1. ஒருவன் தான் செய்ய வேண்டிய கடமையை நிறைவேற்றினால், அவனுக்குப் பெரியோர்களின் தரிசனம் கிடைக்கும்.
2. உலகப் பற்றின்மையைக் கடைப்பிடித்து வாழ்பவன் புனிதனாகிறான். அத்தகையவனை குரு தானாகவே வந்து ஆட்கொள்கிறார். புனிதனாக இருப்பவனுக்குப் புனிதர் கிடைப்பார். நீங்கள் புனிதராக இருந்தால் உங்களுக்குப் பெரியோர்கள் தரிசனம் கொடுப்பார்கள்.
3. அறிவு சொல்லளவில் இருக்கும் வரையில் அமைதி ஏற்படாது. அது செயலில் இடம் பெற்றால்தான் அமைதி கிடைக்கும்.
4. ஞானத்தை வாழ்க்கையில் பயன்படுத்தி வாழ்பவனே உறுதி பெறுகிறான். அவனுக்கு ஒரு ஸ்திர நிலைமை ஏற்படுகிறது.
5. குருவின் அறிவுரையின்படி அறிவை வாழ்க்கையில் கடைப்பிடிப்பவன் மன உறுதி பெறுகிறான்.
6. விடாமுயற்சியுடன் ஆன்மிகச் சாதனைப் பழகுபவனுக்குக் கடவுள் அருள் புரிகிறார்.
7. மனிதன் முயற்சியில் சலிக்காமல் மனஉறுதி பெற்ற பிறகு, கடவுள் அவனிடம் கருணை காட்டுகிறார்.
8. உங்களிடம் இருக்கும் எல்லாவற்றையுமே பகவானுக்கு அர்ப்பணம் செய்யுங்கள். உங்கள் புலன்களைப் பக்தி ரசத்தில் கரைத்து விடுங்கள்.
9. கடவுளின் அருள் கிடைத்த பிறகு மனிதன் உலக ஆசைகளில் சிக்கிக் கொண்டால், அவன் இறைவனின் அருளை இழந்து விடுவான். அதனால்தான், "தீய வாசனைகளைக் களைந்து விட வேண்டும்" என்று பெரியோர்கள் கூறியிருக்கிறார்கள்.
10. மனிதன் இறைவனுடைய அருளைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாவிட்டால் தீய ஆசைகள் ஏற்படும். அவை அவனைப் பற்றிக் கொள்ளும்.
11. துன்பங்களைத் தான் அனுபவித்துக் கொண்டு, மற்றவர்களுக்குச் சுகம் அளிப்பவனே தர்மத்தைப் பின்பற்றுபவன் ஆவான்.
12. இறைவனின் கருணையை நல்ல வழியில் உபயோகிப்பவன் தேவனாவான். இறைவனின் கருணையைத் தீய வழியில் உபயோகிப்பவன் அசுரனாவான்.
13. இறைவன் அளித்திருக்கும் நேரம், செல்வம், ஆற்றல் போன்றவற்றை நல்ல வழியில் உபயோகிப்பவன் தேவனாவான். இவற்றைக் கெட்ட வழியில் உபயோகிப்பவன் அசுரனாவான்.
14. கடவுள் மனிதனுக்கு அருள் புரிகிறார். அனால் அறிவிலியான மனிதன் அதைச் கெட்ட வழியில் பயன்படுத்துகிறான். அதனால் அவன் தீயவன் ஆகிறான்.
15. புலனடக்கத்துடனும், நல்லொழுக்கத்துடனும் இறைவனிடம் சரணடைய வேண்டும்.
16. ஒருவனுடைய மனதில் காம வாசனை இருக்குமானால் அவனுக்கு எங்கும் காமமே தென்படும்.
17. காம விருப்பம் நம் புத்தியில் இருந்தாலும் இறைவனின் தரிசனம் கிடைக்காது.
மேற்காணும் பாகவதத்தில் காணப்படும் அறிவுரைகளைக் கடைப்பிடித்து வாழ்பவர்களுக்கு வாழ்க்கையில் நற்பலன்கள் கிடைக்கும்.