ஆவிகள் இருப்பது உண்மையா?

தமிழறிஞர் மறைமலையடிகள் 1918-ம் ஆண்டில் வெளியிட்ட " மரணத்திற்குப் பின் மனிதர் நிலை" என்கிற நூலில் "மரணம் என்கிற வார்த்தையைக் கேட்டவுடன் திடுக்கிடுவோர் மரணத்திற்குப் பின் ஆத்மாவிற்கு உண்டாகும் சக்தியையும், இன்பத்தையும் அறிவார்களானால், மரணம் அடைந்த பிறகும் தம் ஆத்மாவானது தமக்கு உற்றாராயுள்ளவர்களோடு உறவாடி மகிழக் கூடும் என்றும் , அவர்களுக்குப் பல வகையான உதவிகளைச் செய்யக் கூடும் என்றும் அறிந்து மரணத்திற்குச் சிறிதும் அஞ்சாமல் வாழ்ந்து பார் என்று ஒரு கருத்தைக் கூறுகிறார். ஆக, இறந்தவர் ஆன்மா, தமது உற்றார், உறவினர்களுக்கு உதவக் கூடும் என்பது அவர் நம்பிக்கை. இது உண்மை என்றால் தமிழறிஞர் மறைமலையடிகள் இறன்து இவ்வளவு காலம் ஆன பின்பு அவர் ஆவியாக வந்து உற்றார், உறவினர்களுக்குச் செய்த நன்மை என்ன?. ஒன்றுமில்லையே...? அதை விடுங்கள், அவர் மிகவும் நேசித்த தமிழ் மொழிக்கு அவர் ஆவி செய்த நன்மை என்ன? இவர் கருத்துப்படி இறந்து போன ஒவ்வொருவர் ஆவியும் ஆவியாக வந்து உற்றார், உறவினர்களுக்குச் செய்த நன்மை என்ன? ஒவ்வொருவர் வீட்டிலும் யாராவது இறந்து போயிருப்பார்கள் அவர்கள் ஆவியாக வந்து யார், யாருக்கு என்ன உதவி செய்துள்ளது? நன்றாக சிந்தித்துப் பார்க்க வேண்டும். பாரதி, பாரதிதாசன், பாவாணர், அண்ணா போன்றவர்கள் ஆவி உற்றார், உறவினர்களுக்கு என்ன செய்தது? தமிழ் மொழிக்கு என்ன செய்துள்ளது?
தமிழறிஞர் மறைமலையடிகளாரின் கருத்து உண்மையா? சரியா? நீங்களே முடிவு சொல்லுங்கள்...
நன்றி: மஞ்சை வசந்தன் எழுதிய "ஆவிகள் உண்மையா? ஓர் ஆய்வு " நூல்
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.