர்னார்ட்ஷா
என்னை இக்கட்டிலோடு தூக்கிக் கொண்டு போய்க் கலவரங்கள் நடக்கும் இடத்தில் வையுங்கள். துப்பாக்கிக் குண்டு முதலில் என் நெஞ்சில் தைத்து நான் சாகிறேன். அப்படியாவது ஒற்றுமை உண்டாகட்டும்.
- மகாகவி இக்பால்
நமக்கு இரண்டு காதுகளும் ஒரே ஒரு நாவும் இருப்பதற்குக் காரணம், கேள்வி அதிகமாகவும், பேச்சு குறைவாகவும் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்.
- டயோஜனீஸ்
நான் அயர்லாந்தில் பிறந்தேன்; ஸ்காட்லாந்தில் வளர்ந்தேன்; ஆங்கிலத்தில் மூழ்கினேன். ஆயினும், என் வாழ்நாளில் ஐம்பதாண்டுகளுக்கு மேல் இந்திய நாடும், அந்நாட்டு மக்களுமே என் ஆழ்ந்த கருத்து முழுவதையும் இழுத்துக் கொண்டதனால், நான் இந்தியர்களுள் ஒருவனாகிவிட்டேன்.
- கால்டுவெல்
பழைய காலத்தில் பைத்தியக்காரர்களைக் குளு குளு தண்ணீரில் குளிக்கச் செய்வது வழக்கம். அதேபோல் செய்தால்தான் இப்போது இருக்கும் யுத்த வெறியர்களின் பைத்தியக்காரத்தனம் நீங்கும்.
- குருச்சேவ்
ஒரு காலத்தில் எழுத்தாளர்கள் அனைவரும் அரசர்களைப் புகழ்ந்து எழுதினர்கள். அப்படி புகழ்ந்து எழுதினால்தான் அவர்களுக்கு வாழ்வு என்ற நிலை இருந்தது. அப்பேர்ப்பட்ட காலத்தில் கூட திருவள்ளுவர் போன்றவர்கள் மக்களுக்காக எழுதினர்கள். ஆனால், இப்போதைய எழுத்தாளர்கள், அரசர் காலத்து எழுத்தாளர்களின் நிலையிலே தான் இருக்கிறார்கள். நான் மனதில் பட்டதை அப்படியேச் சொல்பவன். அதனால்தான் இதைச் சொல்கிறேன். அரசியலில் செல்வாக்கு பெற்றவர்களைப் பற்றிப் புகழ்ந்து எழுதினால்தான் பட்டங்கள், பதவிகள் கிடைக்கும் என்று இன்றைய எழுத்தாளர்கள் எழுதுகிறார்கள்.
- மதுரை முத்து (மதுரை மாநகராட்சி மேயர்)
பாரதத்தைப் போன்ற பெரியதொரு நாட்டில், அதிக உணவு உற்பத்திக்குத் திட்டமிடுவதைப் போன்றே, பிறப்பு விகிதத்திலும் ஒரு கண் வைத்திருப்பது அத்தியாவசியம் என்பதைச் சொல்லத் தேவையில்லை.
- டாக்டர் ராஜேந்திர பிரசாத்
என்னுடைய பாட்டி, ஒரு மூட்டை நெல்லைக் குத்தி அரிசியாக்கி விடுவார்கள். அவர்களுக்கு அவ்வளவு பலம் இருந்தது. ஆனால், இந்தக் காலத்துப் பெண்கள் மிகவும் நோஞ்சான்களாக இருக்கிறார்கள். பின்னல் வேலைகள் செய்யும் அளவுக்குத்தான் அவர்கள் உடலில் பலம் இருக்கிறது. பெண்கள் சத்துள்ள உணவுகளைச் சாப்பிட வேண்டும்; கடுமையாக உழைக்க வேண்டும். வீணாக அரட்டையடித்து நேரத்தை வீணக்கக்கூடாது. பக்திப் புத்தகங்களைப் படிப்பதில் நேரத்தைச் செலவிட வேண்டும்.
- முத்தமிழ்க் காவலர் கி. ஆ. பெ. விசுவநாதம்
எல்லாம் தெரியும், இனி உபதேசம் செய்ய வேண்டியதுதான் என்ற எண்ணத்துடன் இருப்பவர்களை விட, அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமுடைய அறிஞர்களால் நாடு அதிக பலன் அடைகிறது.
