* சாதியென்றும் சமயமென்றும் சொல்ல வேண்டாம்;
சாத்திரத்தை ஒருநாளும் நம்ப வேண்டாம்
* விதியென்றும் வினையென்றும் சொல்ல வேண்டாம்;
வீணாகக் காலத்தைக் கழிக்க வேண்டாம்
* நாளென்றும் கோளென்றும் சொல்ல வேண்டாம்;
நல்வாய்ப்பை அதனாலே இழக்க வேண்டாம்
* தமிழினத்தின் தன்மானம் காக்க வந்தோன்;
தலைவனாம் பெரியாரை வாழ்த்தாய் நெஞ்சே!
* கோயிலென்றும் குளமென்றும் போக வேண்டாம்;
குழவிக்கல்லை லிங்கமென்று சொல்ல வேண்டாம்
* குடங்குடமாய்ப் பாலதனைக் கொட்ட வேண்டாம்;
கொட்டியபின் அதை நக்கிக் குடிக்க வேண்டாம்
* அர்ச்சனைக்குத் தட்டேந்தி நிற்க வேண்டாம்;
அதில் வேறு தட்சணைகள் வைக்க வேண்டாம்
* அறிவுக்கு வித்திட்ட அஞ்சா நெஞ்சன்;
அருந்தலைவன் பெரியாரை வாழ்த்தாய் நெஞ்சே!
* பஞ்சாங்கம் பார்த்தெதையும் செய்ய வேண்டாம்;
பார்ப்பனனை அய்யரென்று சொல்ல வேண்டாம்
* பாவமென்றும் புண்ணியமென்றும் பார்க்க வேண்டாம்;
பரலோகம் செல்ல வழி தேட வேண்டாம்
* ஏழு ஜென்மம் உண்டென்று எண்ண வேண்டாம்;
எண்ணியவர் யாருமில்லை நம்ப வேண்டாம்
* எத்தர்களின் புரட்டையெல்லாம் எடுத்துரைத்தோன்;
எம் தந்தை பெரியாரை வாழ்த்தாய் நெஞ்சே!
* திதியென்றும் திவசமென்றும் கொடுக்க வேண்டாம்;
தின்பவர்கள் பிதுர்க்களென்று எண்ண வேண்டாம்
* கோமாதா குலமாதா ஆக வேண்டாம்;
கோமயத்தில் குணநலனைக் காண வேண்டாம்
* சாணியையும் பிள்ளையாராய்ச் செய்ய வேண்டாம்;
சரணமென்று விழுந்ததனை வணங்க வேண்டாம்
* முட்டாள் தனத்தையெல்லாம் முறியடித்தோன்;
மூதறிஞன் பெரியாரை வாழ்த்தாய் நெஞ்சே!
* மதமென்னும் வெறிபிடித்து அலைய வேண்டாம்;
மல்லுக்கு அதற்காக நிற்க வேண்டாம்
* சிந்திக்கும் முன்எதையும் செய்ய வேண்டாம்;
செய்தபின் சிந்தித்து வருந்த வேண்டாம்
* பதினெட்டுப் புராணத்தைப் படிக்க வேண்டாம்;
படித்துவிட்டுப் பகுத்தறிவை இழக்க வேண்டாம்
* ‘எம்மதமும் சம்மதமே’ என்ற மேலோன்;
ஏறொத்த பெரியாரை வாழ்த்தாய் நெஞ்சே!