உலகின் பழைமை வாய்ந்த சமயங்களில் சரதுசம் (Zoroastrianism, சொராஷ்ட்ரியம்) ஒன்றாகும். சிறுபான்மையாக இது மசுதயசுனா என்றும் மயியானியம்என்றும், சரத்துசரின் நெறி என்றும் அழைக்கப்படுவதுண்டு. ஈரானிய இறைதூதர் சொராட்டிரரின் போதனைகளை அடிப்படையாகக் கொண்டு, பேரறிவு வடிவமான அகுரா மஸ்தா எனும் இறைவனைப் போற்றுவதாக இந்தச் சமயம் எழுச்சி பெற்றது.
கி.மு. 5000 முதல் கி.மு. 2000 ஆண்டுகளுக்கு இடையில் சொராஷ்டிரியம் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் கிடைக்க ஆரம்பிக்கின்றன. கி.பி. 633 முதல் கி.பி. 654 வரை இடம் பெற்ற இஸ்லாமியப் படையெடுப்புக்கு முன்பு, சொராட்டிரியமே பாரசீகப் பேரரசுகளின் முதன்மை நெறியாக விளங்கியிருக்கிறது. இன்றைக்கும் பெரும்பாலான சொராட்டிரிகள் இந்தியாவிலும் ஈரானிலும் வாழ்ந்து வருகின்றனர்.
சொராட்டிரர் (ஜொராஸ்ட்ரர்) சிந்தனைகள் இங்கு தொகுத்து வழங்கப்பட்டிருக்கின்றன.
1. கடவுளை நம்பு, நல்லது செய்.,
2. இயற்கை முழுவதுமே கடவுள் இருக்கிறார் என்பதற்கு அத்தாட்சி.
3. இருட்டில் நடக்கப் போகிறாயா, கடவுளின் கையைப் பிடித்துக் கொள். அது வெளிச்சத்தை விடவும் சிறந்தது. தெரிந்த பாதையைக் காட்டிலும் மிகவும் பாதுகாப்பானது.
4. குழப்பமான வேளைகளில் எல்லாம் மனித குலத்தைத் தெய்வநெறிப்படுத்த அஹுர்மஸ்தா (கடவுள்) தனது சிறப்புத் தூதர்களை அனுப்புகிறார்.
5. சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் ஆகியவை எல்லாமே நமக்கு வெளிச்சம் தருகின்றன. ஆனால், உலகத்திற்கு ஒளி தருவதற்காக அவற்றுக்கு வெளிச்சம் தருபவர் கடவுள்.
6. மரத்தை வெட்டாதே. பசுஞ்சோலையை அழிக்காதே. பாழ்நிலத்தையும் பாலைவனத்தையும் சோலையாக்கு.
7. தெய்வத்திடம் அன்பு என்ற வெட்டுப்பாறையில் சிறந்தவைகள்தான் பலியிடப்படும். நோயுற்றவையோ நோஞ்சான்களோ அல்ல. நீ உண்மையுள்ள இறையன்பனா? அப்படியானால் பலியிடப்படுவதிலிருந்து ஓடிவிடப் பார்க்காதே. பலியிடத் தகாததை வெறும் சடலம் (பிணம்) என்று சொல்வார்கள்.
8. ஆயிரம் தொழுகை இடங்கள் நிர்மாணிப்பது ஓர் ஆன்மாவை சந்தோஷப்படுத்துவதை விடச் சிறந்தது அல்ல. சுதந்திரச் சிந்தனை உள்ள ஒரே ஒருவனை, அன்பைப் பொழிந்து உனக்கு அடிமையாக்கிக் கொள்ள முடிந்தால், ஆயிரம் அடிமைகளை விடுவிப்பதை விட அது சிறந்தது.
9. உண்மையிலேயே பிரார்த்தனைக்கு அபாரசக்தி இருக்கிறது. அது கடவுள் பிரவேசிப்பதற்கு உள்ளக் கோவிலின் கதவுகளைத் திறக்கிறது.
10. வாசனைப் பொருள்களை விற்கும் கடைவீதிக்கு நீ சென்று வந்தால், உன் உடை நறுமணம் வீசும். கரிக்கடைக்குப் போய்வந்தால் உன் உடையில் கரி ஒட்டும். (இது போன்றுதான் சான்றோர் தொடர்பும், கொடியவர் தொடர்பும் அமைகிறது.)
11. உனக்குள் குடிகொண்டிருக்கும் எல்லையற்ற ஆற்றலை நீ உணர்ந்து கொள்.
12. இளமையில் நல்லவிதமாக வாழ்பவன், முதுமையில் இளமைக்காலம் பற்றி நினைத்துப் பார்க்கும்போது இனிய நினைவுகள் உள்ளத்தில் எழும்.
13. கந்தல் உடுத்திப் பணிவாக இருப்பது, தங்கத்தால் இழைத்துக் கொண்டு பெருமையடிப்பதை விட அழகாக இருக்கிறது.