- சம்பத்
கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்ற பிரச்னையைப் பற்றிச் சிந்திப்பது மனிதன் செய்யக்கூடாத ஒன்று. நாம் இந்த உலகத்தில் தோன்றியிருப்பதன் இலட்சியம், வாழ வேண்டுமென்பதற்காகவே தவிர, கடவுள் இருக்கிறார் என்று வாதிடவோ, இல்லையென்று போராடவோ அன்று.
- சார்லஸ் டார்வின்
உடல் வலிமையை நம்பிப் போர் செய்தவன் கல்லை எடுத்தவனுக்கு தோற்றான். கல்லை நம்பியவன் வில்லை எடுத்தவனுக்குத் தோற்றான்; வில் வாளுக்குத் தோற்றது; வாள் பீரங்கி துப்பாக்கிக்குத் தோற்றது. வெடிகுண்டு அணு குண்டுக்குத் தோற்றது. இனிமேல் அதுவும் அறிவுக்குத் தோற்றுவிடும்!
- டாக்டர் மு. வரதராசனார்
தங்கமோ, நகையோ, உற்பத்தி ஆற்றல் அற்றவை, பலனற்றவை. அவற்றை அணிவதெல்லாம் வெறும் பெருமைக்காகத்தான்.
- தாரகேஸ்வரி சின்கா
மன நிறைவுக்கு ஒரு வழி. இப்பொழுது உம்மிடம் இருப்பவை எல்லாவற்றையும் நீர் இழந்து விட்டதாக நினைத்துக் கொள்ளும். அவை மீண்டும் கிடைத்து விட்டதாக நினைத்துப் பாரும். உமக்கு உண்மையாகவே மகிழ்ச்சி ஏற்படும்.
- லியோனாட் எம். லியோனாட்
என்னைக் கவி அரங்க நிகழ்ச்சிகளுக்கோ, இலக்கியக் கூட்டங்களுக்கோ, இசை நிகழ்ச்சிகளுக்கோ அல்லது திரையுலக விழாக்களுக்கோ தலைமை வகிக்கவோ, துவக்கி வைக்கவோ அழைக்கும் போது எனக்குள்ளாகவேச் சிரித்துக் கொள்வேன். பணத்துக்குத் துதி பாடும் மக்களின் அறியாமையையும் முகஸ்துதியையும் எண்ணிப் பார்ப்பேன். உருதுக் கவிதைகளும், இசையும் எனக்கு உயிர். இதைப் பயன்படுத்திக் கொண்டு இதைப் போன்ற நிகழ்ச்சிகளுக்கு என்னை அழைக்கிறார்கள்.
- ஹாஜி மஸ்தான் (கடத்தல்காரர்)
கடவுள் ஒருவனைப் பணக்காரனாகவோ, ஏழையாகவோப் படைக்கவில்லை. எல்லோரையும் ஒரே கோலத்தில்தான் கடவுள் படைக்கிறான். மனிதன் பணக்காரனாவதும் ஏழையாவதும் புத்திசாலித்தனத்தையோ, திறமையையோப் பொறுத்தது. சிலர் அதிர்ஷ்டம் என்றும் அதைச் சொல்லுவார்கள்.
- நடிகை செளகார் ஜானகி
சமையல் ஒரு கலை. நான் மிகக்குறுகிய காலத்தில் சமையல் செய்யத் தெரிந்து கொண்டேன். மற்றவர்கள் சமைத்த சாப்பாட்டைவிட நானே சமைக்கும் சாப்பாடு எனக்கு மிகவும் பிடிக்கும்.
- பக்தவத்சலம்
எனக்கு மிகவும் பிடித்தமான பொருள் புத்தகம். புத்தகத்திற்காகப் பணம் செலவழிப்பதில் நான் ஊதாரி என்ற பட்டத்தையும் பெறத் தயார்.
- நேரு
நான் உயிர் வாழ்வதற்காகச் சாப்பிடுகிறேன். மற்றவர்கள் சாப்பிடுவதற்காக உயிர் வாழ்கிறார்கள்.
- சாக்ரடிஸ்
கடவுளின் படைப்பில், முட்டை ஒன்றுதான் கலப்படம் செய்ய முடியாத ஒரு உணவு. அதற்கு அத்தகைய மூடி ஒன்று அமைந்திருக்கிறது.
- கிருஷ்ணப்பா
எழுத்தாளர் உலகில் நான் யாரையும் விரோதித்துக் கொள்வதில்லை. என்னை யாராவது விரோதி என்று எண்ணிக் கொண்டு அவஸ்தைப்பட்டால் அதற்கு நான் என்ன செய்வது?
- கல்கி
தொகுப்பு:- பா. காருண்யா, மதுரை.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.