நன்மை தீமையினின்று பிறவாவிடினும் அது தீமையை எதிர்ப்பதிலேயே அடையக்கூடிய அபிவிருத்தி அனைத்தையும் அடையும்.
செல்வர், வறிஞர் காரியத்தில் சிரத்தைகாட்டும் பொழுது, அது தர்மம் எனப்படும். வறிஞர், செல்வர் காரியத்தில் சிரத்தை காட்டும் பொழுது, அது ஒழுங்கீனம் எனப்படும்.
அநேக ஜனங்கள் நன்மை செய்வதை விட்டுத் தீமை செய்வதன் காரணம், கடவுள் தண்டித்தாலும் தண்டிக்கட்டும், சாத்தான் தண்டனையை மட்டும் தாங்க முடியாதென்று கருதுவதே என்பதற்குச் சந்தேகமில்லை.
ஒளி நிறைந்த இடத்தில் நிழல் இருண்டிருக்கும்.
- கதே
தந்திரமும் ஏமாற்றமும் அறநெறி நிற்கப் போதுமான அறிவில்லாத மூடர் செயல்.
- பிராங்க்லின்
பாத்திரம் நிறைந்திருப்பின் வெளியே ஊற்றாமல் உள்ளே ஊற்ற முடியாது.
- அர்னால்ட் பென்னெட்
அதைரியப்படாதே. ஒன்று தான் அச்சம் அளிப்பது: பாபமே அது.
- ஸெயிண்ட் கிறிஸாஸ்டம்
தீமை செய்வதினும் தீமை பெறுதலே நலம்.
- ஸிஸரோ
ரோஜா முள்ளின்றி மலர்வதில்லை, உண்மையே. ஆனால் மலர் இறக்க முள் இருக்கலாகாதன்றோ?
- ரிக்டர்
அநேக சந்தர்ப்பங்களில் நாம் தீமை யென்று கூறுவது, தவறியோ அல்லது மிதமிஞ்சியோ ஏற்பட்ட நன்மையாகும். மனோதைரியம் மிதமிஞ்சினால் மடமையாகும். பட்சம் மிதமிஞ்சினால் பலவீனமாகும். சிக்கனம் மிதமிஞ்சினால் லோபமாகும்.
- ஆவ்பரி
மனிதர் தற்சமய நிலைமையில் காணும் தீமைகளுக்காக வருந்தும்பொழுது, வேண்டுமென்று விரும்பும் நிலையில் ஏற்படக்கூடிய தீமைகளைப்பற்றிச் சிறிதும் சிந்திப்பதில்லை.
- பிராங்க்லின்
பையில் துவாரமிருந்தால் அதில் பணத்தை நிரப்பிப் பலனில்லை.
- ஜார்ஜ் எலியட்
அழுகிய பழங்களில் அது கொள்ளுவோம் இது தள்ளுவோம் என்று தேர்வது எப்படி?
- ஷேக்ஸ்பியர்
தொகுப்பு:- பா. காருண்யா, மதுரை.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.