இல்வாழ்க்கை குறித்த பன்னாட்டுப் பழமொழிகள்

அவசியமான பொருள்கள் நிறைந்த ஒரு வீடு, நன்றாக உழுத ஒரு சிறு நிலம், நல்ல சிந்தனையுள்ள ஒரு மனைவி மூன்றுமே இன்ப வாழ்வளிக்கும்.
- இங்கிலாந்து

அழகான மனைவியும் அருமையான பழைய மதுவும் இருந்தால், நண்பர்கள் பலர் வருவார்கள்.
- பல்கேரியா

இல்வாழ்வு முற்றுகைக்கு உட்பட்ட கோட்டை போன்றது; வெளியேயிருப்பவர்கள் உள்ளே செல்ல விரும்புகின்றனர், உள்ளேயிருப்பவர்கள் வெளியேற விரும்புகின்றனர்.
- அரேபியா

உன் சொந்த வீட்டில் சுவர்கள் கூட உனக்கு உதவியாயிருக்கும்.
- உருசியா

என்னை என் குடும்பத்திலிருந்து காப்பாற்றுங்கள்; என் எதிரிகளை நானேப் பார்த்துக் கொள்கிறேன்.
- செர்பியா

ஏழு திரைகளைத் தாண்டியும் வேலைக்காரியின் குறையைக் கண்டு விடுவாய்; எசமானி அம்மாளின் குறை ஒரே திரையில் மறைந்து விடும்.
- இந்தியா

ஒரே வீட்டில் இரண்டு சக்களத்திகள் இருப்பதை விட இரண்டு பெண் புலிகள் இருப்பது நலம்.
- பாரசீகம்

கடவுள் நமக்கு உறவினரைக் கொடுத்திருக்கிறார்; ஆனால் அன்பர்களை மட்டும் நாமே தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
- இங்கிலாந்து

கட்டிலிலே கணவனும் மனைவியும், வெளியிலே அவர்கள் விருந்தினர்கள்.
- சீனா

கணவன் குடித்தால் பாதி வீடு எரியும், மனைவியும் குடித்தால் முழு வீடும் எரியும்.
- உருசியா

கணவன் மனைவி சண்டை ஓர் இரவோடு சரி.
- சீனா

கணவன் கரண்டியால் சேகரித்து வருவதை, நீ மண் வெட்டியால் வெளியே வாரி வாரி இறைக்க வேண்டாம்.
- இங்கிலாந்து

சேவல் தன் குப்பை மேட்டிலிருந்தேக் கூவும்.
- பிரான்ஸ்

தரையை வைத்து வீடு கட்டப் பெறுவதில்லை, ஒரு பெண்ணை வைத்தேக் கட்டப் பெறுகின்றது.
- செர்பியா

தன் குடும்பத்தை விட்டு ஓடுபவனுக்கு முடிவான இடம் இல்லை.
- லத்தீன்

தன் வீட்டில் அமைதியில்லாதவன் பூலோக நரகத்தில் இருக்கிறான்.
- துருக்கி

தன் வீட்டுக்கு வெளியிலே இன்பத்தை நாடுவோன், தனது நிழலையேத் துரத்திக் கொண்டு திரிகிறான்.
- உருசியா

திருமணப் பெண்ணுக்கு இசையும் அழகும்; விவாகமான பின் பசியும் தாகமும்.
- எஸ்டோனியா

நம் சொந்த வீடே மற்ற வீடுகளை விட மேலானது.
- லத்தீன்

நீ வெளியில் எங்கேச் சுற்றினாலும், இன்பமயமான உன் வீட்டுக்கு வந்துவிடு.
- பல்கேரியா

பழைய வீட்டைச் சீர்ப்படுத்து, பழைய மனைவியைப் போற்று.
- இந்தியா

பெண் இல்லாத வீடு வாளியில்லாத கிணறு.
- பல்கேரியா

பெண் பிள்ளை இரண்டு வார்த்தைகள் சொன்னால், ஒன்றை எடுத்துக் கொண்டு, மற்றதை விட்டுவிடு.
- சுவீடன்

வெளியேக் கிடைக்கும் வெந்த இறைச்சியைக் காட்டினும், வீட்டிலேயிருக்கும் உலர்ந்த ரொட்டி மேல்.
- இங்கிலாந்து

வீடில்லாத மனிதன் கூடில்லாத பறவை.
- பிரான்ஸ்

வீட்டில் கடிகாரமே எசமானராயிருக்க வேண்டும்.
- சுவீடன்

வீட்டில் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என்பதே எல்லா ஆசைகளின் முடிவான நோக்கம்.
- இங்கிலாந்து

வீட்டுக்குத் தேவையானவை நான்கு: தானியம், சேவல், பூனை, மனைவி.
- இத்தாலி

வீட்டுத் தலைவன் மீதுதான் வீட்டிலுள்ள எல்லோருடைய குப்பைகளும் கொட்டப்படும்.
- ஆப்பிரிக்கா

வீட்டை விட்டு வெகு தூரத்திலிருப்பவன் அபாயத்திற்கு அருகிலிருக்கிறான்.
- ஹாலந்து
தொகுப்பு: உ. தாமரைச்செல்வி.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.