யோகி வேமனா என அனைவராலும் அறியப்படும் வேமனா என்பவர் தெலுங்கு கவிஞரும், மெய்யியலாளரும் ஆவார். இவரது பாடல்கள் இயல்பான, எளிமையான தெலுங்கில் அறிவு, நேர்மை உள்ளிட்ட குணங்களைப் பற்றிச் சொல்லும் வகையில் எழுதப்பட்டிருக்கும்.
இவருடைய சில கருத்துகளை இங்கேப் பார்க்கலாம்;
1. கற்றுத் தெளியாதவர்கள், நல்லவர்களுடன் பழக்கமில்லாதவர்கள், நல்ல பண்புகளைப் பின்பற்றாதவர்கள், சிந்தனைக்கு வேலை கொடுக்காதவர்கள், சிற்றின்பப் பிரியர்கள், சீர்திருத்தம் அற்றவர்கள் என்று இவர்கள் அனைவருமே மூடருக்குச் சமமானவர்கள்.
2. கடன் இல்லாதவன் மிகவும் பலம் பெற்றவனாவான். சிற்றின்பத்தில் பிரியமில்லாதவன் ஞானிகளில் முதல்வனாவான்.
3. தீயில் விழுந்த தேளை நாம் காப்பாற்ற முற்பட்டால் அந்தத் தேள் நம்மையேக் கொட்டிவிடும். அதேபோல், தீயவர்களுக்கு நாம் உதவி செய்ய முற்பட்டால், அது நமக்கேத் தீமையாக வந்து முடியும்.
4. தன்னைத் தான் அறியும் ஆத்ம ஞானம் பற்றி வெறுமனே சொல்லிக் கொண்டிருக்கலாமேத் தவிர, உண்மையில் அனைவரும் 'தன்னை' உணர்கிறார்களோ என்ன? இது எப்படியிருக்கிறது என்றால், கீழேக் கிடக்கும் வாளை எடுத்துத் தூக்கிப் பிடித்துக் கொண்டு, ‘நான் மாவீரன்! சூரன்!'' என்றெல்லாம் தன்னைத்தானே சொல்லிக் கொள்வதற்கு ஒப்பாகும்.
5. நாம் நல்லவர்களுக்கு ஒரு சில சிறிய உதவியேச் செய்திருந்த போதிலும், அது சிறந்து நலமுடன் இருக்கும். ஆனால், நாம் பெரிய உதவிகளையேக் குணக்கேடர்களுக்குச் செய்திருந்தாலும் கூட, அது வெகு சீக்கிரத்தில் அவர்களால் அழிக்கப்பட்டிருக்கும்.
6. ஒருவன் எப்படிப்பட்ட பலமிக்க வீரனாக இருந்த போதிலும், யமனின் கணக்கிலிருந்து தப்பவே முடியாது.
7. எலியின் தோலைக் கொண்டு வந்து எத்தனை முறை துவைத்துச் சுத்தப்படுத்த முயன்றாலும் அது வெளுக்குமா? அதைப் போன்றதே நாம் தீயவர்களைத் திருத்த முயல்வதும்.
8. வாழ்க்கையின் ஆரம்பத்தையும் முடிவையும் தன்னால் கட்டுப்படுத்த முடியாத மனிதன், இடையிலேத் தொங்கி நிற்கும் இந்தச் சில ஆண்டுகளுக்கு மட்டும், "நான்தான் காரணகர்த்தா'' என்று கத்தித் திரிவதைப் பார்த்தால் நமக்கு சிரிப்புதான் வருகிறது.
9. நேர்மையின் நிழலில் ஒதுங்க மறுக்கும் நீதியற்ற மனிதர்களிடம் வறுமையில் வாடும் தரித்திரர்கள் சென்று தொண்டு புரிகிறார்கள். இது குரங்கை அன்புடன் அழைத்து வந்து, அதற்குப் பட்டமும் பட்டாடையும் கட்டி, கருங்குரங்குகள் யாவும் ஒன்று சேர்ந்து பணி செய்வது போல் இருக்கிறது.
10. கல்வியில்லாதவர்கள் என்னதான் கல்விமான்களுடன் இருந்து பயின்று வந்தாலும், ஒருபோதும் அவர்கள் கற்றவர்கள் ஆகமாட்டார்கள். கல்விமான்களுடைய அறிவை, ஆற்றலை, பண்பை, பழக்கத்தை அவர்கள் பெறவும் மாட்டார்கள். இது குளத்தில் நீந்தி விளையாடும் அன்னப்பறவைகளுடன், இடைவிடாமல் இருந்து கொண்டிருக்கும் கொக்கின் நிலை போன்றது.
11. ஒருவன் ஆட்டின் மடியைப் பிடித்துக் கொண்டு அதன் மடியில் வாயை வைத்துப் பால் குடித்தாலும் அவன் பசியின் கொடுமை தீராது. அதைப் போன்றே லோபி ஒருவனிடம் உதவிக்குச் சென்றவன் எந்தப் பயனையும் அடையமாட்டான்.