14. தொழுகையில் உயரும் கைகளையும் விட உழைக்கும் கரங்களுக்கு மிகவும் மதிப்பு அதிகம். சுறுசுறுப்பாக உழுது பாடுபடுகிறவனுக்கே நல்ல அறுவடை கிடைக்கும்.
15. சுபிட்சம், சலியாத உழைப்பின் அடியொற்றிப் பின் தொடரும்.
16. தூய்மையும் எளிமையும் கொண்ட வாழ்க்கைதான் உண்மையிலேயே மகத்தானது.
17. மற்றவர்களின் மகிழ்ச்சிக்காகப் பாடுபடுபவன்தான் எல்லோரையும் விட மகிழ்ச்சியானவன்.
18. சத்தியத்திற்காகப் போராடும் எல்லாச் சக்திகளுடனும் இசைந்து போய் இணைந்துகொள்.
19. சுயமரியாதை என்பது விலை மதிப்பற்ற பொக்கிஷம்.
20. என்னை ஏழ்மையிலிருந்து விடுவிக்க வற்றாத சக்தி எனக்குள் ஊற்றெடுக்கும்போது, உதவி தேடி நான் ஏன் ஊராரிடம் போக வேண்டும்?
21. தெய்விக வாழ்க்கை, ஆன்மிக விவேகம், ஆத்மப் பிரகாசம், சத்தியம், மெய்ஞ்ஞானம் ஆகியவற்றுக்கு அதிபதியாகக் கடவுள் விளங்குகிறார். கடவுளின் உடல் பேரொளி, ஆன்மா பேருண்மை.
22. கடவுளின் சர்வ வியாபகத்தில், கடவுளின் நல்ல தன்மையில் அசைக்க முடியாத நம்பிக்கைக் கொண்டிரு. இறைவனை நினைப்பதும் அவரது திருநாமத்தை ஜபம் செய்வதும் தகுதி வாய்ந்த செயல்கள். இறைவனின் பொருள்சேர் புகழைப் பாடுவதும் போற்றுவதும் தகுதி வாய்ந்த செயல்கள்.
23. கடவுளின் படைப்பில் நாம் எல்லோரும் சிறுதுளி; தமதுபடைப்பிற்கு எது நல்லது என்பது அவருக்குத் தெரியும்.
24. இறைவன் உன் எண்ணங்களைத் தூண்டி ஒளிபெறச் செய்யட்டும். நீ பேசும் பேச்சு இறைவனின் திருவுள்ளப்படி அமையட்டும். நீ செய்யும் செயல்களெல்லாம் இறைவன் காட்டிய வழியில் விளங்கட்டும்.
25. ஆண்டவன் இட்ட கட்டளைகளை அனுசரித்து நடப்பவன், உலகில் எந்தப் பெரிய சக்திக்கும் பயப்பட வேண்டியதில்லை.
26. கடவுள் தன்னைத் தொலைவாக விலக்கி ஒதுக்கி வைத்துக்கொண்டு கம்பீரம் காட்டுவதில் பெருமை கொள்கிறவர் அல்ல.
27. பலவீனர்கள், சோர்ந்து போனவர்கள், அநீதிக்குள்ளானவர்கள் ஆகியோருக்கு இறைவா, நீதான் என்றும் புகலிடம்.
28. பிள்ளைகள் பெற்றோர்களிடம் நன்றி உள்ளவர்களாக இருக்கக் கடமைப்பட்டிருக்கிறார்கள். எல்லோருக்கும் தந்தையான கடவுளிடமோ மனித குலம் முழுவதும் இது போல் நூறு மடங்கு நன்றிக் கடன்பட்டிருக்கிறது.
29. கடவுளைக் காண சுவர்க்கம் போகவும் வேண்டாம், உலகம் முழுதும் சுற்றவும் வேண்டாம். தூய்மையான மனதுடன் இருப்பவன் தன் இதயத்திலேயேக் கடவுளைக் காணலாம்.
30. திருநாள் விருந்தின் போதும் திருவிழா நாட்களிலும் மட்டுமல்லாமல், வருடம் முழுவதுமேக் கடவுளுடன் அருள் தோழமைப் பூண்டு வாழ்வாயாக.
31. உன் கருணையை நாடி ஏங்கும் பாவிக்கும், இறைவா! நீ கருணை மழை பொழிகிறாய்.
32. விலை உயர்ந்த பலியையோ பரிசையோ இறைவன் விரும்புவதில்லை. தன் பிழையை உணர்ந்து வருந்தும் இதயமேக் கடவுளுக்கு விருப்பமானது. தார்மிகச் சிந்தனை, தார்மிகச் சொல், தார்மிகச் செயல் ஆகியவற்றையே இறைவன் நம்மிடம் பரிசாக எதிர்பார்க்கிறார்.