* இறைவனின் அருளால் எல்லா உயிர்களும் வாழ்கின்றன.
* எல்லா உயிர்களுக்கும், இயற்கையிலேயே அன்பும், அறிவும், ஆற்றலும், அருள் இரக்கங்களும் உண்டு. ஆனால், இவைகள் அறியாமை என்னும் மலத்தால் மூடப்பட்டுக் கிடக்கின்றன.
* அகத்திலும், புறத்திலும், கருணையை நிறைத்து உயிர்களிடத்தில் இன்ப நிலையை வளர்ப்பவனே இறைவன்.
* உயிர் என்னும் மனதிற்கும் மலம் என்னும் அறியாமைக்கும், அதீதப்பட்டு பெரும் பேரறிவும் பேராற்றலும், அன்பும் அருள் இரக்கமும் இயற்கையாகவே உடையவராய் இருப்பவர்தாம் கடவுள்.
* அன்பையும், இரக்கத்தையும் அடிப்படையாகக் கொண்டு வாழ்க்கையை நடத்துபவனுக்கு, எல்லாம் வல்ல பரம் பொருள் அருள் ஜோதி ஆண்டவர் - தமது இன்னருளை மிக மிக வழங்குவார்.
* ஒவ்வோர் உயிரும் தன் அறிவின் பயனாக அன்பைக் காட்டி, அந்த அன்பின் பயனாக அருளிரக்கம் கொண்டு, ஏனைய உயிர்களின் நன்மைக்காக உள்ளம் கசிந்து, உயிர்களின் துன்பத்தைக் கண்டபோதோ, கேட்டபோதோ உள்ளம் குழையும் இயல்பே அருளியல்பு ஆகும்.
* ஆண்டவன் எல்லா உயிர்களையும் ஒரே நோக்கமாக, சம பாவனையாகப் பார்க்கும் இயல்புடையவர். ஆதலால் மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரும் அருள்பெற வேண்டுமானால், அவர்களுக்குச் சமத்துவ சிந்தை, சமரசக் கோட்பாடு, பரந்த நோக்கம் இன்றியமையாதவை.
* ஆண்டவனின் திருவருளைப் பெற வேண்டுமானால், சாதி, மதம், சமயம், வருணம், நாடு, மொழி, காலம், பழக்க வழக்கங்கள், மூடநம்பிக்கைகள் இவை போன்ற தடைகளை அறவே ஒழித்தல் வேண்டும்.
* தமது குடும்பச் செலவைக் கூடிய மட்டும் சிக்கனம் செய்து, ஏழைகளின் பசியை நீக்க வேண்டும்.
* நாள்தோறும் ஆண்டவனை வணங்கி வாழ்த்துதல் வேண்டும். இல்லையேல், உலகத்தின் உயிர்களிடத்தில் அன்பும், அருளிரக்கமும் ஒரு சிறிதேனும் ஏற்படாது.
* உயிர்களிடம் நாம் காட்டும் அன்பும், உணர்ச்சியும், அருள் இரக்கங்களும் இறைவனைப் போல் பயன் கருதாததாய் இருத்தல் வேண்டும்.
* அறிவும் உணர்ச்சியும் அன்பும் அருள் இரக்கங்களும், மக்களைத் தெய்வ இயல்பு உள்ளவர்களாக ஆக்குவிக்கும், பேராற்றல்களாகும்.
* தெய்வ வழிபாடு மிக மிக அவசியம் என்று உணர்தல் வேண்டும். இல்லாவிட்டால் சமரசம், சன்மார்க்கம், எல்லா உயிர்களும் ஒன்று என்று பேசும் உரையாடல் யாவும் வெறும் பேச்சன்றி ஒரு செல்லாக் காசுக்கும் உதவா.
* வஞ்சத்தோடு கூடிய துன்ப வாழ்க்கையை ஒழித்து, அருள் நெறியில் ஒன்றாக இன்பமாக வாழ்வதை விரும்பி, உலகம் முழுவதும் ஒன்றாகிக் களிப்படைந்து வாழும் நிலை என்றுதான் வருமோ?
* மெதுவாகப் பேசு: அது உன் ரகசியங்களைப் பாதுகாக்கும். நல்ல எண்ணத்தோடு இரு; அது உன் நடத்தையைப் பாதுகாக்கும். உண்மையே சொல்; அது உன் வார்த்தைகளைப் பாதுகாக்கும். கலந்து யோசனை செய்; அது உன் சிந்தனையை வளமாக்கும். சிறப்பு தரும்.
* புண்ணியப் பயனால் பெற்ற இந்த மனித உடலை கூடிய வரையில் கவனமாக பண்புடன் காக்க வேண்டும்.
* ஜீவகாருண்யம் விளங்கும்போது அறிவும் அன்பும் உடனாக நின்று விளங்கும். ஜீவகாருண்யம் மறையும்போது அறிவும் அன்பும் உடனாக மறையும்.