1. மணமக்கள் உயிர் நண்பர்கள். ஒருவருக்கொருவர் பழகும் முறையைப் போல் நடந்து கொள்ள வேண்டும். எதிலும் தான் கணவன் என்ற ஆணவம் மணமகன் கொள்ளக்கூடாது. மணமகளும் தான் கணவனுக்கு அடிமைப் பொருள், அடுப்பூதுவதற்கே வந்தவள் என்ற எண்ணமில்லாது பழகவேண்டும்.
2. மணமக்கள் பிள்ளை பெறுவதில் அவசரப்படக்கூடாது. திருமணம் நடந்து குறைந்தது மூன்று ஆண்டுகளுக்குப் பின்னாவது குழந்தை பெறுவதாயின் மிக நல்லதாகும்.
3. மணமக்கள் வாழ்க்கையில் மற்றவர்களுக்காக உதவும் மனப்பான்மையை உடையவராக இருக்கவேண்டும். நம்மால் நன்மை செய்ய இயலாவிட்டாலும், கேடாவது ஏற்படாத மாதிரி நடந்துகொள்ள வேண்டும். நல்வாழ்வும் நாணயமான வாழ்வும் பெறக் குழந்தைப்பேற்றைக் குறைத்துக் கொண்டு வாழ்க்கை வசதிகளை நல்ல வண்ணம் அமைத்துக் கொள்ள வேண்டும்.
4. மணமக்கள் தங்கள் வாழ்க்கையில் வரவுக்கேற்ற வகையில் செலவு செய்ய வேண்டும். கடன் வாங்கக் கூடாது. வரவு சிறிதாக இருப்பினும் அதிலும் ஒருகாசாவது மீதப்படுத்த வேண்டும். என்னைப் பொறுத்தவரையில் ஒழுக்கம் என்பது இதுதான் என்பேன். வரவுக்கு அதிகமாகச் செலவு செய்வது தவறு என்பேன்.
5. வாழ்க்கையில் தம்பதிகள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் சிக்கனமாக வாழவேண்டும்.
6. எந்தவிதமான சிரமம் வந்தாலும் மற்றவர்களிடமிருந்து உதவி பெறுவது என்ற எண்ணம் கொள்ளவே கூடாது. வெறுக்க வேண்டும். நாம் வாழவேண்டுமானால் மற்றவருக்கு உதவ வேண்டுமேயொழிய மற்றவர்களிடமிருந்து உதவியை எதிர்பார்க்கக் கூடாது.
7. கணவன் - மனைவி என்பது இல்லை. ஒருவருக்கொருவர் துணைவர்கள்; கூட்டாளிகளே என்பதுதான் உண்மை. இதில் ஒருவருக்கொருவர் அடிமை - எசமான் என்பது இல்லை. இருவரும் சம அந்தஸ்துள்ளவர்கள் ஆவார்கள்.
8. மணமகன் மணமகளைச் சிநேகிதராகவே கருதவேண்டும். அறிவை மழுங்க வைக்கும் கோயிலுக்குப் போவதும் உற்சவத்திற்குப் போவதும் கூடாது. வெளியேப் போக வேண்டும், உல்லாசமாக இருக்க வேண்டும் என்றால் கண்காட்சிகள், ஆலைத்தொழிற்சாலைகள், அணைக்கட்டுகள், அருங்காட்சியகங்கள் முதலிய இடங்களைச் சென்று பார்க்க வேண்டும்.
9. அறிவோடு சிக்கனமாக வாழவேண்டும். வரவிற்குமேல் செலவிட்டும் பிறர் கையை எதிர்ப்பார்ப்பதும், ஒழுக்கக்கேடான காரியங்களுக்கு இடங்கொடுப்பதுமான காரியங்கள் இன்றி வரவிற்குள் செலவிட்டுக் கவலையற்ற வாழ்வு வாழ வேண்டும்.
10. மணமக்கள் இருவரும் நண்பர்களாக நடந்து கொள்ள வேண்டும். வாழ்க்கை அன்புருவாக இருக்க வேண்டும். மணமக்கள் தங்களுக்காகவே என்று இராமல் மற்றவருக்காகவே வாழ்கின்றோம் என்று எண்ண வேண்டும்.